Published:Updated:

ஒற்றை யானையால் ஆறு பேர் பலி... அச்சத்தில் தேவாரம் கிராம மக்கள்! 

`இதுவரை ஆறு பேர் இந்த யானைக்குப் பலியாகியிருக்கிறார்கள். விளைபொருள்களை நாசம் செய்வதால், பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.’

Devaram
Devaram

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊர், தேவாரம். முந்திரி, கப்பக்கிழங்கு, மா, தென்னை, புளி ஆகியவற்றை பயிர்செய்வதே ஊர்க்காரர்களின் பிரதான தொழில். வளமான மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரம் என்பதால், வன விலங்குகளின் நடமாட்டத்துக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. குறிப்பாக, யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து, சாப்பிட்டுவிட்டு மலைக்குச் சென்றுவிடும்.

ஒற்றைக் காட்டுயானை காலடித்தடம்
ஒற்றைக் காட்டுயானை காலடித்தடம்

தேவாரம் பகுதி மக்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாகவே இருக்கும் பந்தம் என்றும் சொல்லலாம். தினமும் இரவில் தோட்டங்களுக்குள் உலாவரும் யானைக்கூட்டம், அதிகாலையில் மலைமீது ஏறிவிடும்.

மனிதர்களும் யானைகளை எதுவும் செய்ததாகப் புகார் வந்ததில்லை. அதேபோல, யானைகளும் மனிதர்களை எதுவும் செய்ததில்லை! இப்படி, யானைகளும் மனிதர்களும் இணக்கமாக வாழ்ந்துவந்த தேவாரத்தில் புகுந்த காட்டு யானை ஒன்றால், கடந்த சில ஆண்டுகளாகவே தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள் தேவாரம் கிராம மக்கள்!

மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடும் தேவாரம் மக்கள்
மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடும் தேவாரம் மக்கள்
விளைபொருள்களை நாசம் செய்வதால், பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தினந்தோறும் மூன்று தென்னை மரங்களை முறித்துவிடுகிறது.
விவசாய சங்க நிர்வாகி

ஆறு பேர் மரணம்!

தேவாரம் பகுதி தோட்டங்களுக்குள் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு இதுவரை, ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். அந்திசாயும் நேரம், மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள தங்களது தோட்டத்தில் அமர்ந்து இயற்கையை ரசித்துவிட்டு, அங்கேயே இரவு உணவைச் சமைத்து சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக வாழ்ந்த விவசாயிகள், தற்போது மாலை 6 மணிக்கு மேல் தோட்டத்தை விட்டு ஊருக்குள் வந்துவிடுகிறார்கள். மனிதர்களைக் கண்டாலே கொல்லத் துடிக்கும் ஒற்றைக் காட்டுயானையால் தங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று ஒவ்வொருவரும் அச்சம் கொண்டுள்ளனர். அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது மாவட்ட வனத்துறை!

தேவாரத்தில் ஓ.பி.எஸ்
தேவாரத்தில் ஓ.பி.எஸ்

பெண் யானை!

``தினமும் அந்த யானையை நான் பார்க்கிறேன். எனது தோட்டம் மலைக்கு மிக நெருக்கமாக இருப்பதால், மாலை 5 மணிக்கு அது, தோட்டத்தைக் கடந்து செல்லும். தேவாரம் அடிவாரத்திலிருந்து பொட்டிபுரம் புதூர் வரை தினமும் செல்லும். வழியில் உள்ள தோட்டங்களுக்குள் சென்று சாப்பிடும். அதிகாலை 4 மணிக்கு மீண்டும் என் தோட்டம் வழியாக மலைமீது ஏறிவிடும். மீண்டும் அடுத்த நாள் இதே போன்று செய்யும். கடந்த ஜூன் மாதம் பக்கத்துத் தோட்டத்துக்காரரை யானை கொன்றுவிட்டது. அது ஒரு பெண் யானை. நான் பிறந்து வளர்ந்தது இதே ஊரில்தான். கூட்டம் கூட்டமாக யானை இங்கே உலா வரும். ஆனால், மனிதர்களை கொன்றது இல்லை.

