Published:Updated:

குற்றாலம்: ஒற்றை யானையை விரட்டும் முயற்சி! - வேட்டைத் தடுப்புக் காவலருக்கு நேர்ந்த சோகம்

ஒற்றை யானை
ஒற்றை யானை

ஊரடங்கு காரணமாக குற்றாலம் மலைப் பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளதால், வன விலங்குகள் அச்சமின்றி மலைப் பகுதியில் சுற்றி வருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் எப்போதும் கூட்டமாக இருக்கக் கூடிய குற்றாலம் அருவிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

குற்றாலம் மெயின் அருவி
குற்றாலம் மெயின் அருவி

அருவிகளில் ஆள் இல்லாத நிலையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் மலைப் பாம்பு, காட்டுப் பன்றி உள்ளிட்டவை அடித்துவரப்படுகின்றன. அத்துடன், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகளும் மலையடிவாரத்தின் குடியிருப்புப் பகுதிகள் வரை சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றன.

Vikatan

கடந்த ஒரு வாரமாக குற்றாலம் மலையைச் சுற்றியுள்ள பகுதியில் ஒற்றை யானை வலம் வந்து கொண்டிருந்தது. அதை இளைஞர்கள் சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தனர். அந்த யானையால் கிராம மக்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக வனத்துறையினர் அதைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வேட்டைத் தடுப்புக் காவலர் முத்துராஜ்
வேட்டைத் தடுப்புக் காவலர் முத்துராஜ்

குண்டர் தோப்பு பகுதியில் நேற்று நுழைந்த ஒற்றை யானை, அங்குள்ள வேலிகளைச் சேதப்படுத்தியதுடன் விவசாயப் பயிர்களையும் சேதப்படுத்தியது. அதனால் அங்கு சென்ற வனத்துறையினர் சத்தம் எழுப்பியும் வெடி வெடித்தும் யானையை விரட்ட முயன்றார்கள்.

வெடிச் சத்தம் கேட்டு அச்சம் அடைந்த யானை, வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தது. அதனால் அனைவரும் அச்சத்துடன் ஓடினார்கள். அப்போது வேட்டைத் தடுப்புக் காவலரான முத்துராஜ் என்பவரை யானை தாக்கியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலை மீட்ட அதிகாரிகள்
உடலை மீட்ட அதிகாரிகள்

அதன் பின்னர் ஒற்றை யானை அவரது உடலுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தது. அதை விரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இரவு முழுவதும் யானை அங்கேயே நின்றதால் உடலை எடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறினார்கள்.

வேட்டைத் தடுப்புக் காவலரின் உடலைக் காட்டுக்குள் இருந்து இன்று காலை எடுக்க முடிந்தது. உடனடியாக அவரது உடலை தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு சென்றார்கள்.

அதிகரிக்கும் யானை - மனித எதிர்கொள்ளலுக்கு தீர்வு என்ன? - ஒரு விரிவான அலசல்!

யானை தாக்கி வேட்டைத் தடுப்புக் காவலர் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு