Published:Updated:

அழிந்து வரும் மேய்ச்சல் நிலங்கள்; அரசுக்கு அக்கறையே இல்லையா?

மாடுகள்

மேய்ச்சல் நிலத்தைச் சுற்றி ஒரு பெரும் பல்லுயிர் சூழலே இயங்குகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கும் அதிகமான இருவாழ்விகள், ஊர்வன, கொறிக்கும் விலங்குகள், பறவைகள் என ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இந்நிலத்தை நம்பி வாழ்கின்றன.

அழிந்து வரும் மேய்ச்சல் நிலங்கள்; அரசுக்கு அக்கறையே இல்லையா?

மேய்ச்சல் நிலத்தைச் சுற்றி ஒரு பெரும் பல்லுயிர் சூழலே இயங்குகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கும் அதிகமான இருவாழ்விகள், ஊர்வன, கொறிக்கும் விலங்குகள், பறவைகள் என ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இந்நிலத்தை நம்பி வாழ்கின்றன.

Published:Updated:
மாடுகள்

`மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரால் பரிந்துரை செய்தும் பட்டா வழங்கப்படவில்லை. எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறி தொடுக்கப்பட்ட வழக்கில்… ‘ அரசின் அனுமதியின்றி மாவட்ட ஆட்சியரால் நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. அரசு நிலங்களைப் பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை. நிச்சயமாக அதிகாரிகளுக்கு தெரியாமல் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது. அரசு நிலங்களை ஆக்கிரமிக்கும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டவர்களுக்காக ஒருபோதும் உதவ முடியாது’ என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இத்தீர்ப்பை இருகரம் கூப்பி வரவேற்கிறோம். இத்தீர்ப்பு ஒருவேளை செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தமிழக நிலப்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மேய்ச்சல் சமூக செயல்பாட்டாளர் என்ற அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

ஏரிக்கு அருகிலுள்ள மேய்ச்சல் நிலம்
ஏரிக்கு அருகிலுள்ள மேய்ச்சல் நிலம்

மேய்க்கால் புறம்போக்கு

மழைக்காலங்களில் பசுமையாகவும் கோடைக்காலங்களில் வறண்டும் காணப்படும் சமவெளிக் காடுகளை மேய்க்கால் புறம்போக்கு, புறம்போக்கு நிலம், தரிசு நிலம், வானம் பார்த்த பூமி என்று மக்கள் வழக்கில் பேசுவதைக் கேட்டிருப்போம். இதற்கு அடிப்படையான காரணம் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு உதவாத பகுதிகளை (Waste Land) எழுதிச் சென்ற காரணத்தால், நாமும் அதையே பின்பற்றி புறம்போக்கு நிலம், தரிசு நிலம் என்று ஏதாவது ஒரு பெயரைப் பயன்படுத்தி வருகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் நிலம், மந்தைவெளி நிலம் என்று இரண்டு வகையான நிலங்கள் இருந்தன. அதைப் புறம்போக்கு நிலம் எனச் சொல்லி, அனுபோக பாத்தியம் ஏற்பட்டு விட்டதாக அறிக்கை கொடுத்து, அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் அவ்வாறு பெறப்பட்ட பட்டாவை வைத்துக்கொண்டு, நில உபயோகத்தின் தன்மையை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அதிகாரிகள் சிலர் நிலத்தின் தன்மையை ஆராய்ந்து மனுக்களைத் திருப்பி அனுப்பி வைப்பதையும் பார்க்க முடிகிறது.

மேய்ச்சல் ஆடுகள்
மேய்ச்சல் ஆடுகள்

மந்தைவெளி நிலம்

மந்தை வெளி நிலம் என்பது நத்தம் என்கிற பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக இருப்பதால், கால்நடைகளை ஓட்டிச் சென்று காலையிலும் மாலையிலும் இந்த இடத்தில் ஒன்று சேர்த்த பிறகு மேய்ச்சலுக்கும், வீட்டுக்கும் பிடித்துச் செல்வார்கள். அந்தக் காலத்தில் இதுபோல ஒன்று சேரும் மாடுகளை மேய்க்க ஆட்கள் தனியாக இருந்தனர். கால்நடைகள் ஒன்று சேர்க்கப்பட்டு மேய்ச்சலுக்கும், மாலையில் அவரவர் வீடுகளுக்கும் பிரித்து பிடித்துச் செல்ல பயன்படுத்திய நிலத்தையே மந்தைவெளி நிலம் என்று சொல்வார்கள். இந்த நிலத்தில் பொங்கல் விழா கொண்டாடுவார்கள். இந்த நிலத்தில் மாடுகளின் கழிவுகள் சேரும். அதை விவசாயிகளுக்கு உரமாக விற்பனை செய்வார்கள். ஆள் வைத்து காலையிலும் மாலையிலும் சேரும் சாணத்தை சேகரம் செய்து, நெல் வயல்களுக்கு உரமாகப் போடுவார்கள். இன்னும் சில கிராமங்களில் இந்த நடைமுறையைப் பார்க்கலாம். இந்த இரண்டு இடங்களும் அரசின் சொத்து. இந்த நிலங்களைக் கூட விடாமல் புறம்போக்கு என ஆவணங்கள் தயார் செய்து ஒரு சில ஆதிக்க சக்திகள் பட்டா பெற்றுவிடுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேய்ச்சல் நிலம்