தேவாரத்தில் கும்கி யானைகள்
தேவாரத்தில் கும்கி யானைகள்

ஆனால், இந்த ஒற்றை யானை, மனிதர்களைக் கண்டாலே வெறிபிடித்ததுபோல மாறிவிடுகிறது. யானைக்கு பயந்து மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். இப்போது தோட்டத்திலேயே பெரிய கட்டடம் கட்டியிருக்கிறேன். அந்த யானையைப் பிடித்து வேறு இடத்துக்குக் கொண்டு சென்றால் போதும், நாங்கள் நிம்மதியாக இருப்போம்” என்றார் தேவாரம் பகுதி விவசாயி பழனி.

ராசிமலை, சாந்தம்பாறை, ராசாப்பாறை ஆகிய பகுதிகளில் புதிதாக முளைத்துள்ள தனியார் ரிசார்ட்டுகளில் மின்சார வேலி அமைத்திருப்பதாக தெரிகிறது. இதனால்தான் காட்டுயானையின் வலசைப் பாதை தடைபட்டு தேவாரப் பகுதியை அச்சுறுத்துகிறது.
தேவாரம் மக்கள்

கண்கட்டி வித்தை காட்டும் வனத்துறை!

”அந்த ஒற்றை யானையைக் 'கிறுக்குப் பிடித்த யானை' என்றுதான் அழைக்கிறோம். அந்த அளவுக்கு மனிதர்களைக் கண்டாலே கிறுக்குப் பிடித்ததுபோல, புத்திப் பேதலித்ததுபோல நடந்து கொள்ளும். ஜூன் மாதம் ஆனாலே எங்களுக்குப் பயம் வந்துவிடும். ஏனென்றால், ஜூன் மாதம் அதற்கு வெறி அதிகமாகும். சாப்பிடாமல்கூட மனிதர்களைத் தேடுவதுபோல இருக்கும்.

மக்களை மிரட்டிய குரோபர் யானை... கூண்டில் அடைத்த   கும்கிகள்!
 கும்கி யானைகள்
கும்கி யானைகள்

ஒரு நாள் தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பெட்ரோல் பங்குக்கு வந்துவிட்டது. இதுவரை ஆறு பேரைக் கொன்றிருக்கிறது. ஆறு பேரும் ஜூன் மாதம்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், 2017-ம் வருடம் அழகேசன் என்ற பள்ளிச் சிறுவன். 2018-ம் வருடம் சேகர் என்பவர். 2019-ம் வருடம் அய்யாவு என்ற முதியவர். இந்த மூன்று பேரின் இறப்பிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. மூவரும் இரவு 1 மணியில் இருந்து 2 மணிக்குள் யானையால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். அழகேசன் என்ற சிறுவன் பலியானது ஜூன் 12. சேகர் பலியானது ஜூன் 11. அய்யாவு பலியானது ஜூன் 10.

ஜூன் மாதம் ஆனதும் தேவாரம் மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள். 'கறுப்பு ஜூன்' என்றுதான் ஜூன் மாதத்தை அழைக்கிறார்கள். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். மாவட்ட வனத்துறைக்கு எதிராகப் போராடினோம். கும்கி கொண்டு வந்தார்கள். கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதியன்று முதுமலையிலிருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகளை தேவாரத்துக்குக் கொண்டுவந்தார்கள். மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்த கும்கி யானைகளுக்குத் தேவையான உணவு உபசரிப்புகளை அப்பகுதி விவசாயிகளிடமிருந்து பணம் பெற்றுச் செய்தது மாவட்ட வனத்துறை. ஆனாலும், ஒற்றை யானையைப் பிடிக்க முடியவில்லை.

