Published:Updated:

`தாழ்வாகத் தொங்கிய மின்கம்பி; தூக்கிவீசப்பட்ட காட்டு யானை!’- அதிர்ச்சி கொடுத்த ஆந்திர வனப்பகுதி

உயிரிழந்த காட்டு யானை
உயிரிழந்த காட்டு யானை

ஆந்திர வனப்பகுதியில், தாழ்வாகத் தொங்கிய உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் காட்டு யானை தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்துள்ள ஆந்திர எல்லை வனப்பகுதியில், `கௌண்டன்ய யானைகள் சரணாலயம்’ அமைந்திருக்கிறது. இங்குள்ள யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி தமிழக எல்லையோரம் உள்ள மோர்தானா அணை, சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் விளைநிலங்களிலும் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

உயிரிழந்த காட்டு யானை
உயிரிழந்த காட்டு யானை

யானைகளின் நடமாட்டத்தைத் தடுக்க இரண்டு மாநிலங்களின் எல்லையோரங்களில் வசிப்பவர்கள், சட்டவிரோதமாக மின்வேலியை அமைத்துள்ளனர். அதைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி, குடியாத்தம் பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காவலேரி குட்டை வனப்பகுதியில், மின்வேலியில் சிக்கி பெரிய காட்டு யானை உயிரிழந்து கிடந்தது.

உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாகச் செல்கிறது. யானை செல்லும்போது, அதன் மீது மின்கம்பி உரசியதில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்துள்ளது.
வனத்துறை

அதுதொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கௌண்டன்ய யானைகள் சரணாலயத்தைச் சேர்ந்த மேலும் ஒரு யானை இன்று காலை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சித்தூர் மாவட்டம், பங்காருபாளையம் மேற்கு வனச்சரகத்துக்குட்பட்ட தேக்குமந்தை-மொகிலி கோயில் வனப்பகுதியில் இந்த யானை இறந்துகிடந்தது. தகவலறிந்ததும், பங்காருபாளையம் மேற்கு வனச்சரக அலுவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்தனர்.

உயிரிழந்த காட்டு யானை
உயிரிழந்த காட்டு யானை

``யானைக்கு 30 வயது இருக்கும். ஒற்றைக் கொம்புடையது. இந்தப் பகுதியில் உயர்அழுத்த மின்கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது. யானை செல்லும்போது, அதன்மீது மின்கம்பி உரசியதில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்துள்ளது’’ என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்கள் பலர் திரண்டு வந்து யானைக்குக் குங்குமப் பொட்டு வைத்து அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து, யானையின் உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு