Published:Updated:

`இந்தப் புறாக்கள்தான் எங்கள் உலகம்!' -தினமும் 5 கிலோ தானியம் அளித்து பாசம்காட்டும் கும்பகோணம் தம்பதி

`` என்னோட இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் ஆகி அவர்களின் புகுந்த வீட்டில் வசிக்கிறார்கள். இப்போது இந்தப் புறாக்கள் கூட்டம்தான் எங்களுக்குக் குழந்தைகள்'' என்கிறார்.

புறாக்கள்
புறாக்கள்

கும்பகோணத்தில் வயதான தம்பதி தங்கள் வீட்டுக்குத் தினமும் வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறாக்களுக்கு சோளம், கம்பு, பச்சரிசி உள்ளிட்ட தானியங்களை உணவாக கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து பத்து வருடங்களாக புறாக்களுக்கு உணவளித்து வரும் இவர்களின் சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கணேஷ்
கணேஷ்

கும்பகோணம் ரெட்டிராயர் அக்ரஹார தெருவில் வசித்து வருகின்றனர் கணேஷ்-நாகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். கணேஷ், மளிகைப் பொருள் மொத்த வியாபாரம் செய்யும் கடையை நடத்திவருகிறார். இவர் வீட்டுக்கு தினமும் காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களும் கூட்டம் கூட்டமாக புறாக்கள் வருகின்றன. அவற்றுக்குத் தானிய வகைகளை உணவாக தந்து அன்புடன் உபசரித்து வருகின்றனர். என்ன வேலையாக இருந்தாலும் புறாக்களுக்கு உணவளிப்பதை ஒருநாள்கூட இந்தத் தம்பதி தவறவிட்டதில்லை.

Vikatan

கணேஷிடம் பேசினோம். `` ஒருநாள் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் என் மனைவி வீட்டுத் தேவைக்காக கம்பு காய வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட புறாக்கள் கம்பை சாப்பிட்டது. இதைக் கவனித்த என் மனைவி, `சரி சாப்பிடட்டும்' என விட்டுவிட்டார். அதற்கு அடுத்தநாளும் இதேபோல் புறாக்கள் வந்தன. ஒருநாள் எதார்த்தமாக மாடிக்குப் போனவள், புறாக்கள் சாப்பிட எதுவும் இல்லாததைக் கண்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றுவிட்டாள். புறாக்கள் கூட்டமும் சிறுது நேரம் அங்கேயே நின்றன. உணவு தேடிவந்த பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் போனால் எவ்வளவு வருத்தப்படும் என நினைத்தவள், உடனே கீழே வந்து கொஞ்சம் கம்பை எடுத்துக்கொண்டு போய் போட்டாள்.

புறா
புறா

வீட்டுக்குப் புறாக்கள் வருவதால் எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருந்தது. இனி தினமும் அந்தப் புறாக்களுக்கு நாம் தீனி வைப்போம் என கூறினேன். அதிலிருந்து தொடர்ந்து காலை, மதியம், மாலை என புறாக்கள் கூட்டம் வருகின்றன. அவற்றுக்குத் தேவையான நாட்டு சோளம், கம்பு, பச்சரிசி உள்ளிட்ட தானியங்களை உணவாகத் தருகிறோம். தொடக்கத்தில் குறைவான புறாக்களே வந்தன. தற்போது நாகேஸ்வரன், சாரங்கபாணி ஆகியவற்றின் கோயில் கோபுரங்களில் வசிக்கும் புறாக்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் வசிக்கும் ஆயிரக்கணக்கான புறாக்களும் எங்களுடைய வீட்டைத்தேடி வருகின்றன.

தினமும் 5 கிலோ தானியங்களை புறாக்களுக்கு உணவாக வைக்கிறோம். இதில் விசேஷம் என்னவென்றால் எட்டுக்கும் மேற்பட்ட கிளிகளும் கொஞ்சநாளாக இங்கு வந்து சாப்பிடுகின்றன. கோடைக்காலத்தில் தானியங்களை சாப்பிட்டுவிட்டு குடிப்பதற்குத் தண்ணிக்கு எங்கு போகும் என நினைத்து தட்டு போன்ற பாத்திரத்தில் தண்ணீர் வைப்போம். அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு தலையை தண்ணீருக்குள் விட்டு சிலிர்ப்புவதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கும்.

புறா
புறா

இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், மூன்று நேரங்களிலும் வெவ்வேறு புறாக் கூட்டங்கள் இங்குவந்து உணவு சாப்பிட்டுவிட்டுச் செல்வதுதான். பத்து வருடமாக நாங்கள் இதுபோல் புறாக்களுக்கு உணவளித்து வருகிறோம்.

நாங்கள் 2 நாள்கள் வெளியூருக்குச் சென்றால்கூட, புறாக்கள் ஏமாந்து போய்விடக் கூடாது என்பதற்காக சுவர் ஓரங்களில் எத்தனை நாள்களுக்கு வேண்டுமோ அந்த அளவுக்குத் தானியங்களை கொட்டிவைத்துவிட்டுச் சென்றுவிடுவோம்.

கணேஷ்
கணேஷ்

என்னோட இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் ஆகி அவர்கள் கணவர் வீட்டில் வசிக்கிறார்கள். இப்போது இந்தப் புறாக்கள் கூட்டம்தான் எங்களுக்கு குழந்தைகள். மழை, வெயில் என எந்தக் காலமாக இருந்தாலும் புறாக்கள் இங்கு வருவதை நிறுத்தியதில்லை. நாங்களும் புறாக்களுக்கு உணவு வைப்பதை நிறுத்துவது இல்லை. இதன் மூலம் எங்க மனசும் நிறைகிறது. புறாக்களின் வயிறும் நிறைகிறது" என்றார் நெகிழ்ச்சியுடன்.