Published:Updated:

குட்டை மாடு... மலநாடு கிட்டா!

குட்டை மாடு
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டை மாடு

கால்நடை

இந்திய நாட்டு மாட்டினங்களில் குட்டை இன மாடுகள் அதிக கவனத்தை ஈர்ப்பவை. ஆந்திராவின் புங்கனூர் குட்டை, கேரளாவின் வெச்சூர் வரிசையில் கர்நாடகத்தின் மலநாடு கிட்டா பிரபலமானவை. ஷிமோகாவில் உள்ள கர்நாடக கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறையில் மலநாடு கிட்டா ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இத்துறையின் தலைவராக இருந்து வருகிறார் தமிழராகிய பேராசிரியை ஜெயஶ்ரீ. இவர் மலநாடு கிட்டா மாடுகள் சம்பந்தமாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். மாணவர்களுக்கு வகுப்பெடுத்து முடித்துவிட்டு, மலநாடு கிட்டா மாடுகள் இருக்கும் பண்ணைக்கு அழைத்துச் சென்றார்.

 அடக்காமான மலநாடு கிட்டா மாட்டுடன் ஜெயஶ்ரீ
அடக்காமான மலநாடு கிட்டா மாட்டுடன் ஜெயஶ்ரீ

மாடுகளைக் காட்டியபடியே பேசிய ஜெயஶ்ரீ, “குட்டை மாட்டினங்களில் மிகவும் அழகானவை மலநாடு கிட்டா. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மலநாட்டில் இந்த மாடுகள் தோன்றியதால், அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. கிட்டா என்பது குட்டை, குள்ளம் என்ற பொருள் கொடுக்கும். புங்கனூர் குட்டை மாடுகளுக்குத் தன் தோற்றத்தைவிட எடை கூடுதலாக இருக்கும். அதனால் பார்ப்பதற்குச் சில நேரங்களில் விகாரமாக இருக்கும். இந்த மாடுகள் அப்படியில்லை. தோற்றத்துக்கு ஏற்ற கச்சிதமான எடை கொண்டது.

மான்களைப் போன்று மலைப்பகுதிகளில் வேலிகளைத் தாண்டி குதித்து ஓடும் தன்மை பெற்றவை. மலைகளில் சின்னச் சின்ன நிலங்கள்தான் அதிகம் இருக்கும். அதை ‘படிகட்டு பாசனம்’ (Step Irrigation) என்றழைப்போம். அதுமாதிரியான நிலங்களில் சிறிய அளவிலான இந்த மாடுகளைக் கொண்டு ஏர் பூட்டி உழுகிறார்கள். அதேபோன்று புதர்கள், முட் செடிகளில் நுழைந்து மேய்வதற்கும் இந்தச் சிறிய உருவம் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் உயரமே 90 செ.மீ தான். சொல்லப்போனால் உருவில் பெரிதான வெள்ளாடு அளவுக்குத்தான் இது இருக்கும்” என்றவர் தொடர்ந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மலநாடு கிட்டா மாடுகள்
மலநாடு கிட்டா மாடுகள்

“மாடுகளின் முதற்தேவையே உரம்தான். உரத்துக்காகத்தான் நம் முன்னோர்கள் மாடுகளை வளர்த்திருக்கிறார்கள். அதன்பிறகுதான் உழவு, போக்குவரத்து, பால், எண்ணெய் என்ற விரிந்திருக்கிறது. மலநாடு மலை மக்கள் உரத்துக்காகத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இந்த மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 1-2 லிட்டர் பால் கிடைக்கும். ஆனால், அதைக் கன்றுக்குட்டிகளுக்கே விட்டு விடுகிறார்கள். மலநாடு அதிக மழையும், அதிக குளிரும், அதிக வெயிலும் அடிக்கும் பகுதி. இந்த மூன்றையும் எதிர்கொண்டு வாழும் திறன் கொண்டதால் இதைத் தென்னிந்திய மாநிலங்களில் எங்குவேண்டுமென்றாலும் தாராளமாக வளர்க்கலாம்” என்றவர் நாட்டு மாடுகளில் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளைப் பற்றியும் சொன்னார்.

தொடர்ந்து 16 மணி நேரம் வண்டிகளை இழுத்தன இந்த மாடுகள். ஆப்கனிலிருந்து இந்தியா திரும்பும் மலைப்பகுதிகளில் தளவாடங்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்தடைந்தது.


“நாட்டு மாட்டுச் சாணத்தில் நுண்ணுயிரிகள் (Microbes) நிறைய இருக்கின்றன. வீட்டுத்தோட்ட செடிகளுக்கு இதைப் பயன்படுத்தும்போது செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வீட்டுத்தோட்டத்தில் செடி முளைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் ஒருமுறை நாட்டு மாட்டுச்சாணத்தை முயற்சி செய்து பார்க்கலாம். எங்கள் பண்ணையில் இருக்கும் மட்கிய மாட்டுச்சாண எருவை கிலோ 10 ரூபாய் என்று ஷிமோகா நகர மக்கள் வந்து வாங்கிச் செல்கிறார்கள். நாட்டு மாட்டுச் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, பீஜாமிர்தம் அதிக மகசூல் கொடுக்கும் இடுபொருள்களாக இருந்து வருகின்றன. நாட்டு மாட்டுப்பால் ஏ2 மில்க் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கெனத் தனியாக விலையும் கிடைக்கிறது. இதையெல்லாத்தையும் விடச் சிரமம் இல்லாமல் நெய் தயாரிக்கலாம். எனக்குத் தெரிந்து கர்நாடகாவில் கணவன், மனைவி இரண்டு பேர் 100 மலநாடு கிட்டா மாடுகளைப் பண்ணை முழுவதும் திறந்தவெளியில் மேய்க்கிறார்கள். தினமும் கன்றுக்குட்டி குடித்ததுபோக மீதியுள்ள பாலைக் காய்ச்சி நெய் தயாரிக்கிறார்கள். அதை பாட்டிலில் அடைத்து வாரந்தோறும் பெங்களூருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். ஒரு கிலோ நாட்டு மாட்டு நெய் ரூ.2,000. பெரிய அலட்டல் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்துதான் விபூதி, அர்க் போன்றவை வட மாநிலங்களுக்குச் செல்கிறது. அதேபோன்று நாய்கள், பறவைகள் போன்று செல்லப் பிராணிகள் வளர்ப்பில் நாட்டு மாடும் இணைந்திருக்கிறது. அதையும் விற்பனை வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்” என்றார்.

ஜல்லிக்கட்டுக்கும் தயார் என நிற்கும் மாட்டுடன் னிவாஸ் ஆச்சார்யா
ஜல்லிக்கட்டுக்கும் தயார் என நிற்கும் மாட்டுடன் னிவாஸ் ஆச்சார்யா

அவரைத் தொடர்ந்து மலநாடு கிட்டா நாட்டு மாடுகளை வளர்த்து வரும் ஶ்ரீனிவாஸ் ஆச்சார்யா பண்ணைக்குப் பயணமானோம். இவருடைய பண்ணை மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், எடஹள்ளி கிராமத்தில் உள்ளது. பண்ணைக்குள் நுழைந்ததும் நம்மை வரவேற்றவர், “எங்கிட்ட 40 மலநாடு கிட்டா மாடுகள் இருக்குது. ஒரு நண்பர் மூலமா இந்த மாடுகளெல்லாம் கிடைச்சது. இரண்டு தேவைக்காகத்தான் நாட்டு மாடுகள வளர்க்கிறேன். இங்க வெள்ளாடு வளர்ப்புகாகத் தீவனப் பயிர் வளர்க்கிறேன். இந்தத் தீவனப் பயிர்கள் வளர்வதற்கு உரமாகப் பயன்படுத்துறேன். தீவனப் பயிர் வளர்றதுக்கு ஏக்கருக்கு 4,000 ரூபாய் ரசாயன உரத்துக்காகச் செலவு செய்ய வேண்டியதா இருக்கும். அந்த வகையில 48 ஏக்கருக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் மிச்சமாகுது.

செயற்கைக் கருவூட்டல் முறையில மாடுகளுக்குச் சினை ஊசி போட்டு சினையாக்குறாங்க. அந்த முறை இயற்கைக்கு எதிரானது. மனிதனுக்கு அப்படிப்போட்டா விஞ்ஞானிகள் ஒத்துப்பாங்களா? செக்ஸ் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை உரிமை. இயற்கையா இணை சேர்ந்து ஓர் உயிரை உருவாக்கக்கூடிய வாய்ப்பை மாடுகளுக்கு இல்லாமல் ஆக்குறோம். அப்படியில்லாம மாடுகள் இயற்கையா வாழணுங்கறதுக்காக இங்க மாடுகள வளர்க்கிறோம். பண்ணைக்கு வர்ற நாலு பேருக்கு இத உணர்த்துணுங்கறதுகாகவே இதைச் செய்றேன்.

பால் என்று பார்த்தால் ஒரு நாளுக்கு ஒன்றரை லிட்டர் கிடைக்குது. பாலாகவும் மிச்சமிருக்கிறதை நெய் ஆக்கியும் பயன்படுத்திக்கிறோம். இது ஜல்லிக்கட்டுக்கும் ஏற்றது. உயரம் குறைவாக இருக்கிறதால, அடக்கமா இருந்திடும். நாட்டு மாடுகளோட வலிமையே கிடைக்குறத மேய்ஞ்சி தன்னைத் தக்க வெச்சிக்குற தன்மைதான். அதுக்கு நாம எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்ல. இந்தியாவுல நாட்டு மாடுகள் எவ்ளோ முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனா, இந்த நாட்டு மாடுகள வெச்சி பெரிய ஆராய்ச்சிகளே நடக்கல. அதே அமெரிக்காகாரன் என்றால் இதை எங்கயோ கொண்டு போயிருப்பான். விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டக்கூடிய அளவுல இனிமேலாவது ஆராய்ச்சி நடக்கணும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புக்கு, மலநாடு கிட்டா ஆராய்ச்சி மற்றும் தகவல் மையம், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஷிமோகா.

முனைவர் ஜெயஶ்ரீ,
செல்போன்: 94486 27916

தொடர்புக்கு, ஶ்ரீனிவாஸ் ஆச்சார்யா, செல்போன்: 96205 90777

‘சொப்பின கொட்டிகே’ முறை
‘சொப்பின கொட்டிகே’ முறை

மகசூல் கொடுக்கும் ‘சொப்பின கொட்டிகே’ முறை

மலநாடு விவசாயிகள் அதிக மகசூல் எடுப்பதற்காக ஓர் உத்தியை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறார்கள். அதுகுறித்துப் பேசிய முனைவர் ஜெயஶ்ரீ, “மலநாடு பகுதியில் உள்ள விவசாயிகள் கொட்டகையில் மாடுகள் கட்டும்போது அதன் கீழே வைக்கோல் அல்லது பச்சை இலைதழைகளைப் போட்டு விடுகிறார்கள். இது குளிர், மழைக்காலங்களில் மாடுகளுக்கு ஒருவிதமான கதகதப்பைக் கொடுக்கின்றன. இதைத்தாண்டி கொட்டகையில் மாடுகள் இருக்கும்வரை அதன்மீதே சாணம், சிறுநீரை கழியும். மறுநாள் மீண்டும் அதன்மீது ஓர் அடுக்கு வைக்கோல், இலைதழைகளைப் போட்டு, மாடுகளைக் கட்டுகிறார்கள். இப்படி 15 நாள்களுக்கு அடுக்கடுக்காக வைக்கோல், இலைதழைகளைப் போட்டு மாடுகளைக் கட்டுகிறார்கள். 15 நாள்களுக்குப் பிறகு சாணம், சிறுநீர் கலந்த அந்த வைக்கோல், இலைதழைகளைக் கொண்டு சென்று ஒரு குழியில் போட்டுவிடுகிறார்கள். அதை 30 நாள்களுக்கு மட்கவிட்டு நிலத்துக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள். பாரம்பர்ய முறையில் தயாரிக்கப்படும் இந்த இயற்கை உரம் ‘சொப்பின கொட்டிகே’ (Soppina Kottige) என்றழைக்கிறார்கள். இதைப் போட்டால் அதிக விளைச்சல் கொடுக்கிறது என்கிறார்கள் மலநாடு விவசாயிகள்” என்றார்.

மலநாடு கிட்டா மாடுகளின் குணாதிசயங்கள்

இதன் உயரம் மூன்றடி (சுமார் 90 செ.மீ). மொத்த எடை 80-120 கிலோவுக்குள் இருக்கும். கறுப்பு கலந்த வெண்ணிற புள்ளிகள், பழுப்பு, சிவப்பு நிறங்களில் இருக்கும். வால் நீளமாக இருக்கும். காளைகளுக்குக் கொம்புகள் நீண்டதாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு கன்றுக்குட்டி. 9 மாதங்கள் வரை பால் கொடுக்கும் தன்மை கொண்டது.

கர்நாடகாவின் பொங்கல்
கர்நாடகாவின் பொங்கல்

கர்நாடகாவின் பொங்கல்

கர்நாடகாவில் பொங்கலை ‘சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மாடுகளை அலங்கரித்து சூரியனுக்கு படைக்கப்படும் படையலை உணவாக கொடுக்கிறார்கள். ஊரில் வைக்கோல் போட்டு நெருப்பை மூட்டி, அதை மாடுகளைக் கொண்டு தாண்ட விடுவது வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதேபோன்று ஊரின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை மாடுகளை அலங்கரித்துக் கொம்பில் தட்டி கட்டி விரட்டுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.