Published:Updated:

`விறகு சேகரிக்கச் சென்றார்; திரும்பவில்லை!’ - புலியால் கலங்கிய வயநாட்டு பழங்குடியின கிராமம்

இந்த வனங்களைச் சுற்றிலும் கிராமஙகளும் விளை நிலங்களும் சாலைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் மனித வன விலங்கு எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது.

Tiger attack
Tiger attack

தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளத்தின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் ஆகிய மூன்று வனப்பகுதிகளும் இணையும் இந்த முச்சந்திப்பு பகுதியே உலகில் வங்கப்புலிகள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.

Tiger attack
Tiger attack

அதேபோல் இந்த வனங்களைச் சுற்றிலும் கிராமங்களும் விளை நிலங்களும் சாலைகளும் அதிகளவில் உள்ளன. இதனால் மனித வன விலங்கு எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பந்திப்பூர் பகுதிகளில் 2 பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியைக் கூண்டு வைத்து பிடித்தனர். தற்போது கேரள எல்லையில் சுற்றிவரும் புலியால் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி அருகில் உள்ள வடக்கன்நாடு பகுதி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் ஜடையன். 60 வயதான இவர் சமையலுக்கு விறகு சேகரிக்க இரண்டு நாள்களுக்கு முன்பு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றார். சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களும் ஊர்மக்களும் பல இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை.

Jadayan
Jadayan

இந்த நிலையில் மறுநாள் காலை வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று வனத்துக்குள் கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினருடன் வந்து பார்த்தபோது இறந்தது ஜடையன் என்பதை உறுதி செய்தனர். மேலும், இவர்‌ புலி தாக்கி இறந்துள்ளதையும், உடல் பாகங்களை பாதிக்கு மேல் புலி தின்றுள்ளதையும் கண்டறிந்தனர்.

இதில் ஆவேசமடைந்த ஊர் மக்கள் புலியைப் பிடிக்க வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு, உறவினர் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் என உடலை வாங்க மறுத்தனர். பின்னர், இவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

Tiger attack
Tiger attack

இதற்குப் பின்னரே உடலைப் பெற சம்மதித்து அமைதியாகக் கலைந்து சென்றனர். மேலும், உடனடியாகப் புலியைப் பிடிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து இந்தப் பகுதி மக்கள், ``கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் ஒரு புலி ஒன்று சுற்றித் திரிகிறது. அந்தப் புலிதான் ஜடையனை கொன்றுள்ளது. ஆட்கொள்ளியாக மாறி மனிதனை கொன்று தின்ற இந்தப் புலியை அடுத்த தாக்குதல் சம்பவத்துக்குள் உடனடியாகப் பிடிக்க வேண்டும்" என்றனர்.

Tiger attack
Tiger attack

இது குறித்து கேரள வனத்துறையினர், ``நேற்று முன்தினம் காலை வனப்பகுதிக்குள் புலி தாக்கி உயிர் இழந்த நிலையில் ஜடையன் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது பாதி உடல் பாகங்களை புலி தின்ற நிலையில், மீதமுள்ள பாகங்கள் மட்டுமே கிடைத்தன. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்தப் பகுதியில் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்போம்" என்றனர்.