Published:Updated:

உங்க வீட்டு நாய்க்குட்டிக்கு உடம்பு சரியில்லையா?- `கோரோனா வைரஸ்’ டெஸ்ட் பண்ணுங்க

கோரோனா வைரஸ் தாக்கம் தடுக்கக்கூடிய ஒன்றே. வைரஸ் பாதிப்பு வந்த பிறகு தடுப்பூசி எடுப்பது பலன் தராது. வருமுன் காப்பது அவசியம்.

Dog
Dog ( pixabay )

நாய்களின் குடலைத் தாக்கக்கூடிய கோரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன... தொற்றைத் தடுக்க முடியுமா என்று கால்நடை மருத்துவர் அனந்தபத்மநாபனிடம் கேட்டோம்.

corona virus
corona virus
pixabay

``கோரோனா வைரஸ் ( corona virus) என்பது நாய்களின் குடல் பகுதியைத் தாக்கக்கூடியது. இது, இதயத் தசையைத் தாக்கும் பார்வோ ( parvo) வைரஸ் அளவுக்கு கொடிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், கோரோனா வைரஸ் தொற்றுக்கு உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் உயிர் இழப்புகூட ஏற்படலாம். அதற்காக மிகவும் பயப்படத் தேவையில்லை.

இந்த வைரஸ், நாய்க்குட்டிகளையே பெரும்பாலும் தாக்குகிறது . வயதான நாய்களைத் தாக்குவது அரிது. பாதிக்கப்பட்ட நாய்களின் மலக்கழிவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இதன் நோயரும்பு காலம் ( incubation period) இரண்டு முதல் ஐந்து நாள்கள். மலப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மூலம் இந்த வைரஸ் பாதிப்பை அறிந்துகொள்ளலாம்.

கால்நடை மருத்துவர் அனந்தபத்மநாபன்
கால்நடை மருத்துவர் அனந்தபத்மநாபன்

காய்ச்சல், பசியின்மை, வாந்தி, பேதி ஆகியன இந்நோயின் அறிகுறிகளாகும். சில சமயம் ரத்தம் கலந்த பேதியாக இருக்க வாய்ப்பு உண்டு. ரத்த பேதி என்பது குடல் புழு இருந்தாலும் , பார்வோ( parvo) வைரஸ் தாக்கினாலும்கூட வரலாம். ஆனால், குடல் புழுவால் காய்ச்சல் வராது. ரத்த பேதி ஏற்பட்டால் அதற்கான காரணத்தை அறிவது மிக அவசியம். அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். பேதி, வாந்தி அதிகம் ஏற்பட்டிருந்தால், நாய்க்கு நீர்ச்சத்து இழப்பு ( dehydration) அதிகம் ஏற்பட்டிருப்பதை ஈடுகட்டுவது முதல் கட்ட சிகிச்சை.

அதைத் தொடர்ந்து, சப்போர்ட்டிவ் சிகிச்சையும் அவசியம். குளிர்காலத்திலேயே இது குட்டி நாய்களை அதிகம் தாக்குகிறது. கோரோனா வைரஸ் தாக்கம் தடுக்கக்கூடிய ஒன்றே. இதற்கான தடுப்பூசியை நாய் பிறந்து 8 வாரங்களுக்குள் போட வேண்டும். ஒருமுறை போட்டாலே போதுமான பாதுகாப்பைத் தரக்கூடியது. தேவைப்பட்டால், பூஸ்டர் டோசும் போடலாம். வைரஸ் பாதிப்பு வந்த பிறகு தடுப்பூசி எடுப்பது பலன் தராது. வருமுன் காப்பது அவசியம். பாதிக்கப்பட்ட நாயை மற்ற நாய்களுடன் சேர விடக்கூடாது. பாதிக்கப்பட்ட நாயின் மலக்கழிவை முறையாக அப்புறப்படுத்த வேண்டியது நாய் வளர்ப்பவர்களின் கடமை.

lab test
lab test
pixabay

இதுவே நோய் பரவுவதைத் தடுக்கும் மிகச்சிறந்த செயல். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாயிடமிருந்து, மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உண்டு என்றாலும் அதனால் பெரிய பாதிப்பு இருக்காது. நாய்க்குட்டிகளுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று நாள்களைக் கடந்துவிட்டால், நாய் அபாய கட்டத்தைத் தாண்டிவிடுகிறது. கோரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பூசியால் தடுக்க முடியும். தாக்கம் ஏற்பட்டாலும் முறையான சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்” என்று கூறுகிறார், மருத்துவர் அனந்தபத்மநாபன்.