Published:Updated:

"பாம்புக்கடி மூடநம்பிக்கைகள்... சிகிச்சையை தாமதப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்!" - மருத்துவர் எச்சரிக்கை

பாம்பு

"பாம்பு கடித்த இடத்தைக் கடித்து விஷத்தை உறிஞ்சித் துப்புவது போன்ற மிக மோசமான கற்பனைகளையெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து மறந்துவிட வேண்டும். பாம்பு கடிப்பது என்பது டாக்டர் ஊசி போடுவதுபோல..."

"பாம்புக்கடி மூடநம்பிக்கைகள்... சிகிச்சையை தாமதப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்!" - மருத்துவர் எச்சரிக்கை

"பாம்பு கடித்த இடத்தைக் கடித்து விஷத்தை உறிஞ்சித் துப்புவது போன்ற மிக மோசமான கற்பனைகளையெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து மறந்துவிட வேண்டும். பாம்பு கடிப்பது என்பது டாக்டர் ஊசி போடுவதுபோல..."

Published:Updated:
பாம்பு

சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் சுல்தான் பத்தேரி எனும் ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பாம்பு கடித்த பத்து வயதுப் பள்ளி மாணவியைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததால், அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பாம்பு கடித்ததைப் பள்ளி ஆசிரியரிடம் கூறியும் முறையான மருத்துவ சிகிச்சைக்கு அந்தப் பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்யாததே குழந்தை இறந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பாம்பு
பாம்பு

பொதுவாக, பாம்புக் கடிக்கு சிகிச்சையளிப்பதற்கு முன்பாக என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. மாறாக, மூடநம்பிக்கைகளே பெருகிக் கிடக்கின்றன. இதனால் பல உயிர்களை இழந்து வருகிறோம். ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டால் செய்ய வேண்டிய சிகிச்சை என்ன என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறார், சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஏ.பி. ஃபரூக் அப்துல்லா.

"கேரளத்தில் நடந்த இந்த நிகழ்வின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை என்னவென்றால் எந்த ஒரு விஷக்கடியையும் அலட்சியம் செய்யக்கூடாது என்பதே. பொதுவாக கிராமப் பகுதிகளில் வயல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீடுகள் இருக்கும். இந்தப் பகுதிகளில் மக்களோடு மக்களாகப் பல ஊர்வன இனங்களும் வாழ்ந்து வரும். அவற்றுள் ஓணான் முதல் பாம்புகள் வரை அனைத்தும் அடங்கும். மனிதனும் இதுபோன்ற விஷஜந்துகளும் மிக அருகில் வாழும்போது அடிக்கடி ஒன்றோடு ஒன்று சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகிறது. எந்தப் பாம்பும் திரைப்படங்களில் காட்டுவதுபோல வீடு தேடிவந்து பழி தீர்ப்பதில்லை. அதன் பாதையில் நாம் குறுக்கிட்டாலோ, அதன் மீது நம் கால்பட்டாலோதான் அவை நம்மைத் தாக்கும்.

ஏ.பி. ஃபரூக் அப்துல்லா
ஏ.பி. ஃபரூக் அப்துல்லா

இயற்கையின் படைப்பில் பாம்புகளுக்கு விஷம் தரப்பட்டிருப்பது மனிதனைக் கொல்வதற்கு அல்ல. பாம்பு தனது இரையான தவளை போன்ற உயிரினங்களை மூர்ச்சை அடையச்செய்ய அந்த விஷத்தைப் பயன்படுத்தும் அல்லது தனது எதிரிகளான கீரிப்பிள்ளை, கழுகு, மயில் போன்றவற்றிடமிருந்து காத்துக்கொள்ள அதைப் பயன்படுத்தும்.

மனிதர்களைத் தீண்டும் அனைத்துப் பாம்புகளும் விஷத்தன்மையோடு இருப்பதில்லை. மருத்துவமனைக்கு வரும் 80% பாம்புக்கடி நோயாளிகள் விஷமற்ற பாம்புகளால் தீண்டப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

விஷப்பாம்புகளில் இந்தியாவில் அதிகம் காணப்படுபவை நான்கு வகைகள்:

  1. நாகப்பாம்பு (Cobra)

  2. கட்டு விரியன் (Common krait)

  3. கண்ணாடி விரியன் (Russel viper)

  4. சுருட்டை விரியன் (Saw scaled viper)

பாம்பு
பாம்பு

இவற்றில் நாகப்பாம்பு மற்றும் கட்டுவிரியனுடைய விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி மூர்ச்சையாக்கி மரணத்தை அளிக்கும் Neurotoxic வகையைச் சேர்ந்தவை.

கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய இரண்டும் ரத்தம் உறையாமல் தடுத்து அதன் மூலம் மரணத்தை வரவழைக்கும் Haematoxic வகையைச் சேர்ந்தவை. இந்தப் பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது ஒரே நேரத்தில் மனிதனை மரணமடையச் செய்யும் அளவுக்குப் பல மடங்கு விஷத்தைச் செலுத்திவிடும் தன்மை கொண்டவை.

பாம்பு
பாம்பு

பாம்பு கடித்தால் அந்த இடத்தில் இரண்டு பல் பதிந்த தடம் (bite marks/fang marks) இருக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. எந்தப் பாம்பும் திட்டமிட்டு மனிதனைக் கடிப்பதில்லை. தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தற்காப்புக்காகக் கடிக்கின்றன. அந்தச் சமயத்தில் நிறுத்தி நிதானமாக இரண்டு பல்லும் படுமாறு கடிக்க நேரமிருக்காது. ஆகவே பல நேரங்களில் ஒரு பல் மட்டும் படலாம்.

பாம்புக்கடிக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன?

பாம்பு
பாம்பு

ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது என்றால் விஷமற்ற ஏதோ ஒன்றுதான் கடித்திருக்கும் என்று அசட்டையாக இருக்கக்கூடாது. சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவாகாத வரை அனைத்துக் கடிகளையும் விஷப்பாம்பு கடிகளாகவே நினைத்துச் செயலாற்ற வேண்டும். பாம்பு கடித்த இடமாக இருந்தால் ஒரு புள்ளியோ இரண்டு புள்ளிகளோ அருகருகில் இருக்கும். தேள்கடியிலும் ஒரு புள்ளிதான் இருக்கும்.

பாம்பு கடித்த இடத்தைக் கடித்து விஷத்தை உறிஞ்சித் துப்புவது போன்ற மிக மோசமான கற்பனைகளையெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்து மறந்துவிட வேண்டும். பாம்பு கடிப்பது என்பது டாக்டர் ஊசி போடுவதுபோல... பாம்பு கடித்த நொடியிலிருந்து விஷம் ரத்தத்தில் கலந்து அதன் வேலையைத் தொடங்கிவிடும். அவ்வாறு வாய் வைத்து உறிஞ்சுபவரின் வாயில் புண் இருந்தால் அதன் வழியே விஷம் அவருக்குப் பரவி, அவரும் மோட்சம் அடைய வேண்டிய நிலை வரலாம்.

பாம்பு
பாம்பு

சிலர் பாம்பு கடித்த இடத்திலிருந்து ஓர் இஞ்ச் இடம் விட்டு கயிறு அல்லது துணியைக் கொண்டு கட்டுவார்கள். சிலர் ஏதாவது மூலிகைகளை கடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுவார்கள். கடிபட்ட இடத்தின் அருகில் இறுக்கமாகக் கட்டிவிட்டால் விஷம் வேறு இடங்களுக்குப் பரவாது என்ற நம்பிக்கையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விஷம், தோலுக்கு அடியில் இருக்கும் ரத்தநாளங்கள் மற்றும் தசைகளினூடே ஊசிபோல ஏற்றப்படுவதால் எந்தக் கயிற்றைக் கட்டினாலும் பயனில்லை

ஒருவேளை கடித்த பாம்பு விஷமற்றதாக இருந்து உயிர்பிழைக்க வாய்ப்பு ஏற்பட்டாலும், இதுபோன்று இறுகக் கட்டுவதால் அந்தக் காலுக்கோ கைக்கோ ரத்த ஓட்டம் செல்வது பாதிக்கப்பட்டு, அந்த இடம் கறுப்பாகி, அழுகி, அதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு மரணமடையும் நிலை வரையும் ஏற்படலாம்.

பாம்பு
பாம்பு

தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடிக்கான snake venom anti serum மருந்து உள்ளது. இந்த மருந்தை உடனே செலுத்துவது பாம்பின் விஷத்தை முறியடிக்க உதவும். கடித்த பாம்பு விஷமுள்ளதா விஷமற்றதா என்பதை அறியும் ரத்த உறைதல் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனையின் முடிவில் விஷப்பாம்பு என்று தெரியவரும் பட்சத்தில் உடனே விஷமுறிவு மருந்து ஏற்றிக் காப்பாற்ற முடியும்!" என்றார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

இந்தியாவில் ஆண்டொன்றிற்கு 15,000 உயிர்கள் பாம்புக்கடிக்கு இறக்கின்றன. இறக்கும் மக்களில் பெரும்பான்மையானோர் தன் குடும்பத்திற்குப் பொருள் ஈட்டும் நபர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இறப்பு அந்தக் குடும்பத்தின் நிலையையே ஒரே நாளில் புரட்டிப்போட்டு விடுகிறது. பாம்பு நம்மைச் சாகடிக்க வேண்டும் என்று கடிப்பதில்லை.

பாம்பு
பாம்பு

அது தன்னைத் தற்காத்துக்கொள்ளவே கடிக்கிறது. ஆனால், நமது அலட்சியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளே உயிர்களைக் கொல்கின்றன. கேரளப் பள்ளி மாணவியின் அனுபவம் சொல்லும் செய்தியும் இதுதான். இதை உணர்ந்து நாம் செயல்பட்டால் நிச்சயம் பாம்புக்கடியினால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க முடியும்.