Published:Updated:

` நன்னியைவிட்டு அவர்களால் பிரிய முடியவில்லை!' -சுவிஸ் தம்பதியை நெகிழவைத்த கேரள தெருநாய்

கால்நடை மருத்துவமனையில் `நன்னி’
கால்நடை மருத்துவமனையில் `நன்னி’

கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் மீது சுற்றுலாப் பயணியின் கடைக்கண் பட்டதால், சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைச் சிறுவர்கள் கல்லால் அடிப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல மூணாறு பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வரையிலும் ஒரு தெருநாய் சுற்றித் திரிந்தது. தற்போது அந்த நான்கு மாதக் குட்டி நாயின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. 

`தாயை இழந்து தவித்த ஆட்டுக்குட்டிகள்!' -தாயுள்ளத்தோடு பாலூட்டி வளர்க்கும் தூத்துக்குடி நாய்

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ஆலன், ஜானி ஆகியோர் மூணாறில் குட்டி நாய் ஒன்றைப் பார்த்தபோது அது வாஞ்சையுடன் வாலை ஆட்டிக்கொண்டு அருகில் வந்திருக்கிறது. உடல் முழுவதும் அழுக்காக இருந்ததால் அந்த நாயைக் குளிப்பாட்டுவதற்காக தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

ஹோட்டலில் நாயைக் குளிப்பாட்டியதும் வெளியே அனுப்ப முயன்றபோது, இருவரிடமும் அன்பு காட்டிய நாய் அவர்களையே சுற்றி வந்துள்ளது. அதனால், அந்த நாயை தங்களோடு சுற்றுலா மையமான வர்கலா என்ற இடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள். ஆலனும் ஜானியும் நாயின் மீது அதிக அன்பு கொண்டதால் அதை தங்களோடு சுவிட்சர்லாந்துக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்தனர். 

representational image
representational image

அந்த நாய்க்குட்டிக்கு `நன்னி’ (மலையாள மொழியில் ’நன்றி’ என்று அர்த்தம்) எனப் பெயரிட்ட இருவரும், அதைக் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ``நாய்க்கு கழுத்தின் பின்பக்கத்தில் `மைக்ரோ சிப்’ பொருத்தப்பட்டது. ரேபிஸ் தடுப்புக்காக ஊசி போடப்பட்டது. ஒன்பது நோய்களுக்கான ஊசி மற்றும் மருத்துகள் செலுத்தப்பட்டன’’ என்கிறார், மாவட்ட கால்நடை மருத்துவரான ஷைன்குமார்.

சுவிட்சர்லாந்து நாடு ரேபிஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டிருப்பதால், வெளிநாடுகளில் இருந்து விலங்குகளைக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளன. அதனால் ரேபிஸ் தடுப்பூசி மட்டுமல்லாமல், இனியும் ரேபிஸ் நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும்வகையில், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியதும் அவசியம். 

நாயின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே நாயை அழைத்துச் செல்ல முடியும்.
ஆலன், ஜானி

அதனால் நன்னியின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசோதனை முடிந்து வர ஒரு மாதகாலம் ஆகக்கூடும் என்பதால், அதன் பின்னர் நன்னியை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆலன், ஜானி ஆகிய இருவரும் தங்களின் இந்திய சுற்றுலாவை முடித்துக்கொண்டு இந்த வாரத்தில் திரும்பிச் செல்வதாக இருந்தது. ஆனால், நன்னி நாயின் அன்பு காரணமாக இருவரும் தங்கள் பயணத்திட்டத்தை இரு வாரங்கள் தள்ளி வைத்துள்ளனர். இந்த மாதம் இறுதியில் ஜானியும் ஆலனும் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள். 

`விலை ரூ.8 கோடி!' - 2 வாரத் தேடல்; உரிமையாளரைத் தவிக்கவிட்ட அரியவகை நாய்

நன்னியைத் தங்களுக்கு அறிமுகமான ஒருவரின் பொறுப்பில் விட்டுச் செல்லும் இருவரும் ஏப்ரல் மாதம் மீண்டும் திரும்பி வந்து நன்னியைத் அழைத்துச் செல்ல இருக்கிறார்கள். இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும், சுவிஸ் சுற்றுலாப் பயணிகளுக்கு கேரளாவில் பாராட்டு குவிந்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு