Published:Updated:

`அதுக்கு உயிர்வாழ கொடுத்துவைக்கலை!’ - போராடிக் காப்பாற்றப்பட்ட குரங்கு சிகிச்சை பலனின்றி பலி

குரங்குடன் பிரபு
News
குரங்குடன் பிரபு

``மரத்துல இருந்து குரங்கை பத்திரமா கீழ இறக்கி குடிக்க தண்ணி கொடுத்தேன். வாய்க்குள்ள போகலை. உடனே குரங்கை தூக்கிட்டு பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்குக் கிளம்புனேன். கொஞ்ச தூரம் போனதும் குரங்கோட கழுத்து துவண்டு போயிடுச்சி." - பிரபு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா ஓதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (38). ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9-ம் தேதி மாலை குன்னத்தில் வேலையை முடித்துவிட்டு ஒதியம் கிராமத்திற்கு பிரபு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டினருகே சுற்றித்திரிந்த குரங்குக் குட்டி ஒன்றை, சாலையில் இருந்த தெருநாய்கள் கூடி துரத்தி துரத்திக் கடித்திருக்கின்றன. இதில் பயந்துபோன அந்தக் குரங்கு ரத்தக் காயங்களுடன் தப்பிப் பிழைத்து அருகிலிருந்த மரத்தில் ஏறி அமர்ந்ததோடு, சுவாசம் குறைந்து மயக்க நிலையுடன் உயிருக்குப் போராடியிருக்கிறது.

உயிருக்குப் போராடிய குரங்கிற்கு முதலுதவி அளிக்கும் பிரபு
உயிருக்குப் போராடிய குரங்கிற்கு முதலுதவி அளிக்கும் பிரபு

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரபு, எப்படியாவது அந்த குரங்கினை காப்பாற்றிவிட வேண்டுமென உயிருக்குப் போராடிய அந்தக் குரங்கினை மீட்டு, மனிதர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்வதைப் போலவே நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி கொடுக்க ஆரம்பித்தார். அப்போதும் அந்தக் குரங்கு மயக்க நிலையிலேயே இருந்திருக்கிறது. உடனே கொஞ்சமும் யோசிக்காமல் உயிருக்குப் போராடிய அந்தக் குரங்கிற்கு வாய் மூலம் சுவாசம் கொடுத்து `ஆஞ்சநேயா சாமி அய்யா’ என அதனைக் காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்தார்.

சில நொடிகளிலேயே அந்தக் குரங்கு கண்களைத் திறந்து மூச்சுவிட ஆரம்பிக்க `அய்யோ சாமி!.. உயிர் வந்துடுச்சி டா’ என பிரபு உற்சாகத்தில் கத்தி மகிழ்ந்து போனார். சமூக வலைதளங்களில் பரவி வைரலான இந்த வீடியோ பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதன் பிறகு அந்தக் குரங்கிற்கு பெரம்பலூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் குரங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உடல்நலம் குன்றி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பிரபுவிடம் பேசினோம். ``நான் அப்பதான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டு பக்கத்துல இருக்க மரத்துகிட்ட பசங்க கூட்டமா இருந்தாங்க. என்னன்னு கேட்டா, தெருநாய் சேர்ந்து குரங்கை கடிச்சிடுச்சின்னு சொன்னாங்க. சுயநினைவு இல்லாம தடுமாறியபடி ரத்தக் காயத்தோட மரத்துல இருந்த அந்தக் குரங்கை பார்த்துட்டு எனக்கு மனசே கேக்கலை. மரம் மேல தள்ளாடிய படியே இருந்துச்சி. கீழ விழுந்துட்டா என்னா ஆகறதுன்னு பயந்து போனேன். உடனே குரங்கு கிட்ட போய், ``கை குடு ராமா"ன்னு கெஞ்சினேன். நான் கை நீட்ட அதுவும் கை கொடுத்துச்சி. ஆனா, எட்டாம போயிடுச்சி. மரத்துல இருந்து குரங்கை பத்திரமா கீழ இறக்கி குடிக்க தண்ணி கொடுத்தேன். வாய்க்குள்ள போகலை. உடனே குரங்கை தூக்கிட்டு பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்குக் கிளம்புனேன். கொஞ்ச தூரம் போனதும் குரங்கோட கழுத்து துவண்டு போயிடுச்சி. நம்ம கையில எடுத்து அது இறந்துடுச்சின்னா சங்கடமாயிமேன்னு, `இறைவா என் கையில எதுவும் நடக்கக்கூடாது’ன்னு வேண்டுனேன்.

உயிரிழந்த குரங்கு
உயிரிழந்த குரங்கு

அப்பதான் எனக்கு, 10 வருஷத்துக்கு முன்னாடி தஞ்சாவூர்ல முதல் உதவி சிகிச்சைக்கு டிரெய்னிங் எடுத்தது ஞாபகம் வந்துச்சி. உடனே குரங்கோட நெஞ்சை அழுத்தி நினைவு திரும்ப வைக்க முயற்சி பண்ணேன். அந்தக் குரங்கு எந்திரிக்கவே இல்லை. எதையும் யோசிக்காம என்னோட வாய் மூலமா குரங்குக்கு சுவாசம் கொடுத்ததும், கொஞ்ச நேரத்துல திடீர்ன்னு அந்தக் குரங்கு கண்ணை திறந்துடுச்சு. உடனே `ஐய்யோ சாமி உயிர் வந்துடுச்சிடா’ன்னு சந்தோஷத்துல கத்த ஆரம்பிச்சிட்டேன். அதுக்கு சுவாசம் வந்ததும் என்னை இறுக்கமாக புடிச்சிக்கிச்சு. அந்த நிமிஷம் எனக்கு உடம்பே ஒரு மாதிரி சிலிர்த்துடுச்சு. உடனே பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிட்டு போய், ஊசி போட்டு சிகிச்சை கொடுத்து அந்தக் குரங்கை நல்லபடியா குணமாக்கி, வனத்துறை அதிகாரிகள்கிட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டோம்.

குரங்குல இருந்துதானே சார் நாம வந்தோம். அது நம்ம முன்னோர்களாகவோ, தாயாகவோ கூட இருக்கலாம். கோயிலுக்குப் போய் அனுமாரை சாமியா கும்புடுறோம். அதை ஒரு குழந்தை மாதிரிதான் நான் நினைச்சேன். ஒரு உயிரைக் காப்பாத்திட்டோம்னு சந்தோஷமாகவும் பெருமையாவும் இருந்துச்சு. ஆனா, திடீர்ன்னு நேத்து அந்த குரங்கிற்கு உடல்நிலை சரியில்லாம போக, டாக்டர்கிட்ட எடுத்துட்டுப் போயிருக்காங்க. இருந்தும் சிகிச்சை பலனில்லாம அந்தக் குரங்கு இறந்து போயிடுச்சு. எது நடக்கக்கூடாதுன்னு போராடினேனோ கடைசியில அது நடந்துடுச்சு. அதுக்கு உயிர்வாழ கொடுத்து வைக்கலை போல” என்றார் துக்கம் பொங்க.