திருப்பதி வாசகன்
திருப்பதி வாசகன்

மீண்டும் அதன் அட்டூழியத்தால் அலுத்துப்போன விவசாயிகள், தங்களது தொகுதி எம்.எல்.ஏ-வும் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டனர். அவரும் தேவாரத்துக்கு வந்து பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம், வசீம், விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் மீண்டும் தேவாரம் பகுதிக்கு அழைத்துவரப்பட்டன. அவற்றாலும் அந்த யானையைப் பிடிக்க முடியவில்லை. தொடர்ச்சியாக வேண்டுமென்றே கண்கட்டி வித்தை காட்டியது வனத்துறை. இதுவரை ஆறு பேர் இந்த யானைக்குப் பலியாகியிருக்கிறார்கள். விளைபொருள்களை நாசம் செய்வதால், பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தினமும் மூன்று தென்னை மரங்களை முறித்துவிடுகிறது. இதை இப்படியே விட்டுவைத்தால் இன்னும் பல உயிர்களை இழக்க வேண்டியிருக்கும்!” என்று ஆதங்கத்தோடு பேசினார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மண்டல செயலாளர் திருப்பதி வாசகன்.

கேரள முதலாளிகள்

பொதுவாக, தேவாரம் பகுதியில் சுற்றும் காட்டு யானைகள், நிலையாக ஓர் இடத்தில் இருப்பதில்லை. தேவாரம் மலைமீது ஏறி, மறுபுறம் உள்ள கேரளாவின் ராசிமலை, சாந்தாம்பாறை, ராசாப்பாறை ஆகிய இடங்களுக்குள் சென்று மீண்டும் தேவாரம் மலை அடிவாரத்துக்குத் திரும்பும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக வழக்கமாகச் சுற்றித்திரியும் காட்டுயானைக் கூட்டம் தேவாரத்துக்கு வருவதில்லை எனவும், சர்ச்சைக்குரிய ஒற்றைக் காட்டுயானை மட்டும் தேவாரம் பகுதியில் சுற்றித்திரிவதாகக் கூறுகின்றனர் தேவாரம் மக்கள். மேலும், ராசிமலை, சாந்தம்பாறை, ராசாப்பாறை ஆகிய பகுதிகளில் புதிதாக முளைத்துள்ள தனியார் ரிசார்ட்டுகளில் மின்சார வேலி அமைத்திருப்பதாகவும், இதனால்தான் காட்டுயானையின் வலசைப் பாதை தடைபட்டு தேவாரப் பகுதியை அச்சுறுத்துவதாகவும் கூறுகின்றனர்.

இது ஒருபுறம் என்றால், வளமான தேவாரம் அடிவாரப் பகுதிகளை கேரள முதலாளிகள் சமீபகாலமாக விலைக்கு வாங்கிவருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கேரள முதலாளிகளின் வசம் போய்விட்டது. மீதமுள்ள நிலத்தையும் கேரள முதலாளிகள் விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நிலத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள். அவர்களிடமிருந்து நிலத்தைப் பெறுவதற்காகக்கூட ஒற்றை யானையை கேரள முதலாளிகள், கேரள வனத்துறை மூலமாக ஏவி விட்டிருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர் தேவாரம் மக்கள். இவை எதற்குமே சம்பந்தம் இல்லாததுபோல, அமைதி காக்கிறது மாவட்ட வனத்துறை.

இந்த யானைக்கு ஒரு தீர்வு காணலாமே என மாவட்ட வன அலுவலர் கெளதமிடம் கேட்டோம். “அகழி வெட்டுதல், சோலார் மின் வேலி அமைத்தல் போன்ற பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டு வேலை செய்யவிரு

க்கிறோம். விரைவில், தீர்வு கிடைக்கும்” என்றார்.

அடுத்த பலி ஏற்படுவதற்குள்ளாகத் தீர்வு எட்டப்படுமா?