Published:Updated:

`புலிக்காட்டில் புகைப்படம் எடுக்கலாம் வாங்க!’- நெல்லை வனத்துறையின் அழைப்பு 

வனப்பகுதி
வனப்பகுதி

புலிகள், மான்கள், யானைகள், பறவையினங்கள், ஊர்வன ஆகியவை வசிக்கும் அடர்ந்த வனப்பகுதியில் புகைப்படம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யுமாறு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அழைப்பு விடுத்துள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரையிலான 895 சதுர கி.மீ பரப்பளவில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாட்டின் 17-வது புலிகள் காப்பகமாக அமையப்பெற்ற இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள் உள்ளன. அத்துடன் அரிய மூலிகை வகைத் தாவரங்களும் உள்ளன. 

புகைப்படம் எடுக்க அழைப்பு
புகைப்படம் எடுக்க அழைப்பு

அடர்ந்த வனப்பகுதியில் மாணவ-மாணவியர் புகைப்படம் எடுக்க வனத்துறை அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக வனத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ``2020-ம் ஆண்டு புதிய வருடத்தை முன்னிட்டு களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மாணவ மாணவியர் நாளை (1-ம் தேதி) புலிக்காட்டில் புகைப்படம் எடுக்கலாம்.

அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு மாணவ மாணவியரை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஓம்கார் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்ற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை 9788232000 என்ற எண்ணில் பேசிப் பதிவு செய்துகொள்ளலாம். 

செய்திக் குறிப்பு
செய்திக் குறிப்பு

பதிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் 1-ம் தேதி காலை 9 மணிக்கு கேமரா, மொபைல் போன் ஆகியவற்றுடன் மணிமுத்தாறு சோதனை சாவடிக்கு வர வேண்டும். கலந்துகொள்வோரில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு 5 குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு குழுவினரும் அடர்ந்த வனப்பகுதிக்குள் 5 கி.மீ தூரம் நடந்து சென்று தாங்கள் பார்க்கும் பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், பூச்சியினங்கள், சிலந்திகள், நில அமைப்பு, நீர் ஆதாரம், ஊர்வன, பாலூட்டிகள் உள்ளிட்டவற்றை கேமராவில் பதிவு செய்ய வேண்டும். 

புலி
புலி
Representational Image

மாணவ, மாணவியர் பதிவு செய்த புகைப்படங்கள் வனஉயிரின வார விழா நடைபெறும்போது கண்காட்சிக்கு வைக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் சரவணக்குமார், வனவர் முருகேசன் ஆகியோர் செய்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைக்கிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு