Published:Updated:

குப்பைக்குள் ஒளிந்த 8 அடி நீள சாரைப் பாம்பு - எரித்துக்கொன்ற வனத்துறை ஊழியர்கள்!

பி.ஆண்டனிராஜ்

நெல்லை மாவட்டத்தில் வீட்டின் அருகே பிடிபட்ட 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை மண்ணெண்ணெய் ஊற்றி வனத்துறை ஊழியர்களே எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

சாரைப் பாம்பு
சாரைப் பாம்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் முத்தாரம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர், வெள்ளப்பாண்டி. விவசாயியான இவரது வீட்டின் வெளியே விவசாயப் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் போட்டு வைத்திருந்தார். அந்த இடத்தில் கிடந்த குப்பைக்குள் சாரப் பாம்பு புகுந்துள்ளது.

மண்ணெண்ணெய் ஊற்றும் ஊழியர்கள்
மண்ணெண்ணெய் ஊற்றும் ஊழியர்கள்

இரவு நேரங்களில் வீட்டின் அருகே சாரைப் பாம்பு அங்குமிங்கும் செல்வதைப் பொதுமக்கள் பலரும் பார்த்துள்ளனர். இது போன்று குடியிருப்பு அருகில் உள்ள பாம்புகளை வனத்துறையினர் பிடித்துச் சென்று காட்டுப் பகுதிக்குள் விடுவது வழக்கம். அதனால் அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

வனத்துறை ஊழியர்கள், வெள்ளப்பாண்டி வீட்டின் அருகே வந்து பாம்பைத் தேடியிருக்கிறார்கள். குப்பைக்குள் பதுங்கியிருந்த பாம்பு அங்கிருந்து தப்பியோட முயன்றபோது அருகிலிருந்த பயன்பாடற்ற தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.

பாம்பை எரித்த வன ஊழியர்கள்
பாம்பை எரித்த வன ஊழியர்கள்

ஆனால், அந்தப் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்யாத வனத்துறை ஊழியர்கள் அருகில் உள்ள வீட்டினரிடம் மண்ணெண்ணெய் எடுத்துவருமாறு கூறியிருக்கிறார்கள். பின்னர் மண்ணெண்ணையை ஊற்றியதுடன், தாள் அட்டை உள்ளிட்டவற்றை உள்ளே போட்டு தீ வைத்தார்கள். வெப்பம் தாங்காமல் வெளியேற முயன்ற பாம்பை மீண்டும் உள்ளே தள்ளி தீயில் எரித்துக் கொன்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாம்பைக் கொல்லக் கூடாது என்பதற்காக வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தபோதிலும், அவர்கள் அதைப் பிடிக்க முயலாமல் உயிருடன் எரித்துக் கொன்று விட்டார்களே என மக்கள் ஆதங்கப்பட்டார்கள்.

எட்டு அடி நீளமுள்ள சாரைப் பாம்பைப் பிடிக்க முயலாமல் அதை மண்ணெண்ணெய் ஊற்றி வன ஊழியர்களே எரித்துக் கொன்றார்கள்.
பொதுமக்கள்

இந்தச் சம்பவத்தை அப்பகுதி இளைஞர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். வனத்துறையினர் எட்டு அடி நீளமுள்ள சாரைப் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்யாமல் உயிருடன் எரித்துக் கொன்ற வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இது வனத்துறை அதிகாரிகளைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.