Published:Updated:

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் துடைத்து அழிக்கப்பட்ட சோக வரலாற்றுக் கதை!

இயற்கையான வாழ்விடம்
இயற்கையான வாழ்விடம் ( Pixabay )

இந்தியா முழுக்கப் பரவி வாழ்ந்த சிவிங்கிப் புலிகள் சுத்தமாகத் துடைத்தழிக்கப்பட்ட கதையைக் காலப்பயணம் செய்து கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

``சாகிப்! உலகின் அதிவேகமான விலங்கைச் சுட்டுவிட்டீர்கள். அவற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மொத்தமாக வேட்டையாட உடனே குதிரையில் ஏறுங்கள். சீக்கிரம்..."

19-ம் நூற்றாண்டில் 21-வது ஹஸ்ஸர்ஸ் (21st Hussars) என்ற ரெஜிமென்டின் காலனெல்லாக இருந்தவர் ஈ.ஏ.ஹார்டி. ஒருநாள் அவர் வேட்டைக்குச் சென்றிருந்தபோது நாள் முழுக்க வேட்டையாட எந்த விலங்குமே கிடைக்கவில்லை. நாளின் இறுதியில், ஒரு பெரிய சிங்கமே வேட்டையாடக் கிடைத்துவிட்டதாக அவரின் உதவியாளர் கூற, குறிப்பிட்ட இடத்தை நோக்கிக் கிளம்பினார்கள். அங்கு படுத்துக் கொண்டிருந்தது பெரிய சிங்கம் கிடையாது, ஆறு சிவிங்கிப் புலிகள் என்பது நெருங்கும்போதுதான் அவர்களுக்குத் தெரிந்தது.

உலகிலேயே அதிவேகமான பாலூட்டியாக இவை அறியப்படுகின்றன.
உலகிலேயே அதிவேகமான பாலூட்டியாக இவை அறியப்படுகின்றன.
Pixabay

அவற்றைப் பார்த்ததுமே ஹார்டி ஒரு சிவிங்கிப் புலியைச் சுட்டுவிட்டார். அதனால் அவை சிதறி ஓடியபோதுதான், ஹார்டியை நோக்கி அவர் இப்படிக் கத்தினார். 1878-ம் ஆண்டு ஹார்டி, தான் எழுதிய `நம் குதிரைகள் (Our Horses)' நூலில் இந்த அனுபவத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

உலகின் அதிவேகமான பாலூட்டியாக அறியப்படும் சிவிங்கிப் புலிகள். அவை, இப்போது ஆப்பிரிக்காவில் சில ஆயிரங்களில் வாழ்கின்றன. இப்போது, இந்தியத் துணைக்கண்டத்தில் எங்குமே காணப்படாத இவை, ஒருகாலத்தில் வடக்கிலிருந்து கிழக்கே தக்காண பீடபூமி முழுக்கப் பரவி வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த வரலாற்றை மீட்டெடுக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பு குறித்துப் பார்ப்பதற்குமுன், இந்தியா முழுக்கப் பரவி வாழ்ந்த சிவிங்கிப் புலிகள் சுத்தமாகத் துடைத்தழிக்கப்பட்ட கதையைக் காலப்பயணம் செய்து கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

அவை அழிந்ததற்கு முக்கியக் காரணமாக வேட்டை அறியப்படுகின்றது. ஆனால் வேட்டை மட்டுமே காரணமில்லை. உலகிலேயே ஓர் உயிரினம், தன் வம்சத்தை வளர்க்க வாய்ப்பே கிடைக்காமல் அழிக்கப்பட்டது என்றால் அப்படியோர் அவல நிலைக்குச் சிவிங்கிப் புலிகளை உதாரணமாகக் காட்டலாம்.

ஹார்டி எழுதிய நூல் வெளியான அடுத்த நூறு ஆண்டுகளிலேயே அந்த இனம் மொத்தமாக அழிக்கப்பட்டது. முன்னர் இந்தியச் சிவிங்கிப் புலி என்றழைக்கப்பட்டுக் கொண்டிருந்த அவை, அழிந்த பின்னர்தான் ஆசியச் சிவிங்கிப் புலி என்ற பெயரையே பெற்றன.

ஒரு சிவிங்கிப் புலியை முழுமையாகப் பழக்கப்படுத்தி, கட்டளைக்குக் கீழ்படியும் அடிமையாக மாற்ற அன்று அவர்களுக்குத் தேவைப்பட்டது வெறும் ஆறு மாதங்கள்!
டபுள்யூ.டி.பிளான்ஃபோர்டு, ஆங்கில இயற்கையியலாளர்

வரலாற்றில் இதுவரை அழிந்துபோன உயிரினங்களின் சோகக் கதைகளில் மனித இனத்தின் ஈவு இரக்கமற்ற வேட்டை முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஆனால், வேட்டை மட்டுமே சிவிங்கிப் புலிகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கவில்லை. இவற்றின் அழிவுக்கு அதைவிட இரண்டு மிக முக்கியக் காரணங்கள் இருந்தன. ஒன்று, சிவிங்கிப் புலிகளை உங்களால் எளிதில் பழக்கப்படுத்திவிட முடியும். அவை நாய்களைப் போல் நன்றாகப் பழகிவிடும். புலி, சிங்கம், சிறுத்தை போன்றவற்றுக்கு மனிதர்களிடம் இருக்கும் எச்சரிக்கை உணர்வு சிவிங்கிப் புலிகளுக்குக் கிடையாது. ஆகவே அவை பிடிக்கப்பட்டு, உலகின் இரண்டாவது வேகமான பாலூட்டியாக அறியப்படும் வெளிமான்களை (Black bucks) வேட்டையாடப் பயன்படுத்தினார்கள். அதற்காக ஆயிரக்கணக்கில் பிடிக்கப்பட்டன.

12-வது நூற்றாண்டில் வாழ்ந்த அரசர் மூன்றாவது சோமேஷ்வராவின் காலகட்டத்தில், இவற்றைப் பிடித்து பழக்கப்படுத்தி வேட்டையாடும் பழக்கம் தீவிரமாக இருந்திருக்கிறது. அதற்காக, ஆயிரக்கணக்கில் காடுகளில் பொறி வைத்துப் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. அடுத்து வந்த நூற்றாண்டுகளில் பெரியவை மட்டுமன்றி, குட்டிகளும் அதேபோல் பிடிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக வளர்க்கப்பட்டன. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முகலாய பேரரசர் அக்பருடைய தனிப்பட்ட மிருகக்காட்சி சாலையில் மட்டுமே சுமார் 9,000 சிவிங்கிப் புலிகள் வளர்க்கப்பட்டதாகப் பதிவுகள் கூறுகின்றன. நன்கு பழக்கப்பட்ட ஒரு சிவிங்கிப் புலி 19-ம் நூற்றாண்டிலேயே 150 முதல் 250 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளார் படைத்தளபதியும் வேட்டைக்காரருமான மேஜர் ஹென்றி.

இந்த அளவுக்குப் பழக்கப்படுத்தி வளர்த்திருந்தால், அவை எண்ணிக்கையில் மாடுகள், ஆடுகள், நாய்களைப் போல் அதிகரித்திருக்க வேண்டுமல்லவா! ஏன், விரைவில் அழிந்துபோயின?

அதற்கான விடைதான், இரண்டாவது காரணம். பழக்கப்படுத்தினால், நன்கு பழகி அன்போடும் நன்றியோடும் நடந்துகொள்ள முடிந்த சிவிங்கிப் புலிகளால், அடைப்பிடத்தில் இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போனதுதான் காரணம். முதலும் கடைசியுமான பதிவாக 1613-ம் ஆண்டில் பேரரசர் ஜஹாங்கீருடைய வாழ்க்கை வரலாற்று நூலில், அவர் வளர்த்த ஒரேயொரு சிவிங்கிப் புலி மட்டுமே அப்படிச் செய்தது. அதைத் தவிர அவை அடைப்பிடத்தில் இனப்பெருக்கம் செய்ததற்கான ஆதாரம் ஒன்றுகூட உலகளவில் கிடைக்கவில்லை.

வேட்டை
வேட்டை
Pixabay

நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்த இந்தச் செயல், 18-ம் நூற்றாண்டில் அதன் உச்சகட்டத்தை எட்டியது. பிரிட்டிஷ் தன் ஆட்சியை இந்தியாவில் வலுப்படுத்துவதற்கு முன்னமே இந்நிலப்பரப்பிலிருந்த பெரும்பான்மைச் சிவிங்கிப் புலிகள் வளர்ப்பு உயிரினங்களாக மாறிவிட்டன. மற்றவற்றில் வேட்டை போக மிகச் சொற்பமே காட்டில் எஞ்சியிருந்தன. அவை காட்டில் காணாமல் போகத் தொடங்கியதும், அதைத் தொடர்ந்து அவை வாழ்கின்ற புல்வெளிக் காடு, கரடு போன்ற காடுகளும் காணாமல் போகத் தொடங்கின. நாய்களைப் போல் அன்பாகப் பழகக்கூடியதாக இருந்ததாலும் மிக வேகமாகச் செயல்பட்டுத் திறம்பட வேட்டையாடியதாலும் அவை மிக அதிகமாகப் பழக்கப்பட்டன.

ஒரு சிவிங்கிப் புலியை முழுமையாகப் பழக்கப்படுத்தி, கட்டளைக்குக் கீழ்ப்படியும் அடிமையாக மாற்ற, அன்று அவர்களுக்குத் தேவைப்பட்டது வெறும் ஆறு மாதங்களே என்று பதிவு செய்துள்ளார் ஆங்கில இயற்கையியலாளர் டபுள்யூ.டி.பிளான்ஃபோர்டு.

இப்படி அதீதமாகப் பழக்கப்படுத்தி அப்படி வளர்க்கப்பட்டாலும்கூட, இயற்கையான வாழ்விடத்தில் அல்லாமல் செயற்கையான வளர்ப்பில் அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை. ஆகவே, ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வளர்க்கப்பட்டவை, அவற்றின் அடுத்த சந்ததியை உருவாக்கவே முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டன. ஓர் இனம் கொல்லப்படுவதைவிடக் கொடுமையானது, அடுத்த தலைமுறையை உருவாக்க விடாமல் தடுப்பது. அப்படியொரு கொடூரமான தண்டனையை எந்தப் பாவமும் செய்யாமலே சிவிங்கிப் புலிகள் அனுபவித்தன.

சிவிங்கிப் புலிகள்
சிவிங்கிப் புலிகள்
Pixabay

வரலாற்றில் ஒரேயோர் இடத்தைத் தவிர எங்குமே அவை ஆட்கொல்லி விலங்காகச் சுட்டிக்காட்டப்படவில்லை. விசாகப்பட்டினத்தில் கவர்னருடைய ஏஜெண்டாக இருந்த ஓ.பி.இர்வின் என்பவர் 1880-ம் ஆண்டு, வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சிவிங்கிப் புலியால் கொல்லப்பட்டார். இப்படியான மிக அரிதான ஓரிரு சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆட்கொல்லியாகப் பிரகடனப்படுத்த முடியாதுதான். இருப்பினும், ஆங்கிலேயர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. குட்டிகள் முதல் பெரியவை வரை மிகத் தீவிரமாக வேட்டையாடத் தொடங்கினார்கள். ஒவ்வொன்றுக்கும் ஏற்றாற்போல் பரிசுகளும் வழங்கப்பட்டன. அவற்றுக்கான மரணப் படுக்கையைத் தயார் செய்ததில் அடுத்த பங்கை இந்த வேட்டை வகிக்கத் தொடங்கியது.

