Published:Updated:

நன்கொடை வேண்டாம்! 3,000 மாடுகளைப் பராமரிக்கும் வெள்ளியங்கிரி கோசாலை!

கோசாலையின் வெளிப்புறத் தோற்றம்
பிரீமியம் ஸ்டோரி
கோசாலையின் வெளிப்புறத் தோற்றம்

பசுமடம்

நன்கொடை வேண்டாம்! 3,000 மாடுகளைப் பராமரிக்கும் வெள்ளியங்கிரி கோசாலை!

பசுமடம்

Published:Updated:
கோசாலையின் வெளிப்புறத் தோற்றம்
பிரீமியம் ஸ்டோரி
கோசாலையின் வெளிப்புறத் தோற்றம்

’இவ்விடம் வெள்ளியங்கிரி ஆண்டவருடைய கருணையால், எந்தவித நிதிப் பற்றாக்குறையும் இல்லாமல் நன்றாகச் செயல் படுகிறது. அதனால் பார்வையாளர்கள் யாரும் எந்தவித நன்கொடையும் அளிக்க வேண்டாம். நாங்கள் நன்கொடையை வாங்குவதும் இல்லை. யாராவது நன்கொடை அளிக்க விரும்பினால், அடிமாட்டுக்குச் செல்லும் எந்தவித உபயோகம் இல்லாத ஒரு மாட்டைக் கசாப்புக் கடையிலிருந்து வாங்கி இங்கு அளிக்கலாம். இறுதி மூச்சுவரை அந்த மாட்டை நாங்கள் நன்றாகப் பராமரிப்போம்.’

கோசாலையின் வெளிப்புறத் தோற்றம்
கோசாலையின் வெளிப்புறத் தோற்றம்

கோயம்புத்தூர் மாவட்டம், நரசீபுரம் அருகே உள்ள வெள்ளியங்கிரி கோசாலையில்தான் இப்படியொரு வாசகம் எழுதப்பட்டுள்ளது. இங்கு, நாட்டு மாடுகள், ஜெர்ஸி மாடுகள், எருமை மாடுகள், மீட்கப்பட்ட அடிமாடுகள் என 3,000 மாடுகளுக்கு மறுவாழ்வளித்துப் பாதுகாத்து வருகின்றனர். இதைச் செய்து வருவது கோவை ஶ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவகணேஷ். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், 50 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்தக் கோசாலை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் பல இடங்களில் கைவிடப்பட்ட மாடுகளைக் கருணையுடன் பராமரித்து மகத்தான சேவையைப் புரிந்து வருகிறார் சிவகணேஷ். கோசாலையில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு, மாடுபிடி வீரர்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். மாடு சாணம் போட்ட, சில நிமிடங்களிலேயே அதைச் சுத்தப்படுத்தி விடுகின்றனர். 3,000 மாடுகள் இருந்தாலும் பளீச் சுத்தத்தில் ஆச்சர்யப்படுத்தியது வெள்ளியங்கிரி கோசாலை.

பிரகாஷ்
பிரகாஷ்

அங்கு பணியாற்றி வரும் பிரகாஷ் என்பவரிடம் பேசினோம். “இங்க 60 பேர் வேலை செய்றோம். நாட்டு மாடு, ஜெர்ஸி, கன்றுக்குட்டினு ஒவ்வொரு பிரிவா பிரிச்சு தனித்தனி ஷெட் அமைச்சுருக்கோம். ஒரு ஷெட்டுக்கு 50 மாடுகள் வீதம், 50 ஷெட்டுகள் இருக்கு. காலைல 6 மணிக்கு வந்து வேலையை ஆரம்பிப்போம். முதல்ல சாணி அள்ளுவாங்க. அது முடிஞ்சதும் தீவனம் கொடுப்போம். அப்புறம் தண்ணீர் காட்டி, மாடுகளுக்குச் சத்து பவுடர் கொடுப்போம். மாடுக ஒரே இடத்துல நின்னா கால் புடிச்சுக்கும்னு சுழற்சி அடிப்படையில, தினமும் ஒரு ஆள், 20 மாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. 40 ஜல்லிக்கட்டுக் காளைங்க வெளியேதான் இருக்கும். தினமும் டாக்டர் வந்துடுவார். சோர்வா இருக்குற மாடுகளுக்குச் சிகிச்சை கொடுத்துருவார். மாலை 5.30 மணிக்கு மறுபடியும் தீவனம் கொடுப்போம்” என்றார்.

சிவகணேஷ்
சிவகணேஷ்

கோசாலை உரிமையாளர் சிவகணேஷிடம் பேசினோம். “நம்ம நாட்டுல மாடுகளைக் கடவுளாகக் கும்பிடுறோம். பசு மாடு மகாலட்சுமியாகவும், காளை மாடு நந்தி தேவராகவும் வணங்குறோம். ஆயிரக்கணக்கான மாடுகளைக் கேரளா மாதிரியான வெளிமாநிலங்களுக்குக் கொண்டு போறாங்க. அப்படி அடிமாட்டுக்குப் போற மாடுகளைப் பார்க்கும்போது, என் மனதுக்குள்ள ஒரு வலி உண்டாகும்.

அடிமாடுங்கற பேர்ல நல்லமாடுகளையும் கொண்டுபோய் மாட்டுக்கறிக்காக விற்பனை செய்றாங்க. இப்படிக் கொண்டு போறப்ப லாரிகளை மடக்கி, அதிகாரிகள்கிட்ட ஒப்படைச்சி வழக்கு போடவெச்சோம். ஆனா, அதிகாரிகள் தரப்புல போதிய ஒத்துழைப்பு இல்லாததால இதைத் தடுக்க முடியல. இந்தியாவோட செழிப்பை அழிக்க நினைச்ச பிரிட்டிஷ்காரங்க, மாடுகளை அழிச்சா செழிப்பு தன்னால போயிடும்னு நினைச்சு அதைச் செய்தாங்க. ஆனா, சுதந்திர இந்தியாவிலும் அதைச் செய்றதைப் பார்க்கும்போதுதான் வேதனையா இருக்கு.

கோசாலையில் மாடுகள்
கோசாலையில் மாடுகள்

பிறந்து 15 நாள் ஆன கன்னுக்குட்டிகளைக்கூட அடிமாடுங்கிற பேர்ல கறிக்காகக் கொண்டுபோற அநியாயம் நடக்குது. இதையெல்லாம் பார்த்துட்டுதான் சிறு முயற்சியாக 1994-ம் ஆண்டு வெள்ளியங்கிரி கோசாலை ஆரம்பிச்சேன். கோசாலை ஆரம்பித்த பிறகும் பல தடைகள். அதையெல்லாம் சமாளிச்சுதான் இதை நடத்திட்டு வர்றேன். கோசாலையில் எருமை மாடு, பசுக்கள், நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டுக் காளைகள்னு 3,000 மாடுகள் இருக்கு. இதுதவிர ஒரு ஒட்டகம், ஒரு குதிரையும் இருக்கு.

மாடுகள்
மாடுகள்

மாடுகளில் பால் கறக்க மாட்டோம். வீரியம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜல்லிக் கட்டுக் காளைகளுக்குக் கோதுமை, தவிடு, சோளம், உளுந்து போன்ற உணவுகளைக் கொடுக்கிறோம். மற்ற மாடுகளுக்கும் எங்களால முடிந்த உணவுகளைக் கொடுக்குறோம். இங்க 210 ஜல்லிக்கட்டுக் காளைகள் இருக்கு.

வெளிப்புறத் தோற்றம்
வெளிப்புறத் தோற்றம்

என்னுடைய வாழ்க்கையில பல இரவுல கோசாலையிலதான் இருந்திருக்கிறேன். இதையெல்லாம், விருதுக்காகவோ, பாராட்டுக் காகவோ நான் செய்யல. என்னுடைய ஆத்ம திருப்திக்காக மட்டும்தான் இதைச் செய்றேன். இதுவரைக்கும் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாடுகளை நான் காப்பாற்றியிருக்கேன்.

தமிழகம் முழுவதிலிருந்தும் கைவிடப்பட்ட, அடிமாட்டுக்குப் போற மாடுகள், உடல்நிலை குன்றிய மாடுகள் கோசாலைக்கு வந்துகிட்டுதான் இருக்குது. யார் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், மாடுகளைப் பாதுகாப்பதற்காக எங்களைத் தொடர்புகொள்ளலாம். மாடுகளுக்கு அடைக்கலம் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார் உறுதியான குரலில்.