Published:Updated:

`விலங்குகளைக் காப்பாற்ற உயிரையும் கொடுப்போம்!' - ஆப்பிரிக்க காடுகளின் `வனதேவதை' கினெஸ்ஸா

``அங்கே போரில் துப்பாக்கி ஏந்தி நிற்பவர்களைவிட இங்கே தினம்தினம் விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுப்பவர்கள் அதிகம். அதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் நான் இங்கே வந்தேன்"

கினெஸ்ஸா
கினெஸ்ஸா

ஆப்பிரிக்க காடுகளில் விலங்குகள் அதன் உடற்பகுதிகளுக்காக வேட்டையாடப்படுவதைக் கட்டுப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அண்மையில் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட காண்டாமிருகக் கொம்புகளை அறிமுகப்படுத்தியிருந்தனர். அந்த அளவுக்கு ஆப்பிரிக்காவில் விலங்குகள் வேட்டையாடப்படுவது கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

கினெஸ்ஸா
கினெஸ்ஸா

நமீபியாவில் இந்த வருடத்தில் மட்டும் 51 வேட்டைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. போஸ்த்வானாவில் யானைகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகச் சட்டம் இயற்றக்கோரி வன உயிரியல் ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விலங்குகளை வேட்டையாடுபவர்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

Vikatan

ரெபக்கா கிரேவிஸ் என்கிற பெண் அண்மையில் தான் வேட்டையாடிய ஒட்டகச்சிவிங்கி அருகே சிரித்தபடியே புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தது கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரும்பாலும், `அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு ஆப்பிரிக்காவுக்கு வருபவர்கள்தான் இதுபோன்று வேட்டையாடி அதை வெளிநாடுகளுக்கு பேரம் பேசுகிறார்கள்' என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் ரயான் டேட் மற்றும் லின் வெஸ்டோவர் தலைமையிலான முன்னாள் ராணுவ வீரர்கள் குழு ஆப்பிரிக்காவில் செயல்பட்டுவருகிறது. இந்தக் குழுவில் இருக்கும் ஒரே பெண் கினெஸ்ஸா ஜான்ஸன். அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர்.

கினெஸ்ஸா
கினெஸ்ஸா

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவ முகாமில் ஆயுதப் பயிற்சியாளராக இருந்தவர். தற்போது ஆப்பிரிக்காவின் தான்சானியா காட்டில் விலங்குகளைக் காப்பாற்றுவதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். விலங்குகளை வேட்டையாட வருபவர்களைத் தடுக்கும் பயிற்சிகளை அங்கே காடுகளில் இருக்கும் வனச்சரகர்களுக்கு இவர் வழங்குகிறார்.

பல ரகத் துப்பாக்கிகளை ஏந்தியபடி போஸ் கொடுக்கும் கினெஸ்ஸாவின் பல்வேறு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் தென்படுகின்றன. ஒரு பெண்ணுக்கு எப்படி ஆயுதப்பயிற்சி வழங்கத் தெரியும் என்று தொடக்கத்தில் தன்னைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்குச் சவாலானவராக மாறியிருக்கிறார் கினெஸ்ஸா. வனச்சரகர்களாக இருக்கும் ஏராளமான பெண்களுக்கு இவர் பயிற்சி கொடுத்துவருகிறார்.

கினெஸ்ஸா
கினெஸ்ஸா

``அங்கே போரில் துப்பாக்கி ஏந்தி நிற்பவர்களைவிட இங்கே தினம்தினம் விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுப்பவர்கள் அதிகம். அதைப் பற்றிப் படித்துவிட்டுத்தான் நான் இங்கே வந்தேன்" என்கிறார் கினெஸ்ஸா.