Published:Updated:

`பாகுபலிக்கு இதனால்தான் ரேடியோ காலர் பொருத்துறோம்!' - கோவை வனத்துறை சொல்வது என்ன?

பாகுபலி யானை
பாகுபலி யானை

``யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து காண்காணிப்போம். சில ஆண்டுகளில் அந்த யானை நடமாடும் பகுதிகள் குறித்த முழு விபரங்களும் தெரிந்துவிடும். இந்த ஆய்வு, எதிர்காலத்தில் யானை – மனித மோதலை தடுக்க பெரியளவுக்கு உதவும்."

மேற்குத் தொடர்ச்சி மலை ஒருபுறம், புற்றீசல் போல முளைத்து வரும் கான்கிரீட் காடு மறுபுறம். இதுதான் கோவை மாவட்டத்தின் தற்போதைய நிலைமை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் என்பதாலும், வனத்தையொட்டி நடந்த ஏராளமான மாற்றங்களாலும் யானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக ஊருக்குள் வரத் தொடங்கின.

2 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட `சில்வர் மான்ஸ்ட்ரா' யானை; சிகிச்சையைத் தொடங்கிய வனத்துறை!

அப்படி வரும் யானைகளுக்கு கோவை மக்கள் பாசமாகப் பெயர் வைக்கும் சம்பவங்களும் நடக்கும். பெரியதம்பி, சின்னதம்பி, விநாயகன், ஊசி கொம்பன், மதுக்கரை மகாராஜா, அரிசிராஜா என யானை பெயர் பட்டியல் நீளும்.

அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மக்களின் அதிக அபிமானத்தைப் பெற்றுள்ளது குறிப்பிட்ட ஒரு யானை. நெல்லிமலை, தாசம்பாளையம், பஞ்சுக்காடு பகுதிகளில் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து யானைகள் உணவு சாப்பிடும். பகல் நேரங்களில் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிடும்.

பாகுபலி யானை
பாகுபலி யானை

அதில் அந்தக் குறிப்பிட்ட ஆண் யானை உருவத்தில் பெரிதாக காணப்படும். அதனால், மக்கள் அதைப் பாகுபலி என்று அழைப்பது வழக்கம். யானைகள் ஊருக்குள் வருவதும், வனத்துறையினர் அதை பட்டாசு வீசி வனப்பகுதிக்குள் விரட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது.

``பாகுபலி உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும், மிகவும் சாதுவான யானை. அதனால், விளை நிலங்கள் சேதப்படுத்தப்படுமே தவிர, இதுவரை யாரையும் தாக்கியது இல்லை. ஊருக்குள் வந்து பழகிவிட்டதால், அது காட்டுக்குள் இருக்கும் நேரம் குறைவுதான். பாகுபலி மிகவும் அறிவான யானை. என்னதான் ஊருக்குள் வந்தாலும், உடைமைகளை சேதப்படுத்தாது.

பாகுபலி யானை
பாகுபலி யானை

வாகனங்கள் செல்லும்போது, காத்திருந்து வாகனங்கள் சென்றபிறகுதான் சாலையைக் கடக்கும்” என்று பாகுபலி யானையின் ஒவ்வொரு அசைவு குறித்தும் சொல்லி சிலாகிக்கின்றனர் மேட்டுப்பாளையம் மக்கள்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ``அந்த யானையை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முதன்மை வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, யானையை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மயக்க ஊசி செலுத்தி அதற்கு ரேடியோ காலர் பொருத்துவோம்.

பாகுபலி யானை
பாகுபலி யானை

அதன் பிறகு அந்த யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிப்போம். சில ஆண்டுகளில் அந்த யானை நடமாடும் பகுதிகள் குறித்த முழு விபரங்களும் தெரிந்துவிடும். இந்த ஆய்வு, எதிர்காலத்தில் யானை - மனித மோதலைத் தடுக்க பெரியளவுக்கு உதவும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு