திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி வனப் பகுதியையொட்டி, கேரள மாநிலத்தின் எல்லையான செம்பக்காடு, மறையூர், மூணாறு வனப் பகுதி உள்ளது. மூணாறு குண்டலா எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் 3 யானைக் குட்டிகள் உயிரிழந்து கிடந்தன.

அந்த யானைக் குட்டிகளின் உடல்கள் மருத்துவப் பரிசோதனை செய்ததில், ஹெர்பீஸ் வைரஸ் தாக்கி யானைக் குட்டிகள் உயிரிழந்தது தெரியவந்தது.
உடுமலை வனப் பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக கேரள வனப் பகுதிக்குள் செல்வது வழக்கம்.
எனவே, அமராவதி, உடுமலை வனச் சரகத்தில் உள்ள யானைகளுக்கு ஹெர்பீஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய உடுமலை உதவி வனப் பாதுகாவலர் கணேஷ் ராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், வேட்டை தடுப்பு காவலர்கள் உடுமலை தமிழக-கேரள வனப்பகுதியில் யானைகளின் நட மாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

``ஹெர்பீஸ் வைரஸ் யானையின் தோல் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்படுத்தும். பின்னர், தீவிரமடைந்து 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்'' என வனத் துறையினர் தெரிவித்தனர்.