இந்தியாவின் கடைசி சிவிங்கிப் புலி 1947-ம் ஆண்டில், அன்று மத்தியப் பிரதேசத்திலிருந்த, இப்போது சட்டீஸ்கரில் இருக்கும் சுர்குஜா என்ற பகுதியில் மகாராஜா ராமானுஜ் பிரதாப் சிங் டியோவினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாகச் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக 1952-ம் ஆண்டு, இந்தியாவில் இந்த இனம் அழிந்துவிட்டதாக இந்திய அரசாங்கத்தால் சொல்லப்பட்டது. ஆனால், 1967 மற்றும் 1968-ம் ஆண்டில் அப்போதைய மத்தியப் பிரதேசத்தின் கோரியா மற்றும் சுர்குஜா பகுதிகளில் இரண்டு தென்பட்டதாக ஜார்கண்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் ரஸா கஸ்மி கூறுகிறார். கூடுதலாக, ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள டன்டோ காலன் என்ற கிராமத்தில் 1975-ம் ஆண்டு தென்பட்டதாகவும் அவர் சிவிங்கிப் புலி குறித்துக் கடந்த ஆண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இன அழிவு
இன அழிவு
Pixabay

ஆப்பிரிக்காவில், பரந்து கிடக்கும் திறந்தவெளிப் புல்வெளிக் காடுகள் மட்டுமே அவற்றுக்கான வாழ்விடம். ஆனால், இந்தியாவில் புதர்க்காடுகள், வறண்ட மற்றும் பாதி வறண்ட புல்வெளிக் காடுகள், திறந்தவெளிக் கரடுகள் என்று பல்வேறு நிலவியல் அமைப்புகள் அவற்றுக்கு ஏற்றவாறு உள்ளன. இருந்தும் இங்கு அவை மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது உலகளவில் ஆசிய சிவிங்கிப் புலிகள் ஈரானில் மட்டுமே வெறும் 50 என்ற எண்ணிக்கையில் வாழ்கின்றன.

ஆப்பிரிக்கச் சிவிங்கிப் புலிகள் ஐ.நா தரவுப்படி, 7,100 மட்டுமே எஞ்சியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈரானிலிருந்து சில சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்து இங்கு மறு அறிமுகம் செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்குப் பதிலாக, ஏற்கெனவே அங்கு வாழ்ந்து, இப்போது அழிந்துவிட்ட சிங்கம் மற்றும் புலிகளில் சிலவற்றைக் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டது.

ஈரானிலும்கூட அவை மிகச் சொற்பமான எண்ணிக்கையிலேயே இருந்ததால், இந்தப் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. ஆகவே, ஆப்பிரிக்காவிலிருந்து இங்கு அறிமுகம் செய்யலாமென்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய காட்டுயிர் மையம் செய்த விடாமுயற்சியின் பலனாக, இப்போது உச்சநீதிமன்றம் நமீபியாவிலிருந்து 50 சிவிங்கிப் புலிகளை முதல்கட்டமாகக் கொண்டுவர உத்தரவிட்டுள்ளது. அவை வாழ்வதற்குத் தகுந்த இடமாக 7 பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் மூன்று பேர் அடங்கிய வல்லுநர் குழுவை அமைத்து இந்திய காட்டுயிர் மையத்தோடு இணைந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது.

இயற்கையான வாழ்விடம்
இயற்கையான வாழ்விடம்
Pixabay

ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்துப் போவதால், இந்த மறு அறிமுகம் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வின் முடிவில், அவற்றுக்குத் தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் இந்தியாவில் சிவிங்கிப் புலி அறிமுகம் செய்யப்படாலமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிமுகம் செய்யப்படும்போது, அவற்றுக்கு முன்னர் நேர்ந்த கொடுமை ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கும் மத்திய காடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் அதிகமாகவே உள்ளது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு