மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூழையார் கடல் பகுதியில் மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், வனப்பாதுகாவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் முன்னிலையில் நேற்று 1,700 ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து மாவட்ட வனப்பாதுகாவலர் ஜோசப் டேனியல் கூறுகையில், ``வேட்டங்குடி ஊராட்சி கூழையாரில் வனத்துறையின் சார்பில் ஆமை முட்டை பொரிப்பகம் பராமரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அழிந்து வரும் இனமான ஆலிவர் ரெட்லி எனும் கடல் ஆமைகள் பல்லாயிரம் மைல்கள் கடந்து வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் இரவு நேரங்களில் முட்டை இட்டுச் செல்லும். இந்த முட்டைகளின் இனப்பெருக்கத்துக்கு நாய்கள், நரிகள் மற்றும் மனிதர்களால் ஆபத்துள்ளது. எனவே, கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, ஆமை முட்டை பொரிப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் சீர்காழி வனச்சரகத்தில் ஆமை முட்டை பொரிப்பகத்தில் 32,000 முட்டைகள் சேகரிக்கப்பட்டு 15,572 ஆமைக் குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளன.
இதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூழையார் கடலில் 1,700 ஆலிவர்ரெட்லி ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. கடலில் விடப்படும் ஆமைக் குஞ்சுகள் 8 வருடங்கள் கழித்து இதே கடற்கரைப் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்கு வரும்.

இதன் ஆயுள் காலம் 150 ஆண்டுகள் முதல் 450 ஆண்டுகள் வரை. இது கடலின் அடியில் காணப்படும் பாசி இனங்களைத் தின்று மீன்களின் பெருக்கத்துக்கு வழி செய்கிறது. மீன்களின் இனப்பெருக்க காலமான டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கடற்கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் மீன்பிடிக்கத் தடை செய்யப்பட்டிருந்தும், மீனவர்கள் இயந்திர படகுகளின் முன்பக்க ரக்கையில் மாட்டி அதிக அளவில் ஆமைகள் அடிபட்டு இறந்து கடற்கரையில் ஒதுங்குகின்றன.
கடலாமைகள் மீனவ நண்பன் என்பதால் இதைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.