மேய்ச்சல் நிலத்தைச் சுற்றி ஒரு பெரும் பல்லுயிர் சூழலே இயங்குகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி வகைகள், நூற்றுக்கும் அதிகமான இருவாழ்விகள், ஊர்வன, கொறிக்கும் விலங்குகள், பறவைகள் என ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இந்நிலத்தை நம்பி வாழ்கின்றன. இந்த நிலத்தில் காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் பல உயிரினங்கள் பெருகும் விதமாக இயற்கை உருவாக்கியிருக்கிறது.

மாடுகள்
மாடுகள்

பல்லுயிர் பெருக்கம்

மேய்ச்சல் நிலம் உயிர்ப்புடன் இருப்பதற்காகவே முன்னோர்கள் மேய்ச்சல் முறையில் கால்நடைகளை ஈடுபடுத்தி வந்துள்ளனர். கால்நடை கழிவு மூலம் இந்த மண்ணுக்குத் தேவையான உணவு வழங்கப்படுகிறது. இதன்மூலம் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பெருகவும், தாவரங்கள் வளரவும் வாய்ப்பு கிடைக்கிறது. இதைத் தேடி பல உயிரினங்கள் இங்கே வருவதால் வலுவான ஒரு இணைப்புச் சங்கிலி மேய்ச்சல் நிலத்தில் இயற்கையாகவே உருவாகிறது. பல்லுயிர் பெருக்கம் நடைபெற ஏற்ற பூமியாக மேய்ச்சல் நிலம் இருந்துவருகிறது. பல்லுயிர் பெருக்கத்துக்குக் காரணமான அறிவுசார் மேய்ச்சல் தொழில், பொருளாதாரப் பலன்தரக்கூடிய தொழில் என்பதை மேய்ச்சலில் ஈடுபடுபவர்களை ஒருங்கிணைக்கும்போது அறியமுடிந்தது.

மேய்ச்சல் நிலங்களைச் சார்ந்து வாழ்ந்த வெளிமான்கள், கானமயில்கள், வரகுக்கோழிகள், கழுதைப்புலிகள், நரிகள் இன்று நம்மிடையே இல்லாமலே போய்விட்டன. இன்றைக்கு மயில்களாலும் மான்களாலும், காட்டுப் பன்றிகளாலும், எலிகளாலும் விவசாய பெருங்குடி மக்கள் பெரும் தொல்லைகளைச் சந்தித்து வருகின்றனர். இதற்குக் காரணம், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு அங்கே வாழ்ந்த பாம்புகளும், கொல்லுண்ணி விலங்குகளும் இல்லாமல் போனதே என்று சூழலியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மாடு
மாடு

மேய்ச்சல் நிலங்கள்தான் கால்நடைகளின் முக்கிய மேய்ச்சல் ஆதாரம். பரந்து விரிந்த மேய்ச்சல் நில புல்வெளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குடை வேல், கருவேலம், விருவெட்டு, காரை, தொரட்டி, சிறுகுமிழ் மரங்கள் இருக்கும் சில இடங்களில் பனை மரங்களையும் கூட்டமாகக் காணலாம். தனியார் வசமுள்ள மேய்ச்சல் நிலங்களில் முள்ளுக்கிளுவை, முள்ளுக் கற்றாழை போன்றவை உயிர் வேலிகளாக இருந்து வந்தன. தனியார் நிலங்களில் சிறுதானியங்கள், சோளம், பருத்தி போன்றவை இன்றளவும் விளைவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இவ்விடங்களில் இடப்பெயர்ச்சி முறை பயிரிடுகை நடந்து வந்தது. ஆதலால், கால்நடை மேய்ச்சலுக்குத் தேவையான இடங்கள் இருந்து வந்தன.

இந்தப் புரிதல் இல்லாத காரணத்தால் மேய்ச்சல் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று நினைத்து பல்வேறு நலத்திட்டங் களுக்காக பாரம்பர்ய மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சில இடங்கள் கோயில் நிலமாகவும், ஆதிக்க சக்திகள் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. சங்க காலத்தில் இவ்வகை நிலம்தான் `முல்லைத் திணை’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேய்ச்சல் சமூகத்தினரால் காலம் காலமாக வளர்க்கப்படும் கிடை மாடு, மலை மாடு, செம்மறி ஆடு, எருமை ஆகியவை தனித்துவமான மேய்ச்சல் முறையைப் பின்பற்றி மேய்ச்சலில் ஈடுபடுத்துவதால் பல்லுயிர் பெருக்கம் அதிகரிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலும், கார்பன் வெளிப்பாட்டை குறைப்பதிலும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். ஆனால், நமது அரசுகள் பண்ணை முறையை ஊக்கப்படுத்துகின்றன. பண்ணைத் தொழில் முறையில் குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படும் கால்நடைகள் அதிக கார்பன் உமிழ்வையும், நீர்த் தேவையையும் கொண்டிருக்கும். அதேநேரம் பாரம்பர்ய மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் கால்நடைகள் மிக குறைவான கார்பன் உமிழ்வும், நீர்த் தேவையும் கொண்டிருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாடுகள்
மாடுகள்

இதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபை `மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் சமூக சர்வதேச ஆண்டு’ (International Year of Rangelands & Pastoralists) என 2026-ம் ஆண்டை அறிவித்துள்ளது. இந்த முயற்சிக்கு மங்கோலிய அரசு மற்றும் அதற்கு ஆதரவாக 60 நாடுகள் இணைந்து உருவாக்கிய தீர்மானம் நியூயார்க்கில் மார்ச் 15, 2022 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஒப்புதல் பெற்று அறிவித்துள்ளது.

மேய்ச்சலில் ஈடுபடுத்தப்படும் கால்நடைகள் மனிதர்கள் சாப்பிட முடியாத புல் மற்றும் தாவரங்களை உண்டு வாழ்வதோடு, மனிதர்களுக்குத் தேவையான மலிவான, சுத்தமான, புரதச்சத்து நிறைந்த உணவாகவும் கிடைக்கின்றன. மண்ணை வளப்படுத்த தேவையான உரங்களை அளித்து வருகின்றன.

நாட்டு மாடுகள்
நாட்டு மாடுகள்

புறம்போக்கு நிலம் என்று மேய்ச்சல் நிலங்களை அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்துகிறது. அரசின் திட்டங்களும் செயல்களும் இந்தப் பல்லுயிர்களின் வாழ்வின் ஆதாரத்தை அழித்து, அவற்றை இல்லாமல் போகச் செய்து வருகின்றன. இயற்கை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கிய இந்த இணைப்புச் சங்கிலிகள் ஒரே நேரத்தில் இப்படி அறுக்கப்பட்டால் அதன் பின் விளைவுகளுக்கு மனிதனால் பதில் சொல்ல இயலாது.

மேய்ச்சல் நிலம் குறித்த புரிதலையும், மீட்பதற்கான முயற்சியையும் அரசு எடுக்க வேண்டும். காலநிலை சிக்கலை எதிர்கொண்டு வறுமையை ஒழிப்பது, பல்லுயிர் பெருக்கத்துக்கு வருகின்ற ஆபத்துகளை சமாளிப்பது, நீடித்த உணவு அமைப்பு முறையை உருவாக்குவது, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உருவாக்குவது தொடர்பான கொள்கை சார் விவாதங்களில் மேய்ச்சல் நிலம் மற்றும் மேய்ச்சல் சமூகத்தினரை முன்னிலைப்படுத்தி உலகநாடுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

பெரி.கபிலன்
பெரி.கபிலன்

அரசு புதிய `பல்லுயிர் பெருக்க சூழலியல் பூங்கா’ உருவாக்குவதைவிட, பாரம்பர்ய மேய்ச்சல் முறை மற்றும் வளமான மேய்ச்சல் நிலங்கள் மூலம் கிடைக்கின்ற நன்மைகள் குறித்த செய்திகளை அரசும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். பல்லுயிர் பெருக்கம் இயற்கையாகவே மேய்ச்சல் நிலங்களில் உருவாகும்.

முனைவர் பெரி.கபிலன்,

மேய்ச்சல் சமூக செயற்பாட்டாளர்,

தொழுவம், மதுரை.

தொடர்புக்கு 98944 06111

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism