Published:Updated:

களமிறக்கப்பட்ட கும்கி கலீம்; பாகுபலி யானையை வளைக்க வலைவீசும் வனத்துறை!

பாகுபலி
பாகுபலி

கோவை மேட்டுப்பாளையம் பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் நடவடிக்கைக்காக கும்கி யானைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

நாட்டிலேயே யானை- மனித எதிர்கொள்ளல் அதிகம் நடக்கும் இடமாக கோவை மாறி வருகிறது. கடந்த சில தசாப்தங்களில் காடுகளை ஒட்டி ஏராளமான மாற்றங்கள் வந்துவிட்டன. இதனால், யானை உணவும், தண்ணீரும் தேடி ஊருக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. ஊருக்குள் வரும் யானைகள் விளை நிலங்களில் உணவு சாப்பிட்டு பழகி, காட்டுக்குள் செல்வது மிகவும் அரிதாகிவிட்டது.

யானை
யானை
`யானை வழித்தடங்களை ஆவணப்படுத்தியதில் முக்கியமானவர்!' - கொரோனாவால் மறைந்த காட்டுயிர் ஆய்வாளர்

அந்த மாதிரியான பழக்க வழக்கத்துக்குள்ளான யானைகளை பிடித்து வேறு இடங்களில் விடுவது, வளர்ப்பு யானையாக பயிற்சியளிப்பது போன்ற செயல்களில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரங்களில் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த யானைகளுக்கு மக்கள் பெயர் வைத்து அழைப்பார்கள். உருவத்தில் சற்றே பெரிதாக உள்ள யானைக்கு பாகுபலி என பெயரிட்டனர்.

பாகுபலி யானை
பாகுபலி யானை
`பாகுபலிக்கு இதனால்தான் ரேடியோ காலர் பொருத்துறோம்!' - கோவை வனத்துறை சொல்வது என்ன?

பகலில் காடுகளில் தஞ்சமடையும் பாகுபலி, இரவு நேரங்களில் உணவு தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. அதன் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை முடிவு செய்தனர். அதன்படி, அதற்கு ரேடியோ காலர் பொருத்த கடந்த வாரம் அனுமதியும் கிடைத்தது.

இந்நிலையில், பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் நடவடிக்கைகளில் வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக, டாப்ஸ்லிப் முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி யானை மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

கலீம் கும்கி யானை
கலீம் கும்கி யானை

மேலும், இரண்டு கும்கி யானைகள் மேட்டுப்பாளையம் அழைத்து வரப்பட உள்ளன. கும்கி யானைகள் வந்ததும், தகுந்த இடம் பார்த்து பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்துவோம் என்று வனத்துறை கூறியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு