Published:Updated:

ராமநாதபுரம்: 7 டன் எடை... முகப்பகுதியில் பலத்த காயம்! - கரை ஒதுங்கிய ராட்சத நீலத் திமிங்கலம்

வாலிநோக்கத்தில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம்
வாலிநோக்கத்தில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம் ( உ.பாண்டி )

ஆழ்கடல் பகுதியில் வாழும் நீலத் திமிங்கல வகையைச் சேர்ந்த இந்தப் பெண் திமிங்கலம் சுமார் 20 அடி நீளமும், 7 டன் எடையும்கொண்டது. 40 வயது மதிக்கத்தக்க இந்தத் திமிங்கலம், முகப்பகுதியில் பலத்த காயத்துடன் உயிரிழந்து கரை ஒதுங்கியிருந்தது.

வாலிநோக்கம் கடல் பகுதியில் சுமார் 7 டன் எடைகொண்ட பெண் நீலத் திமிங்கலம் ஒன்று நேற்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோல் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து, கரை ஒதுங்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன.

உயிரிழந்த நிலையில் ராட்சதத் திமிங்கலம்.
உயிரிழந்த நிலையில் ராட்சதத் திமிங்கலம்.
உ.பாண்டி

`கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கம்’ என அழைக்கப்படுவது மன்னார் வளைகுடா கடல் பரப்பு. 3,000-க்கும் மேற்பட்ட அரியவகை மற்றும் அழிந்துவரும் வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினங்கள் இந்தப் பகுதியிலுள்ள 21 தீவுகளைச் சுற்றிலும் வாழ்ந்துவருகின்றன. இவை தவிர, கடற்சீற்றங்களைத் தடுக்கும் பவளப்பாறைகள், கடற்புற்கள் என ஏராளமான கடற் தாவரங்களும் இந்தக் கடல் பகுதியில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் `மன்னார் வளைகுடா தேசிய உயிர்க்கோளக் காப்பகம்.’

புதுமடத்தில் கரை ஒதுங்கிய கடல்பசு.
புதுமடத்தில் கரை ஒதுங்கிய கடல்பசு.
உ.பாண்டி

பருவநிலை மாற்றம் கப்பல், மீன்பிடிப் படகுகள், பாறைகள் ஆகியவற்றில் அடிபடும் சூழலில், அரியவகைக் கடல்வாழ் உயிரினங்கள் அவ்வப்போது உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துவருகின்றன. கடந்த 23-ம் தேதி உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையில், பெண் கடல்பசு ஒன்று காயங்களுடன் இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. சுமார் மூன்று மீட்டர் நீளமும், 500 கிலோ எடையும்கொண்ட இந்தக் கடற்பசுவை மண்டபம் வனச் சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனச் சரக ஊழியர்கள் உடற்கூறாய்வுக்குப் பின் புதைத்தனர்.

இதற்கு மறுநாள் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் சுமார் மூன்றடி நீளம்கொண்ட டால்பின் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. நேற்று காலை ஏர்வாடியை அடுத்துள்ள வாலிநோக்கம் கடற்கரைப் பகுதியில் சுமார் 7 டன் எடை கொண்ட ராட்சதத் திமிங்கலம் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியிருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய டால்பின்.
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய டால்பின்.
உ.பாண்டி

இதையடுத்து அங்கு சென்ற கீழக்கரை, சாயல்குடி, தூத்துக்குடி வனச் சரக அலுவலர்கள் மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அலுவலர்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கியிருந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர். ஆழ்கடல் பகுதியில் வாழக்கூடிய நீலத் திமிங்கல வகையைச் சேர்ந்த இந்த பெண் திமிங்கலம் சுமார் 20 அடி நீளமும், 7 டன் எடையுடன்கூடியது. 40 வயது மதிக்கத்தக்க இந்தத் திமிங்கலம், முகப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்து கரை ஒதுங்கியிருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. பெரிய கப்பலிலோ அல்லது தீவுப்பகுதிகளுக்கு இடையே காணப்படும் பாறைகளிலோ மோதியதில் இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தை டிராக்டர்கள் மூலம் கயிறு கட்டி இழுத்து வந்து, உடற்கூறாய்வுக்குப் பின், அப்பகுதியிலேயே பெரிய பள்ளம் தோண்டிப் புதைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு