Published:Updated:

தோட்டத்தில் இருந்த கால்நடைகளைக் கொன்ற புலி... கோவை அருகே கிராம மக்களுக்கு அலர்ட்..!

புலி
புலி

கோவை பொள்ளாச்சி அருகே கால்நடைகளைக் கொன்ற புலியைப் பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சேத்துமடை அருகே சங்கர் என்பவருக்குச் சொந்தமாகத் தோட்டம் இருக்கிறது. கடந்த வாரம், சங்கர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார்.

கன்று
கன்று

சங்கரின் உறவினரான அப்பாதுரை என்பவர் மட்டும் தோட்டத்தில் தங்கியிருக்கிறார். ஜனவரி 28-ம் தேதி அதிகாலை தோட்டத்தில் இருந்த கால்நடைகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பாதுரை கொட்டகைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கே ஓர் புலி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அப்பாதுரை அதிர்ச்சியடைந்துள்ளார். சிறிது நேரத்தில், புலி அருகில் இருந்த ஓடை வழியாகப் பாய்ந்து சென்றுவிட்டது. இதையடுத்து, அப்பாதுரை கொட்டகைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு ஐந்து ஆடுகள் மற்றும் ஒரு கன்று குட்டி புலியால் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா
கண்காணிப்பு கேமரா

இதைத்தொடர்ந்து, அப்பாதுரை உடனடியாக இந்தத் தகவலை வனத்துறைக்குத் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், பிறகு, புலியின் நடமாட்டத்தை அறிவதற்காக, அங்கு ஆறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதில், புலி மீண்டும் அந்தப் பகுதிக்கு வருவதை வனத்துறையினர் உறுதி செய்தனர். இதனால், அச்சமடைந்த ஊர் மக்கள், புலியை விரைந்து பிடிக்க வேண்டும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கூண்டு
கூண்டு

இதனால், புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் அந்தப் பகுதியில் ஓர் இரும்புக் கூண்டினை வைத்துள்ளனர்.

அந்தக் கூண்டில் ஆட்டின் இறைச்சியை வைத்து புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புலி பிடிபட்டவுடன், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புலி
புலி

இதனிடையே, புலி நடமாட்டம் இருப்பதால், மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று சுற்றுவட்டார கிராமங்களுக்கு வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பின் செல்ல