Published:Updated:

`அடிச்சே கொன்றுவிடும்; இல்லன்னா பட்டினி கிடந்து செத்துடும்!'- குட்டி யானைக்காகக் கலங்கும் ஆர்வலர்கள்

தாய் யானை குட்டியை அவ்வளவு சீக்கிரமாகப் பிரியாது. குட்டி இறந்துட்டா கூட, அதைத் தூக்கிக்கிட்டே அலையும். சமயங்கள்ல இறந்த குட்டி யானை அழுகிப்போற வரை அந்த இடத்துலயே சுத்திக்கிட்டு இருக்கும்.

ஓய்வெடுக்கும் அம்முகுட்டி யானை
ஓய்வெடுக்கும் அம்முகுட்டி யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயைப் பிரிந்த ஒரு குழந்தை போல, தனியே அலைந்து திரிந்த குட்டி யானைதான் `அம்முகுட்டி’. காட்டிலிருந்து ஊருக்குள் புகுந்த அம்முகுட்டியை வனத்துறையினர் அழைத்துச் சென்று காட்டிற்குள் விட்டபோதிலும், மறுபடியும் அது காட்டிற்குள் போகாமல் சாலையிலேயே சுற்றிச் சுற்றி வந்தது. அந்தக் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் கராச்சிக்கொரையில் உள்ள வனக் கால்நடை மருத்துவமனையில் வைத்து பராமரித்து வந்தனர். வனக் கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழுவினர், அந்தக் குட்டி யானைக்கு `அம்முகுட்டி’ எனப் பெயர் வைத்ததோடு, குழந்தையைப் போல பாட்டிலில் பால் கொடுத்து கவனித்து வந்தனர். அம்முகுட்டியும் ஒரு குழந்தையைப் போலவே, ஓடியாடி கொஞ்சி விளையாடியது. இதனையெல்லாம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிசயமாகப் பார்த்துச் சென்றனர்.

மருத்துவர் அசோகனுடன் அம்முகுட்டி யானை
மருத்துவர் அசோகனுடன் அம்முகுட்டி யானை

`ஒரு வயதேயான இந்தக் குட்டி யானையை மறுபடியும் காட்டில் விடுவது சரியாக இருக்காது. வேறு யானைக் கூட்டத்திலும் இது சேராது. தேவையான உணவு கிடைக்காமல் அது உயிரிழக்கவும் நேரிடும். எனவே, இதை முதுமலை அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து பாதுகாப்பதுதான் சரியாக இருக்கும்’ என வன உயிரின ஆர்வலர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அம்முகுட்டியை வண்டியில் ஏற்றிச் சென்ற வனத்துறையினர், அதை அடர்ந்த வனத்திற்குள் விட்டுவிட்டு வந்திருக்கின்றனர். `குட்டியை தாயுடனோ அல்லது வேறு யானைக் கூட்டத்திடமோ சேர்த்து விட்டால் அது சர்வைவல் ஆகிவிடும்’ என வனத்துறையினர் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. வனத்துறையினரின் இத்தகைய செயல், வன உயிரின ஆர்வலர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதை மறுபடியும் காட்டுக்குள்ள கொண்டுபோய் விட்டா, மற்ற யானைகள் சேர்ந்து இதை அடிச்சே கொன்னுடும். இல்லைன்னா, வேற விலங்குகளுக்கு இது உணவாகிடும். இதில் எல்லாவற்றிலும் தப்பிச்சா, உணவுக்கு வழியில்லாம பட்டினியா கிடந்து செத்துடும்.
` குழந்தையைப் போல ஆட்டம் போடும் குட்டி யானை!' - ஆச்சரியத்தில் ஈரோடு மக்கள்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ``அவ்வளவு பெரிய காட்டுல அந்தக் குட்டி யானையோட தாயை எப்படி வனத்துறையினர் கண்டுபிடிப்பாங்க!... இதை எதுக்கு நம்ம வச்சிக்கிட்டு செலவு பண்ணி தேவையில்லாம பராமரிக்கணும் நினைச்சிதான் இப்படி செஞ்சிருக்காங்க. ஒரு வயசு குழந்தையை ஒரு பெரும் காட்டில் விட்டதைப்போல, அம்முகுட்டியைக் காட்டில் விட்டுவிட்டு வந்திருக்காங்க. கிட்டத்தட்ட 10 நாள்களுக்கும் மேலாக மனிதர்களிடம் பழகிய யானையை மறுபடியும் காட்டில் விடுவது சரியானதாக இருக்குமா!... தாய் யானை குட்டியை அவ்வளவு சீக்கிரமாகப் பிரியாது. குட்டி இறந்திட்டா கூட, அதைத் தூக்கிக்கிட்டே அலையும். சமயங்கள்ல இறந்த குட்டி யானை அழுகிப் போற வரை அந்த இடத்துலயே சுத்திக்கிட்டு இருக்கும். எனவே, தாய் யானை இறந்து போயிருக்கும் அல்லது குட்டியை மறந்து வேறு எங்காவது போயிருக்கும்.

குட்டியைக் காணோமுன்னு ஒருநாள்தான் தாய் யானை தேடும். அதுக்கப்புறம் மறந்திடும். பல நாள்கள் ஆனபிறகு அதோட தாய்கிட்ட குட்டியை ஒப்படைச்சாகூட, அது கூட்டத்துல சேர்த்துக்காது. மனிதர்கள் தொட்டுப் பழகினதை மத்த யானைங்க ஏத்துக்காது. மனிதர்களின் சத்தத்தைக் கேட்டு குழந்தை மாதிரி இந்த அம்முகுட்டி பின் தொடர்ந்து ஊருக்குள் வந்துருக்கு. இதை மறுபடியும் காட்டுக்குள்ள கொண்டுபோய் விட்டா, மற்ற யானைகள் சேர்ந்து இதை அடிச்சே கொன்னுடும். இல்லைன்னா, வேற விலங்குகளுக்கு இது உணவாகிடும். இதில் எல்லாவற்றிலும் தப்பிச்சா, உணவுக்கு வழியில்லாம பட்டினியா கிடந்து செத்துடும். இப்படி கொஞ்சம் கொஞ்சமா அதைக் கொடுமைப்படுத்துறதுக்கு பதிலாக, பேசாம வனத்துறையினரே அம்முகுட்டியைக் கொன்னுருக்கலாம்” எனக் கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

காட்டில் அம்முகுட்டி
காட்டில் அம்முகுட்டி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லாலிடம் பேசியபோது, “குட்டி யானையை அதோட கூட்டத்துடன் சேர்க்க முயற்சி எடுத்துக்கிட்டு இருக்கோம். வனத்துறையினர் குட்டியைப் பின் தொடர்ந்து, அதைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் இருக்கின்றனர்” என்றார்.