வளர்ப்புப் பிராணிகளில் நம்மிடம் மிக நெருக்கமாக உள்ள பிராணி நாய்தான். பலர் அதை வீட்டில் ஒருவராகக் கருதி வளர்த்து வருகின்றனர். மற்ற பிராணிகளைவிட நாய்கள்மீது ஒரு நெருக்கமான உறவு பலருக்கும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்றைய காலங்களில் நாய்கள் பல சாகசங்கள் புரிந்து சாதனைகள் படைத்து வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிரீன்கேர்ஸில் பகுதியில் வாழும் சிவாவா (Chihuahua) எனும் வகையைச் சேர்ந்த டோபி கீத் (TobyKeith) எனும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.
2001-ம் ஆண்டு ஜனவரி 9 தேதி பிறந்த இந்த நாய்க்கு தற்போது 21 வயதாகிறது. இந்த நாய் மொத்தம் 21 ஆண்டுகள் 66 நாட்கள் இதுவரை வாழ்ந்துள்ளது. எனவே இது உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. இதன் உரிமையாளர் கிசெலா (Gisela) என்பவர் இந்த நாயை ஒரு வயதான தம்பதியிடமிருந்து வாங்கியுள்ளார். அவர்களுக்கு வயதாகி விட்டதால் அதை பராமரிக்க முடியாமல் தன்னார்வலரான கிசெலாவிடம் கொடுத்துள்ளனர்.
அந்த நாயை கிசெலா வாங்கிய பின் தான் தெரிந்துள்ளது இது மிகவும் வயதான நாய் என்று. பின்னர் ஆச்சர்யமடைந்த கிசெலா இதை கின்னஸ் சாதனையில் இடம் பெறச் செய்துள்ளார். இது பற்றிக் கூறிய அவர், "அதற்கு 20 வயது என தெரிந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டோம். டோபிகீத் எனது சிறிய மெய்க்காப்பாளர். எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்கிறார். நாங்கள் டிவி பார்க்கும்போது என் மீது படுத்துக்கொள்கிறார்" என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருந்தார்.
