Published:Updated:

2 பேரைக் கொன்றது!- `அரிசி ராஜா' யானையை பிடிக்க அரிசி மூட்டைகளுடன் செல்லும் வனத்துறையினர்

கோவை பொள்ளாச்சி அருகே காட்டு யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானை
காட்டு யானை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி பலியானார். மேலும், அந்த யானை தாக்கி திருமாத்தாள் என்ற பெண் படுகாயமடைந்தார்.

காட்டு யானை
காட்டு யானை

காயமடைந்த பெண் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில், அந்த யானையைப் பிடிக்க வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ``பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த யானை தொடர்ந்து அட்டகாசம் செய்துவருகிறது. எனவே, இந்த யானயை உடனடியாகப் பிடித்து மரக்கூண்டில் வைக்க வேண்டும்.

கும்கி
கும்கி

உயிரிழந்த ராதாகிருஷ்ணன் மற்றும் திருமாத்தாள் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்'' என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, அந்தக் காட்டு யானையைப் பிடிப்பதற்கான பணியில் வனத்துறை இறங்கியுள்ளனர். டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து கலீம் மற்றும் பாரி என்ற இரண்டு கும்கி யானைகள் அர்த்தநாரிபாளையம் கொண்டு வரப்பட்டுள்ளன. காட்டு யானைக்கு மயக்க ஊசி போடுவதற்கான முயற்சியில் மருத்துவர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த காட்டு யானை 4 பேரை மிதித்துக்கொன்றது. வனத்துறையினர் அந்த யானையை பிடித்து டாப்ஸ்லிப்பில் கொண்டு போய்விட்டனர். தற்போது இந்த காட்டு யானை பொள்ளாச்சியை அடுத்த அர்த்தனாரி பாளையத்தில் இரண்டு பேரை மிதித்துக் கொன்றது. வனத்தில் இருந்து வெளியேறி யானை, ஊருக்குள் வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டு சென்றுவிடுவதால் அதற்கு அந்தப் பகுதி மக்கள் அரிசி ராஜா என பெயர் வைத்துள்ளனர். இதனிடையே, யானையை பிடிக்க அரிசியை மூட்டைகளுடன் வனத்துறையினர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.

காட்டு யானை
காட்டு யானை

இது குறித்து வனத்துறையினரிடம் பேசிய போது, ``இந்த காட்டு யானை ஊருக்குள் புகுந்து அரிசியை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளது. இதனால் யானையை அரிசி ராஜா என்று அந்த பகுதி மக்கள் அழைக்கின்றனர். மற்ற யானைகள் தென்னை மரத்தை முறித்து இளநீரை குடிப்பது வழக்கம். ஆனால் இந்த காட்டு யானை, தென்னை மரத்தை முறிக்காமல் இளநீரை மட்டும் குடித்துசென்றுவிடும். யானை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் அதனை பிடிப்பது சவாலான காரியம்தான்" என்றனர்.