Published:Updated:

`காயத்தால் தவித்த சிறுத்தை; கால்நடை மருத்துவர்கள் தாமதம்!’ - களமிறங்கி மீட்ட வனத்துறை

leopard
leopard

ஒருவழியாக வனத்துறையின் மீட்பு வாகனம் 9 மணிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் கால்நடை மருத்துவர்கள் யாரும் வராததால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ஊழியர்களின் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை ஒன்று காலில் ஏற்பட்ட காயத்துடன் தவித்து வந்த நிலையில் பல மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர்.

leopard
leopard

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் நீலகிரியில் வன விலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலியே குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் வன விலங்குகளைக் காணமுடிகிறது.

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்திற்குள் உள்ள பூங்கா ஊழியர்களின் குடியிருப்பு அருகில் இன்று காலை 6 மணியளவில் சிறுத்தை ஒன்று மயங்கிய நிலையில் சாலையோரம் கிடப்பதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

leopard  rescue
leopard rescue

உடனடியாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

சுமார் 6 வயதுள்ள ஆண் சிறுத்தை அதன் பின்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் நடக்கமுடியாமல் தவிப்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாவட்ட வன‌ அலுவரும் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணிகளை மேற்கொண்டார்.

leopard  rescue
leopard rescue

மீட்பு வாகனம் மற்றும் கால்நடை மருத்துவர்கள் வருக்கைக்காகப் பல மணி நேரம் காத்திருந்தனர்.

ஒருவழியாக வனத்துறையின் மீட்பு வாகனம் 9 மணிக்கு வந்து சேர்ந்தது. ஆனால் கால்நடை மருத்துவர்கள் யாரும் வராததால் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

leopard  rescue
leopard rescue

பிறகு வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்து வலை மற்றும் சுருக்குக் கம்பிகளைக்கொண்டு பத்திரமாகக் கையாண்டு சிறுத்தையை மீட்டு 9.30 மணிக்கு வாகனத்தில் ஏற்றினர்.

பின்னர் ஊட்டி நகரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அங்கு சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

leopard  rescue
leopard rescue

இது குறித்து வனத்துறையினர், ``இந்த ஆண் சிறுத்தைக்கு 6 வயது இருக்கும். வாகனம் மோதியோ அல்லது வேறு ஏதும் காரணத்தாலோ பின்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சிகிசையில் குணமடைந்தபின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும்‌" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு