நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர், பாய்கொல்லி பகுதியில் காட்டுயானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர், யானையின் இறப்பை உறுதிசெய்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், இறந்தது சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், அதன் உடலில் 20-க்கும் அதிகமான இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதையும் உறுதிசெய்தனர். யானையின் இறப்புக்கான காரணம் குறித்து அறிய அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை பணியாளர் ஒருவர், ``இந்தப் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வருவது வழக்கமானதுதான். தனியார் தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடக்கும் இந்த யானை நீண்ட தந்தங்களுடன் வலிமையான ஆண் யானையாக இருந்திருக்கிறது.

யானைகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ உடலில் காயம் ஏற்பட்டிருக்கிறதா என அறிய ஆய்வு செய்துவருகிறோம். உடற்கூறாய்வு முடிவுக்குப் பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்" என்றார்.