Published:Updated:

நீலகிரி: யானையைத் தொடர்ந்து காட்டுமாடு... மூன்றே ஆண்டுகளில் 6 மாடுகளின் வாய் சிதைக்கப்பட்ட கொடூரம்!

காட்டுமாடு
காட்டுமாடு

மசினகுடியில் உணவு தேடிவந்த காட்டுயானை மீது தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்த சம்பவத்தின் சூடு தணியும் முன்னரே, காட்டுமாட்டுக்கு வெடிவைத்து வாயைச் சிதைத்திருக்கும் கொடூரம் நடந்திருக்கிறது.

நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் காட்டை இழந்து தவிக்கும் காட்டுயிர்களுக்கு இந்த ஆண்டு துயர் மிகுந்த ஆண்டாகவே தொடங்கியிருக்கிறது. மின்வேலி, சுருக்குவலை, துப்பாக்கிச்சூடு போன்ற பல காரணங்களால் சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துவருகின்றன.

யானை
யானை

இந்தக் கொடூரத்தின் உச்சகட்டமாக ஒருபடி மேலே போய் உணவு தேடிவந்த காட்டு யானைமீது இரக்கமின்றி தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்த நிகழ்வு இரக்கமுள்ள அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

ஆனால் இது முதன்முறை அல்ல. இதே ராணுவ முகாமை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வன விலங்குகள் வாய் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பது தொடர்கதையாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறு காட்டுமாடுகளுக்கு இத்தகைய சோகம் நிகழ்ந்திருக்கிறது.

காட்டுமாடு
காட்டுமாடு

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகாம் பகுதிகளில் காட்டுமாடு ஒன்று வாய் சிதைக்கப்பட்ட நிலையில் அவதிப்பட்டுவருவதாக உள்ளூர் மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து பார்க்கையில் வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட நாக்கு வெளியே தொங்கியபடி மிக மோசமான நிலையில் இருந்தது அந்தக் காட்டுமாடு.

காட்டுமாடுகள் குறித்த ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் வன உயிரின பாதுகாப்புச் செயற்பாட்டாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``கடித்ததும் வெடிக்கும் அவுட்டுக்காய் எனும் வெடிகுண்டு மாதிரியான ஒரு பொருளை இந்த ஏரியாவுலவெக்கிறாங்க. இதைக் கடிக்கிற பன்றிங்க தலை சிதறிச் சாகும். சத்தமே இல்லாம கொண்டுபோய் சாப்பிடுவாங்க. சில சமயத்துல இந்த வெடியைக் காட்டுமாடுகள் தெரியாம கடிச்சிருதுங்க.

மாடு
மாடு

அதுங்களுக்கு வாய் கிழிஞ்சு நாக்கு வெளி வந்துரும். புல்லு, தண்ணி எதையும் எடுத்துக்க முடியாம ஒரு வாரத்துல பரிதாபமா செத்துரும். எங்களுக்குத் தெரிஞ்சு இந்த மூணு வருஷத்துல ஆறு காட்டுமாடுங்க இந்த மாதிரி சித்ரவதையால செத்துருக்கு. ஆறு காட்டுமாடுகளும் இதே மாதிரி வாய் கிழிஞ்சேதான் இறந்தது.

ஆனா, இந்த வெடிகுண்டை யார்வெக்கிறதுனு வனத்துறைக்கு நல்லாத் தெரியும். அவங்களுக்கு ஆதரவா கண்டுக்காம விடுறாங்க. அந்த யானைக்கு நடந்த துயரத்துக்குக் கொஞ்சமும் குறைஞ்சது இல்லை இந்தக் கொடுமை...” என வேதனையுடன் பகிர்கிறார்.

காட்டு மாடு
காட்டு மாடு

இது குறித்து பதிளித்த வனத்துறையினர், ``நாங்கள் ஆய்வு செய்ததில் காயம்பட்ட காட்டுமாடு, பிளாக் பிரிட்ஜ், ஓட்டுப்பட்டறை பகுதிகளுக்குச் சென்றிருக்கிறது. தேடும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். காயத்துக்கான காரணத்தை விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு