Published:Updated:

கோவையில் ஒரே மாதத்தில் உயிரிழந்த 4 பெண் யானைகள் - விசாரணை கோரும் சூழலியல் ஆர்வலர்கள்!

குருபிரசாத்

கோவை ஆனைகட்டி, தடாகம் பகுதிகளில் ஒரே மாதத்தில் நான்கு பெண் யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

elephant death
elephant death

கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை, தடாகம் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள், உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம்.

elephant
elephant

இந்நிலையில், மாங்கரை வனத்துறை சோதனைச்சாவடி அருகே, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் யானை ஒன்று சோர்வாகப் படுத்துள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். இந்த யானையுடன் அதன் குட்டி யானையும் சேர்ந்து வந்திருந்தது. கீழே படுத்திருந்த தாய் யானையைச் சுற்றி, குட்டியானை அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது. பிறகு, குட்டி யானையை விரட்டிவிட்டு கால்நடை மருத்துவர் மூலம் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

forest officers
forest officers

ஆனால், சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த மாதம், இதே பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் யானைகள் உயிரிழந்தன.

மேலும், கடந்த புதன்கிழமை மற்றொரு பெண் யானை உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது நான்காவதாக மற்றொரு பெண் யானை அதே பகுதியில் உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

elephant death
elephant death

தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளால் யானைகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நான்கு பெண் யானைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.