Published:Updated:

`ஊருக்குள் வந்து ஆட்டை அடித்துச் செல்லும் சிறுத்தை!'- சிசிடிவி காட்சிகளால் பதறும் அம்பாசமுத்திரம்

சிறுத்தை
சிறுத்தை ( Representational image )

வறட்சி தொடங்கி விட்டதால் இறைக்காகவும் தண்ணீருக்காகவும் காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழையத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக யானைகளும் சிறுத்தைகளும் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள முண்டந்துறை வனச் சரகத்தில் உள்ள விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சில தினங்களுக்கு முன்பு யானைகள் கூட்டமாகக் குடியிருப்புப் பகுதியை யொட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து அழிவை ஏற்படுத்தின.

குற்றாலத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை! - வனத்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை

அந்த அச்சம் மறைவதற்கு முன்பாகச் சிறுத்தைகள் இரை தேடியும் தண்ணீருக்காகவும் குடியிருப்புகளைத் தேடி வரத் தொடங்கியிருக்கின்றன. விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் கிராமத்துக்குள் சில தினங்களுக்கு முன்பு நுழைந்த சிறுத்தைகள், முருகன் என்பவரது தொழுவத்தில் கட்டிக் கிடந்த ஆடுகளைக் கடித்துக் குதறித் தூக்கிச் சென்றன.

இரவில் மட்டும் அல்லாமல் பகலிலும் சிறுத்தைகள் மலையடிவாரக் கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு மற்றும் நாய்களைத் தூக்கிச் செல்வதால் அப்பகுதி மக்கள் விவசாயத் தோட்டங்களுக்குச் செல்லவே அச்சப்படும் நிலைமை உருவாகியிருக்கிறது. மக்கள் கூட்டமாகவே விளை நிலங்களுக்குச் சென்று திரும்புகிறார்கள். 

சிறுத்தை
சிறுத்தை

இந்த நிலையில். திருப்பதியாபுரம் கிராமத்துக்குள் மீண்டும் நுழைந்த சிறுத்தைகள், பரமசிவன், ராஜா ஆகியோருக்குச் சொந்தமான நாய்களைத் தூக்கிச் சென்று விட்டன. நாய்களை விரட்டிச் சென்று கடித்துத் தூக்கிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது. அவற்றைப் பார்த்து பொது மக்கள் கூடுதல் அச்சமடைந்திருக்கிறார்கள்.

மலையடிவாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே சுற்றித் திரியும் சிறுத்தைகள் மற்றும் யானைக் கூட்டங்களைக் காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்தில் வலம் வரும் சிறுத்தை
வனத்தில் வலம் வரும் சிறுத்தை

இது பற்றி வனத்துறையினர் கூறுகையில், ``அடுத்த இரு மாதங்களுக்கு யானைகள் இடப்பெயர்ச்சியில் இருக்கும். அதனால் கேரளப் பகுதியில் உள்ள யானைக் கூட்டங்களும் இங்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அதே போல சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளும் இரை தேடி மலையடிவாரத்துக்கு வரும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நாங்களும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம்” என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு