என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!

நாய்  பூனை புறா மீன் முயல்
பிரீமியம் ஸ்டோரி
News
நாய் பூனை புறா மீன் முயல்

நாய், பூனை, புறா, மீன், முயல்

தொகுப்பு: நவி

செல்லப் பிராணிகள் வளர்ப்பு, பலரின் வீடுகளிலும் ஓர் அங்கம். பெட் அனிமல்ஸ் வளர்ப்பதில் ஆர்வம், தனிமைக்கான மருந்து, குழந்தைகளின் சந்தோஷத்துக் காக என செல்லப் பிராணிகள் வளர்க்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!

எத்துணை ஆசையாக செல்லப் பிராணிகளை வளர்க்கிறோமோ, அத்துணை அக்கறையுடன் அவற்றுக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், அந்த வழிமுறைகளைப் பற்றி பலர் அறிவதில்லை.

குழந்தைகள், பெரியவர்கள், அப்பார்ட்மென்ட்களில் இருப்பவர்கள்... யார், யார் என்னென்ன பெட் அனிமலை வளர்க்கத் தேர்ந்தெடுக்கலாம்?

செல்லப் பிராணிகளுக்கான பயிற்சிகள் எவ்வாறு அளிக்கப்பட வேண்டும்?

உணவு, பூச்சி மருந்து, தடுப்பூசி... அட்டவணை என்ன?

நாய்களுக்கான இனச்சேர்க்கை... கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

புறா, மீன், முயல் வளர்ப்பவர்கள்... விழிப்புணர்வு பெற வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

இப்படி, செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் எழும் கேள்விகள், சந்தேகங்கள், பராமரிப்புக்கான வழிகளை இந்த இணைப்பிதழில் தொகுத்திருக்கிறோம். பெட் அனிமலுடனான உங்கள் பொழுதுகள் இன்னும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் அமையட்டும்!

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
GlobalP

செல்லப் பிராணிகளை வீடுகளின் கட்டமைப்பு, இடவசதிக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்!

‘`நமக்காக வீடுகளில் காத்திருக்கும் செல்லப் பிராணிகளின் மீதான நம் அன்பு, கருணை, பாசம் மட்டுமல்ல. நம்மை நாமே இன்னும் சிறந்தவராக உணர்ந்துகொள்ளவும் அது உதவும்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல மற்றும் நோய்த்தடுப்பு மூத்த மருத்துவரான

ம.விஜயபாரதி, ``ஒருவர் தன் வீட்டின் கட்டமைப்பு, இடவசதி ஆகியவற்றை மனதில் வைத்து செல்லப் பிராணிகளை வாங்கத் திட்டமிடுவதுதான் மிகச் சரியான விஷயம்; ஏனெனில், ஊர்ப்பகுதிகளில் வளர்ப்பதுபோல சென்னை போன்ற நகரங்களில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது எளிதானதல்ல'' என்கிறார்.

‘`எல்லா காலத்திலும், பலரும் விரும்பும் நாய்கள் வளர்ப்பைப் பொறுத்த வரை, நாயின் அளவு, நாயின் வயது, நாயின் வகை மற்றும் அவை செயல்படும் விதம் ஆகிய முக்கியமான நான்கு விஷயங்களை மனதில் வைத்து, நாம் வசிக்கும் இடத்தில் வைத்து வளர்க்க எந்த வகை நாய் சரியாக இருக்கும் என்று பார்த்துத் தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

வீட்டுச் செல்லப் பிராணியான நாயைப் பொறுத்தவரை, மெட்ரோ நகரங்களில் சிறிய மற்றும் நடுத்தர வகை நாய்களான ஷிஹ் சூ, போலோக்னீஸ், பொமேரேனியன் போன்ற வகை நாய்களையே அதிகம் வளர்க்கிறார்கள். ஏனெனில், குறைவான எடைகொண்ட இந்தக் குட்டி நாய்களின் குரைப்புச் சத்தம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்காது. அடுக்குமாடி வகை வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வளர்க்க இதன் சுபாவம் ஏற்றதாக இருக்கும்.

கூடுமானவரையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. செல்லப் பிராணிகளைவிட, கூடவே அடுத்த கூண்டுக்குள் (ஃபிளாட்டுக்குள்) குடியிருக்கும் மனிதர்களின் நலனும் முக்கியம். அவர்களுக்குத் தொந்தரவு தராமல் இருப்பது நல்லது.

இடவசதி இருப்பவர்கள் பெரிய நாய் வகைகளில் லேப்ரடார், ஜெர்மன் ஷெஃபர்ட் ஆகியவற்றை வளர்த்து வருகிறார்கள்.

ஊர்ப்பகுதிகளில் வேட்டை நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற நாய்களை வளர்ப்பது சரியாக இருக்கும். ஏனெனில், ஓடி விளையாடுவதற்கும், அவற்றின் இயற்கையான உடல்வாகுக்கான பயிற்சிகளுக்கும் மெட்ரோ நகரங்களும் டைல்ஸ் தரைகளும் ஏற்றதல்ல.

இளவயது நாய்களை வீட்டின் அனைத்துத் தளங்களிலும் வைத்து வளர்க்கலாம். ஆனால், வயதான நாய்களுக்கு வீட்டின் தரைத்தளமே சிறந்தது. வயது மூப்பினால் ஏற்படும் எலும்பு பலவீனமும், உடல் எடை அதிகரிப்பும் படிகள் ஏறி, இறங்குவதை சிரமமாக்கிவிடும்.

நாட்டு வகை நாய்களைக் குறைவான இடவசதி கொண்ட இடத்தில் வளர்க்க முற்படும்போது, கால் வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்னைகளால் அவை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

நாய்களுக்கு எலும்பு வளைதல், உடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டும் எனில், இதுபோன்ற அம்சங்களில் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
mantosh

பூனைகள் வளர்ப்பது சமீபகாலமாக மெட்ரோ நகரங்களில் அதிக வழக்கமாகி வருகிறது. பூனை வளர்ப்புக்குப் பொருளாதார ரீதியாக அதிக செலவில்லாமலும், இடவசதி குறைவாக இருந்தாலே போதுமானதாக இருப்பதும்தான் இதற்குக் காரணம்.

உங்கள் வீட்டு இடவசதிக்கும் கட்டமைப்புக்கும் ஏற்ற வகையில் செல்லப் பிராணியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், செல்லப் பிராணிகளுக்கு ஏற்ற வகையில் வீட்டைச் சுத்தமானதாகவும் வசதியானதாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதுதான். உங்களைச் சார்ந்தே வீட்டுக்குள் நுழைந்திருக்கும் விலங்குக் குழந்தைக்கு, பாதுகாப்புணர்வை அளிப்பதுதான் பெட் பேரன்ட்டாக உங்களின் முதல் வேலை.

Potty training எனப்படும் கழிவகற்றப் பழக்குதல் மற்றும் பிற பயிற்சிகள்!

நாய்களுக்கான பயிற்சிகள் அளிப்பது மிக முக்கியமானது. வீட்டுக்கு புதியவர்கள் வருவதைப் பார்த்து மிரளாமல் இருப்பது, பதற்றமடைந்து மிக அதிகமாகக் குரைக்காமல் இருப்பது போன்ற விஷயங்களைப் பழக்குவது, Potty Training எனப்படும் கழிவகற்றப் பழக்குவது போன்ற விஷயங்களை சிறு வயதிலேயே பழக்குவதுதான் சிறந்தது.

நாய்க்குட்டிகளின் மூளை வளர்ச்சி 4 முதல் 16 வாரங்களுக்குள்ளாக மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்தக் காலத்துக்குள் நாம் கொடுக்கும் எந்தப் பயிற்சியையும், மிக சீக்கிரமாகவே அது கிரகித்துக்கொள்ளும்.

இதில் நாம் செய்ய வேண்டி யது என்னவெனில், ஒவ்வொரு பயிற்சியின்போதும் நாய்க் குட்டிக்கு குழப்பம் ஏற்படாத வகையில், ஒரே விதமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். Come, Go, Run போன்ற சிறிய வார்த்தைகளை, ஒரே விதமாகப் பயன்படுத்தி வந்தால், விரைவாகவே நாம் நினைக்கும் பயிற்சியைக் கற்றுக் கொள்ளும்.

ஒவ்வொரு முறை நாய் நாம் சொல்வதைக் கேட்டு நடக்கும் போதும், பரிசாக ஒரு குறைந்த கேலரி குக்கீ போன்றவற்றை அளிக்கும்போது, அடுத்தடுத்த பயிற்சிகளை உற்சாகமாக மேற்கொள்ளும்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
PeopleImages

பலரும் பொதுவாகக் கேட்கும் கேள்வி என்னவென்றால், ஏன் நாய்க்குட்டிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றன என்பதுதான். நாய்க்குட்டிகளின் சிறுநீர் பிளாடர் சிறிய அளவிலானது என்பதே அதற்கு காரணம். இதற்குத் தீர்வு, சரியான பயிற்சியில்தான் இருக்கிறது.

வீட்டில் ஓர் இடத்தை ஒதுக்கி, காகிதம், டிஷ்யூ பேப்பர் போன்ற வற்றை அங்கு போட்டு வைத்து, அதுதான் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்குமான இடம் என்பதை, நாய்க்குப் பழக்க வேண்டும். சிறு சிறு வார்த்தைகளைப் பயன் படுத்தி, அதைப் பழக்குவதன்மூலம் இதைச் சுலபமாகச் செய்ய முடியும்.

இதற்காகவே பயிற்சி கிட்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, ஒரு ஸ்பிரேவை நாய்க்குட்டியை நுகரச் செய்துவிட்டு, அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு, அங்குதான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கினால், அந்த இடத்தை மனதில் பதிந்துகொண்ட நாய்க்குட்டி வேறு எந்த இடத்திலும் சிறுநீர், மலம் கழிக்காது. இதுபோன்ற டிரெயினிங் கிட்களும் பெருமளவில் கைகொடுப்பதாக இருக்கும்.

நகரங்களில் நாய் வளர்ப்பவர்கள், தங்கள் நாயின் கழிவகற்றும்போது மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாயை ‘வாக்’ கூட்டிச் சென்று தெருவில் மற்றவர்களின் வீடுகளுக்கு முன் கழிவகற்றினால் பிரச்னையும் வரும், சுகாதாரமும் பாதிக்கப்படும். எனவே, நாய்களுக்கான கழிப்பறை வசதியையும் தங்கள் வீடுகளிலேயே ஏற்படுத்துவது முக்கியம்.

பயிற்சி உடல் அளவிலும், மன அளவிலுமானதாக இருக்க வேண்டும். ஒரே ஒரு மொழியில், அடிப்படை ஒழுக்க முறைகளுக்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்.

நாயை உட்கார வைப்பது, நாய்க்கு ஒரு பெயரை வைத்து, அதை அறிந்துகொள்ளச் செய்வது ஆகியவற்றை 8 வாரங்களில் அளிக்க வேண்டும்.

10 வாரங்களில், கழுத்துக்கு மணியிட்டு, உணவு இடும்வரை பொறுமை யுடன் உட்காரும் வகையிலான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்.

மெதுமெதுவாக, வெளியில் செல்லும்போது முறையற்று ஓடாமல் சரியாக நடந்துசெல்லுதல், காரில் ஏறுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கலாம்.

செல்ல நாய், 6 மாதங்களுக்குள் கொடுத்த அனைத்துப் பயிற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டாலே, வீட்டில் இருப்பவர்களுடன் எந்தப் பிரச்னையும் இன்றி வாழ்நாள் முழுவதும் ஒன்றிவிடும்.

கீழே கிடக்கும் சிறு சிறு பொருள்களை விழுங்கிவிடாத வண்ணம், ஒழுங்குமுறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தட்டிக்கொடுத்து நாய்க் குட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

இவை அனைத்தையும் அவற்றால், 6 மாதங்களுக்குள் கற்றுக்கொள்ள முடியும்.

13 முதல் 16 மணிநேரம் வரை நாய்கள் தூங்கும் நேரத்தைக் கொண்டிருக்கின்றன. வயதான நாய்கள், இன்னும் கொஞ்சம் அதிக நேரம் தூங்குகின்றன. அதற்கான அவகாசத்தை அவற்றுக்குக் கொடுக்க வேண்டும்.

உணவு, உணவு இடைவேளை!

பொதுவாக, நாய்க் குட்டிகளுக்குத் தாய்ப் பால் மிகவும் முக்கிய மானது. `கொலஸ்ட்ரம்' எனப்படும் தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் உயிர்ச்சத்து மிகவும் முக்கியமானது. குறைந்தது ஆறு வாரத்துக்காவது தாய்ப்பால் அளிக்கப்பட வேண்டும்.

பலரும் 20 நாள்களிலேயே நாய்க்குட்டிகளை வாங்கிவிடுகிறார்கள். குறைந்தது 40 முதல் 42 நாள்களுக்குப் பிறகுதான் நாய்க்குட்டிகளை வாங்க வேண்டும். 40 நாள்களுக்கு மேல், உணவுக்கு சில முறைகள் உள்ளன. வெளிநாட்டு வகை நாய்களுக்கு நிறுவனங்கள் ‘ஸ்டார்ட்டர் டயட்’ எனப்படும் உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள சரியான அளவைப் பின்பற்ற வேண்டும்.

வீட்டு உணவுகளைக் கொடுப்பதாக இருந்தால், கேரட், பீன்ஸ் போன்ற வெந்த உணவுகளை, அரிசிச் சோறு, தயிர் சாதம் போன்ற உணவுகளை அளிக்கலாம்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், சில நாய்களுக்கு `லேக்டோஸ் இன்டாலரன்ஸ்' எனப்படும் குறைபாடு இருக்கலாம். பால் பொருள்களை அந்த நாய்க்குட்டிகளால் செரிக்க முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படுவதுபோல், செரிமானப் பிரச்னை ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால், பால் பொருள்கள் அவற்றுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என்பதை ஒன்றிரண்டு முறை சோதித்துவிட்டு, அதன் பிறகு, அதைத் தொடர்வது நல்லது.

நம்மைப்போலவே நாய்களுக்கும் ஊட்டச்சத்து உணவு அவசியம். மினரல்கள், வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட் போன்றவற்றை சரிவிகித அளவில் அவற்றுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து ஒரே வகை உணவைக் கொடுத்தால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் தொற்றுநோய்களில் ஆரம்பித்து தோல் நோய்கள், அனீமியா, அனீமியாவால் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் குறைவது என்று நாய்க்கு உடல் உபாதைகள் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

காலை உணவை 7 மணிக்குத் தொடங்கினால், மாலை 6 மணிவரை உணவு அளிக்கலாம். 3 மாதங்கள் வரை, 5 முதல் 6 இடைவேளைகளில் உணவைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். 3 முதல் 6 மாதங்கள் வரை, 4 இடைவேளைகளில் உணவைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதற்குப் பின்பு 6 மாதங்களுக்கு மேல், இரண்டு முறைகளாக உணவைப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

குடற்புழு நீக்க மருந்து..!

நாய்களின் சுபாவமே எதைப் பார்த்தாலும் மோப்பம் பிடிப்பதுதான். இதனால் நாசி வழியாகக் கிருமிகள் உள்ளே சென்று தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நாய்க்கு குடற்புழு நீக்க மருந்து கொடுப்பதுடன், தவறாமல் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

இரண்டு வாரத்தில் இருந்து Deworming, அதாவது குடற்புழு நீக்க மருந்து கொடுப்பது தொடங்கப்பட வேண்டும். 3 மாதம் வரை, 15 நாள்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, நாய்க்குட்டி பருவமெய்தும் வரை, ஒவ்வொரு மாதமும் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும்.

பிறகு, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மருந்து அளித்து வர வேண்டும். இதனால் நாய்களில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களைத் தடுக்கலாம். முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகளைத் தடுக்கலாம். குடற்புழு நீக்க மருந்து சரியாக அளிப்பதுடன், சரியான தடுப்பூசி முறையைப் பின்பற்றும்போது உடல் எடை சரியாக அதிகரிக்கும். நாயும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதேபோல, இனச்சேர்க்கைக்கு முன்னும், பின்னும் குடற்புழு நீக்க மருந்து அளிப்பது முக்கியமானதாகும். ஏனெனில், தாயிடமிருந்து குட்டிக்குத் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

நமக்கும் நாய்க்குட்டிகளுக்கும் இடையிலான உளவியல் பலன்கள் அற்புதமானவை. செல்லப்பிராணிகள் என்னும் குழந்தைகள் நம்மைச் சார்ந்துள்ளது. நேசிக்கிறது. நாம் நாள் முழுவதும் களைத்து வரும்போதும், பல்வேறு அழுத்தங்களால் சோர்வாகியிருந்தாலும், அதைச் செல்லப் பிராணிகளால் தீர்க்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம் பணிச்சூழல் அழுத்தம் குறைந்ததாக மாறுவதை நம்மால் உணர முடியும்’’ என்கிறார் விலங்குகள் நல மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவர் ம.விஜயபாரதி.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!

சுயநலன், பகட்டு வேண்டாமே... தத்தெடுத்தலே தீர்வு!

The Puchu diaries என்ற பெயரில் தனது செல்லப் பிராணிகளின் தினசரி செயல்பாடுகளை மிகவும் நுட்பமான வகையில் ஆவணப்படுத்திவரும் எழுத்தாளர் அபர்ணா கார்த்திகேயன், தெரு நாய்களைத் தத்தெடுக்க வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறுகிறார்.

‘`இந்தியாவில் 60 மில்லியன் தெரு நாய்கள் உள்ளன. மனிதர்கள் தெரு நாய்களால் தாக்கப்படுவது குறைய வேண்டும் என்றால் வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்ப்பதை விடுத்து, உள்ளூர் நாய்களை வளர்க்க முன் வர வேண்டும். அதுவும் குறிப்பாக, தெரு நாய்களைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும்.

தெருவில் திரியும் ஒரு நாய் சராசரியாக அதன் வாழ்நாளில் 60 குட்டிகள் வரை ஈன்றுவிடுகிறது. அதையே வீட்டில் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தால் அவற்றுக்கு முறையாகத் தடுப்பூசி வழங்கியும், கருத்தடை செய்தும் பராமரிக்கலாம். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு ஜெர்மன் ஷெஃப்பர்ட், ஹஸ்கியை வளர்ப்பதைக் காட்டிலும் தெரு நாய் வளர்ப்பில் செலவு மிகமிகக் குறைவானது. நாய்களை வளர்ப்பதால் நிறைவான அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர்களாகிறோம்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், வெளிநாட்டு நாயை வாங்கி அதற்கேற்ற தட்பவெப்பத்தைத் தருவதற்காக குளிர்சாதன வசதியை அமைத்துப் பராமரிக்கும் செயலை நான் முட்டாள்தனம் என்றே சொல்வேன். நான் இரண்டு தெரு நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கிறேன். அவற்றைப் பராமரிப்பதில் பெரிய செலவேதும் இல்லை.

மும்பையில் நான் வாழும் பகுதியில் இருக்கும் அனைத்துத் தெரு நாய்களுக்கும் தடுப்பூசியும், கருத்தடை ஊசியும் போடப்பட்டுள்ளன. ஆனாலும், தினசரி எங்கிருந்தாவது புதிதாகக் குட்டிகளைக் கொண்டு வந்து விட்டுச்செல்கிறார்கள். தத்தெடுத்துப் பராமரித்தல் மட்டுமே ரேபீஸ் உள்ளிட்ட இன்னும் பல நோய்களில் இருந்து சமுதாயத்தைப் பாதுகாக்க சிறந்த வழி” என்று தனது சமூக வலைதளம் மூலமாகத் தெரிவித்திருக்கிறார்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
undefined undefined

பூனைகளின் எச்சம் Vs கர்ப்பிணிகள்..!

‘‘நாய்களைப் போலவே பூனைகளையும் பறவைகளையும் வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது’’ என்கிற விலங்குகள் நல மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவர் ம.விஜயபாரதி, பூனை வளர்ப்பு பற்றித் தொடர்ந்தார்.

‘`பூனையைப் பொறுத்தவரை, 8-வது வாரத்திலும், 12 முதல் 16-வது வாரத்தில் இரண்டாவது வாரத்திலும் தடுப்பூசி போடப்பட வேண்டும். அதற்குப் பிறகு, வருடத்துக்கு ஒருமுறை தடுப்பூசி போடப்பட வேண்டும்.

பூனைகளின் கழிவகற்றும் இடத்தை அம்மோனியா அடங்கிய என்சைம் சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், பூனைக்கழிவில் இருக்கும் `டாக்சோப்ளாஸ்மா', வீட்டில் கர்ப்பிணிகள் இருந்தால், கருச்சிதைவு போன்ற பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தினமும் பூனையைக் குளிப்பாட்ட வேண்டும் என்பதில்லை. அதிகமான வெந்நீர் குளியல் அவற்றின் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தலாம். தினமும் பூனைகளின் ரோமங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். நகங்கள், காதுகளில் அழுக்கு சேராமல் அவற்றைப் பாதுகாப்பது அவசியம். நாய்களின் உணவை அவற்றுக்கு அளிக்காமல் முறையான வீட்டு உணவுகளை அளிப்பதே போதுமானது.

பூனை அசைவம் விரும்பிச் சாப்பிடும். என்றாலும், முழுக்கவே அசைவ உணவளிக்கத் தேவையில்லை. வீட்டில் அசைவம் சமைக்கும்போது அதற்கும் அசைவ உணவளித்தால் போதுமானது. மற்ற நாள்களில் வீட்டு உணவையே அதற்கும் வழங்கலாம்.

பூனையின் நுண்ணிய முடி, சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவது இன்னும் ஆராய்ச்சி நிலையில் உள்ளது. என்றாலும், டஸ்ட் அலர்ஜி, ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் பூனையைச் செல்லப் பிராணியாக வளர்ப்பதைத் தவிர்க்கலாம்.’’

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
Kashish Taneja

புறா வளர்க்க விருப்பமா?

‘`தற்போது புறாக்கள் வளர்ப்பதும் அதிகரித்து வருகிறது. வீட்டு வளர்ப்புக்கென்று சில புறா இனங்கள் இருக்கின்றன. ஹோமர், மாயுர்பெங்கி, ஸிராசி, லஹோர், கிரிபாஸ், லோடல் போன்ற 10-க்கும் மேற்பட்ட வகைகள் அன்பாக வளர்க்கப்படுகின்றன’’ என்று சொல்லும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி மாணவர் விக்னேஷ் கிருஷ்ணன், புறா மற்றும் மீன் வளர்ப்பில் தனது பெட் பேரன்ட் அனுபவங்களை ஆலோசனைகளாக வழங்குகிறார்.

‘`புறா வளர்ப்பு என்றாலே கூண்டு முக்கியமானது. அவை அடைவதற்கு சிறிய கூண்டுகள் போதும். கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பெட்டிகளை வாங்கி பலகைகளை வேண்டிய அளவில் பிரித்து கூண்டாக மாற்ற முடியும்.

ஒரு கூண்டில் ஒரு புறாவுக்கு 30 செ.மீ நீளம், 30 செ.மீ உயரம் மற்றும் 30 செ.மீ அகலம் இடவசதி தேவைப்படும். ஒவ்வோர் அறையிலும் 2 புறாக்கள் தங்கும் வகையில் அறையின் அமைப்பு இருக்க வேண்டும். அறை யின் கீழ்ப்பகுதியானது

5 அங்குல அளவுள்ள பலகையால் தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் அடை காப்பதற்காக புறாக்கள் இட்டுள்ள முட்டையோ, அறையில் பொரிக்கப்பட்ட குஞ்சுகளோ அறையை விட்டு கீழே விழாமல் தடுக்கப்படும்.

புறாக்களை வீட்டு மொட்டை மாடிகளில் வளர்த்தால் பூனைகளுக்கு இரையாகிவிடும் என்பதால், புறாக்கூண்டுகளை

பாதுகாக்க வீட்டையொட்டி வெளிப்புறம் இரும்பு வலை அடித்து மூடி இருக்க வேண்டும்.’’

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
Ja'Crispy

தொட்டி, கண்ணாடிக் குடுவைகளில் மீன் வளர்க்கும்போது..!

‘`பிற விலங்குகளைப் போலவே மீன்கள் வாழ்வதற் கும் சரியான தட்பவெப்பம் அவசியமானது. மீன் வளர்க்கப்போகிறோம் என முடிவெடுத்தவுடன் நீங்கள் சரியாக முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? எந்த வகை மீன் களை வாங்கப்போகிறீர்கள் என்பதையும், அவை எவ்வளவு வெப்பநிலையைத் தாங்கும் வகையிலான மீன்கள் என்பதையும்தான்.

நம்பகமான நிபுணர்களிடம் இருந்தும், செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களிட மிருந்தும் சரியான தகவல் களைப் பெற்ற பிறகு, அவற்றை வாங்கவும். மீன்கள் வாழ்வதற்கான நீரின்

பி.ஹெச் அளவு, வெப்பநிலை மற்றும் உணவு வகைகளை உறுதிப்படுத்திவிட்டு வாங்கவும்.

போர்க்குண சுபாவம் கொண்ட மீன்களாக இருந்தால், அவை தனியாக வளர்க்கப்பட வேண்டும். இல்லையெனில், அவை தொட்டியில் வாழும் மற்ற மீன்களை இரையாக்கிக்கொள்ளும் அல்லது தாக்கும்.

வண்ணமீன் வளர்ப்பு என்பது வெறும் அலங்காரத்துக்கானதாக மட்டுமே அல்லாமல், ஆத்மார்த்தமானதாக இருப்பது மிகவும் அவசியம். மீன் உலவுவதற்கான போதிய இடம் அளிக்கப்படுவதுடன், அவற்றுக்குப் போதிய அளவிலான ஆக்சிஜனும் வழங்கப்பட வேண்டும்.

சரியான வெப்பநிலை, தண்ணீரின் பி.ஹெச் அளவு சரியாக இருப்பது மற்றும் ஆக்சிஜன் வழங்கப்பட்டாலும், மீன்களுக்கு இயற்கையான சூழல் அளிக்கப்பட்டால், அவை நீண்ட காலம் உயிர் வாழும் எனச் சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

மீன் வளர்க்கப்படும் தொட்டி மற்றும் பானையை சுத்தமாக வைத்துக் கொள்வதும், சரியான வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் அதை வைப்பதும் மிக அவசியமானதாகும். தொட்டிக்கு அடியில் இருக்கும் படிமங்களையும் உப்புகளையும் சரியாகச் சுத்தப்படுத்தி, அதில் சரியான பி.ஹெச் அளவுடைய தண்ணீரை நிரப்புதல் மிக அவசியமானது’’ என்கிறார் விக்னேஷ் கிருஷ்ணன்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
Wavebreakmedia

குழந்தைகள் முயல் வளர்க்கலாமா, கூடாதா?

முயல் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த தகவல்களை வழங்குகிறார், திருவண்ணா மலையில் முயல் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மகேந்திரன்.

‘`முயலைச் செல்லப்பிராணியாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள், நிதி ரீதியாகவும், அவற்றுக்கான பொறுப்புகளை எடுத்துக்கொள்

வதிலும், பொறுப்புடன் இருக்க வேண்டியுள்ளது.

வெப்பநிலை, முயல் நகர்ந்து விளையாடுவதற்கான இடவசதி, கால நிலை ஆகியவற்றைக் கண்டிப்பாக கணக்கில் கொண்டாக வேண்டும்.

முயல் வளர்க்கத் தொடங்கிய பிறகு, வளர்ந்துவரும் சூழல் முயலுக்கு ஏற்றதாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். முயலை உங்கள் செல்லப்பிராணியாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள் எனில்,

1. காலநிலை மாறுதல்களில் இருந்து முயலைப் பாதுகாப்பதற்கான வசதிகள்.

2. சரியான உணவு மற்றும் குடிநீர்.

3. வலி அல்லது பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வசதிகள்.

4. நகர்வதற்கான இடவசதி.

இவற்றையெல்லாம் உறுதிப்படுத்த வேண்டும்.

18 வயதுக்கு மேலுள்ளவர் மட்டுமே முயலைப் பாதுகாக்கும் நபராக இருக்க வேண்டும். 8 வயதுக்குக் கீழ் இருக்கும் குழந்தைகள் முயலை கையாளக் கூடாது. ஒருவேளை குழந்தைகள் முயலைக் கையாண்டாலும், 18 வயதுக்கு மேலுள்ள நபர் முயலின் முதன்மைப் பாதுகாப்பாளராக இருக்க வேண்டும்.

முயலுக்காக ஏற்படுத்தப்படும் வசதி, காலநிலை மாறுதல்களில் இருந்து பாதுகாப்பதுடன், வெயில், மழை மற்றும் பூனை, நாய்,

வல்லூறு போன்றவற்றுக்கு இரையாகிவிடாமலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

முயலின் இயற்கையான சுபாவத்தின்படி, அதற்கு மறைந்துகொள்வதற்கான இடவசதி அமைத்துத் தரப்பட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட நுழைவு வசதியுள்ள வகையில் முயலுக்கு மறைவிடங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். காகித கோணிப்பைகள், மரப்பெட்டிகள், அடுக்குகள் அல்லது குழாய்கள் போன்றவற்றை மறைவிடமாக அமைத்துத் தந்திருக்க வேண்டும்.

முயலை சுத்தமாகப் பாதுகாப்பது எப்படி?

முயலை செல்லப்பிராணியாக வளர்க்கும் முயல் பெற்றோர், அதற்கு சுத்தமான, சுகாதாரமான சூழலை அமைத்துக்கொடுக்க வேண்டும். ஈரமான படுக்கையமைப்பை அகற்றி புதிய வைக்கோல்களால் அடிக்கடி இடத்தை வறண்ட நிலையில் வைக்க வேண்டும். சாப்பிடாமல் மிச்சம் வைக்கப் பட்ட உணவுகளை அகற்றி புதிய உணவுகள் வைக்கப்பட வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் வைக்கப்படும் பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட வேண்டும்.

முயலுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!

முயல்களுக்கு தினமும் ஒரு முறையாவது சீரான ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும். நல்ல தரமான புதிய பிண்ணாக்கு போன்ற உணவு எப்போதும் பகல் மற்றும் இரவு நேரங்களில் முயலுக்குக் கிடைக்க வேண்டும். முன்பு கொடுக்கப்பட்ட உணவிலிருந்து மாறுபட்ட ஓர் உணவைக் கொடுப் பதற்கு முன்பு பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பூஞ்சை அல்லது அசுத்தமான உணவை உடனடியாக அகற்ற வேண்டும்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
Vanshika Sharma

முயல்கள் தாவர உணவுமுறை

யைக் கொண்டவை. முயலுக்குப் பொருத்தமான உயர்ந்த நார்ச்சத்து உணவை வழங்குவதை உறுதி செய்வது உரிமையாளரின் பொறுப் பாகும். நார்ச்சத்து உணவுகள் அவற்றின் பற்களுக்கு உதவுவதுடன், ஆரோக்கியமான குடல் செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் செறி வூட்டலை வழங்குகின்றன.

‘`உங்களை அவை அறிந்துகொள்ளும் வழிகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். மனிதர்களைப்போல் அல்ல, உங்களைப் பற்றி அவை அறிந்துகொள்ள நினைக்கும் முயற்சிகளைப் பார்க்கும்போதே நீங்கள் மயங்கிவிடுவீர்கள். உங்களை புகழ்வதற்காக அல்ல, மயக்குவதற்காக அல்ல, உங்களை அறிந்துகொள்வதற்கான அவற்றின் முயற்சி அது. உங்களைப் பற்றிய சிறு சிறு விவரங்களையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்கின்றன. உங்கள்மீது வரும் வாசத்தை, அடுத்த அறையில் நீங்கள் நுழையும்போதே கண்டுகொண்டு அருகில் வருகின்றன. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், அந்தக் கண்டுகொள்ளலுக்கு ஒரு முடிவே இருப்பதில்லை. அவை நிரந்தரமானவை” - செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களை குறித்து அமெரிக்க எழுத்தாளர் ஏமி ஹெம்பெல் இப்படி எழுதுகிறார்.

முயல்களுக்கான உயர் நார்ச்சத்து அடங்கிய பொருள்கள்...

10% பச்சை இலை தாவரங்கள் (புரொக்கோலி, கல்யாண முருங்கை இலைகள், முட்டைகோஸ், வாட்டர் கிரெஸ், செலரி இலைகள் மற்றும் கேல்) மற்றும் காட்டு தாவரங்கள் (சிக்வீட், பிராம்பிள், ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெரி இலைகள் மற்றும் டேன்டேலியன்). பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படாத பாதுகாப்பான மரங்களிலிருந்து (ஆப்பிள், பேரிக்காய்) கிளைகளை முயலுக்கு மெல்வதற்குக் கொடுக்கலாம்.

முயல்களுக்கான சிறப்பு உணவு (துகள்கள் அல்லது நகட்) ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு ஒரு தேக்கரண்டி மட்டுமே கொடுக்கலாம். இந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படலாம்.

பழங்களை உணவாக அளிக்கலாம். ஆனால், சர்க்கரை அதிகம் இருப்பதால் எப்போதாவது மட்டுமே கொடுக்க வேண்டும்.

அனைத்து பச்சை உணவுகளையும் உணவளிப்பதற்கு முன்பு கழுவி உலர்த்த வேண்டும். பல தாவரங்கள் முயல்களுக்கு விஷத்தன்மை அளிக்கக் கூடியவை. முயல்களுக்கு நச்சுத்தன்மையற்றது என உறுதிப்படுத்தப்பட்ட தாவரங்களை மட்டுமே உணவாக அளிக்க வேண்டும்.

2 முதல் 4 வாரங்களுக்குப் பிறகு, உணவில் மாற்றங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பசுமையான தாவரங்களை தாய்ப்பால் கொடுக்கும்போது அல்லது அதற்குப் பின்பு அறிமுகப்படுத்த வேண்டும்.

பொருத்தமற்ற உணவுகள் முயல்களுக்கு உடல் பருமன், பற்கள் மற்றும் குடல் பிரச்னைகளை ஏற்படுத்தும். முயலின் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது அல்லது நோயிலிருந்து மீளும்போது முயல்களுக்குப் பிற உணவுத் தேவைகள் இருக்கலாம். அதையும் கவனிக்க வேண்டும்.

உங்கள் கால்நடை அல்லது தகுதிவாய்ந்த செல்லப்பிராணி பராமரிப்பு நிபுணரிடம் ஆலோசனை பெற்று உணவு மாற்றங்களைச் செய்யவும். உங்கள் அனைத்து முயல்களும் ஒரே நேரத்தில் வசதியாக உணவு உண்ணக்கூடிய வகையில் உணவுக் கொள்கலன்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.

முயலுக்கு Viral Haemorrhagic Disease (VHD) எனப்படும் ரத்த அணு தொடர்பான நோய்க்கான தடுப்பூசி போடப்பட வேண்டும். கருவுறுதல், நோயுறுதல் போன்ற நிலைகளில் தகுந்த கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகள் அளிக்கப்பட வேண்டும். மேலும், காட்டு முயல்களுடன், வளர்ப்பு முயல்கள் ஒன்றாக வைக்கப்படக் கூடாது’’ என்கிறார் மகேந்திரன்

நம் விலங்குக் குழந்தைகளைக் கொஞ்சுவதுடன், அவற்றுக்கான முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பையும் உறுதிசெய்வோம்!

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!
amandafoundation.org

உங்க வீட்ல இடம் இருக்கா?

பொதுவாக, நாயை வளர்ப்பதற்கான இடவசதியை முடிவு செய்வதற்கு ஒரு கணக்கு பின்பற்றப்படுகிறது. நாயின் மூக்கு நுனி முதல் வாலின் தொடக்கப்பகுதி வரை யிலான இன்ச் அளவைக் கணக்கிடவும். பின்னர், இந்த சூத்திரத்தின்படி இட வசதியைக் கணக்கிடவும்...

(நாயின் நீளம் + 6) × (நாயின் நீளம் + 6) = தேவைப்படும் இடவசதி (சதுர இன்ச்களில்). தேவைப்படும் இடவசதி சதுர இன்ச்களில்/144 = தேவைப்படும் இடவசதி சதுர அடியில். இதைத்தான் Floor space for a dog எனச் சொல்கிறார்கள்.

உதாரணமாக, நாயின் நீளம் 28 இன்ச்கள் என்று வைத்துக்கொள்வோம்.

(28 + 6 = 34) × (28 + 6 = 34) = 1,156 சதுர இன்ச்கள். 1,156/144 = 8.028 சதுர அடி. உங்கள் வீட்டில் அந்த நாய்க்கு இந்த இடத்தை ஒதுக்கித்தரக்கூடிய அளவுக்கு இடம் இருக்க வேண்டும்.

செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் முழுமையான வழிகாட்டி!

நாய்க்கு சாக்லேட் கொடுக்கலாமா?

சாக்லேட், வெங்காயம் போன்றவற்றை நாய்க்குட்டிக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எப்போதாவது ஒன்று, இரண்டு சாக்லேட்டை அளிக்கலாமே தவிர, அதைப் பழக்கமாக்குவது மிகவும் தவறு. அதிலி ருக்கும் Theobromine நாய்களுக்கு ஏற்றதல்ல. பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதேபோல, நாம் சாப்பிடும் உணவில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்தால், அதை நாய்க்கு வழங்கக் கூடாது. காரணம், நாய்க்கு வெங்காயம் செரித்து வெளியேறாது உள்ளேயே தங்கிவிடும். பல நாள்களாக இப்படி சேரும்போது, அது விஷமாக மாறி விடும். இதனால் தோல் பிரச்னை முதல் உள்ளுறுப்புகள் பாதிப்புவரை ஏற்படலாம்.

தூக்கி வீசப்பட்ட நாய்... நினைவிருக்கிறதா?

2016-ம் ஆண்டு, குன்றத்தூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த இரண்டு மருத்துவ மாணவர்கள், குன்றத்தூரில் தங்கள் வீட்டு மாடியிலிருந்து ஒரு நாயைத் தூக்கி வீசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த நாயைத் தத்தெடுத்து ‘பத்ரா’ என்னும் பெயரளித்து வளர்க்கும் விலங்கு நல ஆர்வலர் ஷ்ரவண் கிருஷ்ணன் பேசுகிறார்.

‘‘தெருவில் திரிந்துகொண்டிருக்கும் விலங்குகளின் நலன்தான் எனக்கும், என்னோடு இயங்கும் குழுவினருக்கும் நோக்கம். விலங்குகளையும், அதன் கண்களையும் பார்க்கும்போது உங்களுக்குள் இருப்பவர் யார் என்பதையும், உங்களின் அன்பின் நிலையையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும். அவை குழந்தைகள். எந்த குற்றச் செயலையும் செய்யாத, அன்பைத் தவிர வேறு எதையும் கேட்காத குழந்தைகள். அவற்றைத் தத்தெடுத்துக்கொள்பவர்கள் அவற்றுக்கான அன்பையும் பராமரிப்பையும் உறுதிசெய்வோம்” என்கிறார்.

புறா கூண்டுக்கு கிருமிநாசினி!

‘`புறாக்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இருக்கும். இருப்பினும் சில நேரங்களில் வெள்ளைக் கழிச்சல், காலரா, அம்மை, இன்ஃபுளுயன்சா, குடற்புழுக்களின் தாக்கம் போன்ற நோய்கள் தாக்கலாம். புறாக்களை இந்த நோய்களின் தாக்குதலில் இருந்து காக்க புறா கூண்டை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்ய வேண்டும். புறா வளர்ப்பைப் போலவே லவ் பேர்ட்ஸ் வளர்ப்பையும் விரும்புகிறார்கள் மக்கள்’’ என்கிறார் மருத்துவர் ம.விஜயபாரதி.

மீன் தொட்டியில் பாசி தேவையா?

தொட்டியின் பக்கவாட்டு பகுதி களையும், அடிப்பகுதியையும் சுத்தம் செய்வதுடன், அதில் அதிக பாசி படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து மீன்களுக்கும் பாசி தேவை யானதாக இருப்பதில்லை. தேவையற்ற நீர்நிலை தாவரங்களை அகற்றுவதும் முக்கியமான விஷயமாகும். தேவையற்ற பாசி மற்றும் நீர்த் தாவரங்களை அகற்றுவது சரியான பி.ஹெச் அளவை தண்ணீரில் உறுதிப்படுத்தும்.