Published:Updated:

`மக்களை அச்சுறுத்தி வந்தது!' - கூண்டுக்குள் இருந்த ஆட்டை சாப்பிடப் பாய்ந்த சிறுத்தை சிக்கியது!

பி.ஆண்டனிராஜ்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தார்கள். இரண்டரை வயது நிரம்பிய அந்தப் பெண் சிறுத்தையை வனப்பகுதியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூண்டில் சிக்கிய சிறுத்தை
கூண்டில் சிக்கிய சிறுத்தை

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அச்சுறுத்தலை உருவாக்குவதால், வனத்துறையினர் அவற்றைக் கூண்டு வைத்து பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

கூண்டு வைத்து பிடித்த சிறுத்தை
கூண்டு வைத்து பிடித்த சிறுத்தை

இந்த நிலையில், அம்பாசமுத்திரம் வனச்சரகப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருகே சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை நுழைந்து ஆடுகளை அடித்து இழுத்துச் சென்றது. அதனால் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தையைப் பிடிக்க அம்பாசமுத்திரம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டதுடன், அதன் உள்ளே ஆட்டைக் கட்டி வைத்தனர். கூண்டுக்குள் கிடந்த ஆட்டைப் பிடிப்பதற்காக வந்த சிறுத்தையொன்று கூண்டுக்குள் சிக்கியது.

கூண்டுக்குள் சிறுத்தை
கூண்டுக்குள் சிறுத்தை

சுமார் இரண்டரை வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கிய தகவல் அறிந்ததும் மணிமுத்தாறு மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள பொதுமக்கள் சிறுத்தையை வேடிக்கை பார்க்க கூடினார்கள். அதனால் அப்பகுதியில் கூட்டம் அலைமோதியது. கூண்டில் பிடிபட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குக் கொண்டுசென்று விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.