Published:Updated:

`T23 புலியைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அதவைக்கு உண்டு!' - சிப்பிப்பாறை நாயின் பயிற்சியாளர்

சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த அதவை எனும் பெண் நாய்க்கு ஆட்கொல்லி புலியின் இருப்பிடத்தை அறியும் ஆற்றல் உள்ளது என அந்த நாய்க்கு பயிற்சியளித்த ஆண்டிபட்டி வனவியல் பயிற்சி கல்லூரி முதல்வர் ஆர்.ராஜ்மோகன் தெரிவித்தார்.

முதுமலை புலிகள் காப்பக்கத்தில் இருந்த T23 எனப்படும் ஆண் புலி நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் சுற்றித்திரிகிறது. இந்தப் புலி கடந்த இரண்டு மாதங்களாக 15 கால்நடைகள், மனிதர்கள் 4 பேரை வேட்டையாடியுள்ளது.

இதனால் வனத்துறையினர் கூண்டுகள், பறக்கும் கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள், காவல்துறையினர் உதவியுடன் புலியைப் பிடிக்கப் போராடி வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தியும் பிடிக்க முடியாததால் இந்த ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். இதற்கு தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களில் இருந்தும் வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் பயிற்சி
ஆண்டிபட்டியில் பயிற்சி
` T23' புலி தாக்கி மேலும் ஒருவர் பலி; அச்சத்தில் மக்கள்; வனத்துறை சுட்டுப்பிடிக்க உத்தரவு

இதனிடையே ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பயிற்சி பெற்ற சிப்பிப்பாறை இனங்களைச் சேர்ந்த அதவை, காளிங்கன் ஆகிய நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை ஆகிய நாய் இனங்கள் தமிழகத்தில் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட வீரமிக்க நாய் இனங்களாகும். இவை காட்டுப்பன்றி, முயல், மான் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டன. இவை முயல் வேகத்திற்கு இணையாக ஓடும் திறமை கொண்டவை. யானை, சிங்கம், புலியைக் கூட பயப்படாமல் எதிர்கொள்ளக் கூடியவை. இந்த நாயினங்களை வேட்டைக்கு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை தமிழ்நாடு வனவியல் பயிற்சிக் கல்லூரியில் நாட்டு நாயினங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதில் 8 நாய்கள் திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு, கஞ்சா கடத்தல், மரக்கடத்தல், தந்தங்கள் கடத்தல் உள்ளிட்ட விசாரணைகளுக்கு மோப்ப நாய்களாக பயன்படுத்த அனுப்பிவைக்கப்பட்டன. இதில் அதவை எனும் பெண் சிப்பிப்பாறையும், காளிங்கன் என்ற சிப்பிப்பாறையும் T23 புலியைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆர்.ராஜ்மோகன்
ஆர்.ராஜ்மோகன்

இதுகுறித்து வைகை அணை தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஆர்.ராஜ்மோகனிடம் பேசினோம். ``இந்த 8 நாய்களும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட ஒரிஜினல் நாட்டு நாய்கள். இந்த நாய்களை தேர்வு செய்யவே தனிக் குழு வைத்துள்ளோம். அவர்கள் குட்டியின் தாய், தந்தை வீரியமிக்கவையா, ஆரோக்கியமானதா என்பதை ஆய்வு செய்வர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு குட்டி கண் திறப்பதற்கு முன்னதாகவே வாசம் அறியும் திறன் உள்ளதா என்பதை அறிவோம். இவ்வாறு பலகட்ட சோதனைகளுக்கு பிறகே குட்டியைத் தேர்வு செய்வோம். இந்தக் குட்டிகளுக்கு யானையின் பெயர்களான அதவை, கடுவன், காளிங்கன், வளவன் எனப் பெயரிட்டோம்.

பயிற்சி கல்லூரி
பயிற்சி கல்லூரி
ஆபரேஷன் 'T23': எட்டிப்பார்க்காத வனத்துறை அமைச்சர்; கொதிக்கும் நீலகிரி மக்கள்!

இயல்பிலேயே வேட்டை குணம் கொண்ட இந்த நாயினங்களுக்கு கட்டுப்படுத்துதல், மோப்பப்பயிற்சி, தேடுதல் பயிற்சி, ஓட்டப்பயிற்சி, மனித வாசனையை அறிதல் என 5 கட்டப் பயிற்சிகளை 3 மாதங்கள் அளிக்கிறோம். கடந்த பிப்ரவரி முதல் மே வரை எங்களிடம் பயிற்சி பெற்ற அதவை மிகவும் துடிப்பானது. எதற்கும் அஞ்சாதது. அதற்கு வாரத்திற்கு 4 நாள்கள் மாமிசம், முட்டை, பால் கொடுக்கிறோம். பிற நாள்களில் வழக்கமான சாப்பாடு கொடுத்தோம். பயிற்சி நடக்கும் இடத்திற்கு அருகே மான் கூட்டங்கள் இருந்தாலும் அறிவுமிக்க அதவை தனது பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தும். ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் மிகவும் உறுதுணையாக இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ளதால் பிடிப்பதில் சிரமம் இருக்கும். இருப்பினும் புலியின் இருப்பிடத்தை அறியும் ஆற்றல் அதவைக்கு உள்ளது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு