Published:Updated:

கர்நாடகாவை மிரட்டிய ஆண் புலி பிடிபட்டது எப்படி? திக் திக் கதை

ஒவ்வொரு ஆண் புலியும் குறைந்தபட்சம் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை எல்லையாகக்கொண்டு, அந்தப் பரப்புக்குள் இரை, தண்ணீர், இணைசேர்தல் போன்றவற்றுக்கு சாதகமாகத் தகவமைத்துக்கொள்ளும்.

கும்கி
கும்கி

உலகிலேயே தென்னிந்தியக் காடுகளில்தான் வங்கப் புலிகள் அதிகம் வாழ்கின்றன. முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், காட்டுயிர் சரணாலயம் ஆகிய இந்த மூன்று பகுதிகளுமே புலிகளின் இருப்பிடமாக இருந்துவருகின்றன. நாட்டில் அதிக அளவு எண்ணிக்கையிலான புலிகளைக்கொண்ட மாநிலமாக கர்நாடகம் விளங்கிவருகிறது. சுமார் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 130-க்கும் அதிகமான புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கேமரா மூலம் புலிகளின் கால் தடங்கள், ரோமங்கள், உடலில் உள்ள பிரத்யேகக் கோடுகள் போன்றவை பதிவுசெய்யப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு புலிக்கும் ஓர் அடையாள எண் தந்து கண்காணித்து வருகிறார்கள்.

man eater tiger combing operation
man eater tiger combing operation

புலிகள் பாதுகாப்பில் கைதேர்ந்த மாநிலமாக கர்நாடகம் உள்ளது. அழிவின் விளிம்புக்கே சென்று, தற்போது மெள்ள மீண்டுவரும் புலி இனத்தின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது, ஒருவகையில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனாலும், இந்த எண்ணிக்கை உயர்வு புலிகளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. ஏனெனில், புலிகளின் எண்ணிக்கை உயரும் அளவுக்கு காடுகளின் பரப்பளவு அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு ஆண் புலியும் குறைந்தபட்சம் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை எல்லையாகக்கொண்டு, அந்தப் பரப்புக்குள் இரை, தண்ணீர், இணைசேர்தல் போன்றவற்றுக்கு சாதகமாகத் தகவமைத்துக்கொள்ளும்.

இனப்பெருக்கத்தின்மூலம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவற்றுக்கு காடுகள் போதுமானவையாக இல்லை. இதனால் வேறு இடம் தேடி இடம்பெயரவேண்டிய கட்டாயம் ஏற்படும். வாழிடத்தைத் தக்கவைக்க எல்லைத் தகராறும் [territory fight] அவற்றுக்குள் ஏற்படுகின்றன. இந்த எல்லைச் சண்டையில் எந்த ஆண் புலி வலிமையாக உள்ளதோ அதுவே இருப்பிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்; மற்றது இடம் தேடி அலையும்.

Tiger
Tiger

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ, ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்தது. தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை திணறியது. இந்தக் காட்டுத் தீயில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. அதேபோல், முதுமலை புலிகள் காப்பகத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிந்தன.

இந்தப் பெரும் காட்டுத்தீயால், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தாவர வளர்ச்சி இன்னும் மீளவில்லை. இதனால் அவற்றுக்கான உணவுத் தேடல் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழலில்தான் தற்போது ஒரு புலி, ஆட்கொல்லியாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில், சிவ மாதையன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இது, ஆட்கொல்லியாக இருக்கும் எனச் சந்தேகித்தனர். ஆனால், அதற்குப் பின் தாக்குதல் சம்பவம் இல்லாததால், இதை கர்நாடக வனத்துறையினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

பின்னர், இதே சுற்றுவட்டாரப் பகுதியில் அவ்வப்போது புலி ஒன்று மாடுகளைத் தாக்கிவந்தது. இந்த நிலையில்தான், கடந்த 8–ம் தேதி காலை 10.30 மணியளவில், இதே பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிவலிங்கப்பா என்பவரைப் புலி தாக்கி இழுத்துச்சென்றது. இதைக் கண்ட மக்கள், கூட்டமாகச் சேர்ந்து புலியை விரட்டி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி உடலை மீட்டனர்.

Tiger
Tiger

தொடர் தாக்குதல் சம்பவங்களால் அச்சமடைந்த உள்ளூர் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இந்த நெருக்கடி காரணமாக, வனத்துறை அவசரக் கூட்டத்தைக் கூட்டி, 'இது ஆட்கொல்லி புலி' என முடிவுசெய்தது. மேலும், அடுத்த தாக்குதலுக்கு முன் 48 மணி நேரத்தில் இந்த புலியை உயிருடன் பிடிக்கவோ சுட்டுக்கொல்லவோ முடிவுசெய்தனர்.

இதற்காக, புலிகளைச் சுடுவதில் கைதேர்ந்தவர்கள் மற்றும் புலிகள்குறித்த ஆய்வாளர்கள் என பலரை வரவழைத்தனர். கர்நாடக வனத்துறை முன்னெடுத்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், சுட்டுக்கொல்லும் முயற்சியைக் கைவிட்டு, உயிருடன் பிடிக்கும் முனைப்போடு களமிறங்கியது கர்நாடக வனத்துறை. சவால் நிறைந்த இந்தத் தேடுதல் வேட்டையில், 200-க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள், 6 கும்கி யானைகள், 6 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

புலிகளைக் கண்காணிக்க நூற்றுக்கும் அதிகமான தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. புலியின் கால்தடம் முக்கியமான அடையாளமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டுவந்தனர்.

man eater tiger combing operation
man eater tiger combing operation

இரவு பகலாக 5 நாள்கள் நடந்த இந்தத் தேடுதல் வேட்டையில், புலியின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, இதுதான் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கிய ஆட்கொல்லிப் புலி என முடிவுசெய்து, மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். தற்போது இந்தப் புலி, மைசூரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்தப் புலியைப் பிடித்ததும் வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால்... அது, ஆறு முதல் ஏழு வயதுடைய இளம் ஆண் புலியாக இருந்தது. அது மட்டுமல்லாது, இந்தப் புலியின் உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. இப்படி இருக்கையில், இது எப்படி ஆட்கொல்லியாக மாறியிருக்கும் என்ற குழப்பம் எழுந்தது.

ஆட்கொல்லி புலி
ஆட்கொல்லி புலி

பிடிபட்ட புலியின் படங்களை ஒவ்வொரு ரேஞ்சுக்கும் அனுப்பி, புலியின் அடையாளங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். இதில், இந்தப் புலி கடந்த ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பு கபினி வனப்பகுதியிலிருந்து பந்திப்பூர் வரை வந்ததற்கான பதிவுகள், தானியங்கிக் கேமரா மூலம் கிடைக்கப்பெற்றன. கபினியில் புலிகளுக்கு இடையே ஏற்பட்ட எல்லைச் சண்டையில் தோற்று வெளியேறிய இந்த புலி, வேறு இடம் தேடி இந்தப் பகுதிக்கு வந்துள்ளது. இந்தப் பகுதியிலும் 3 புலிகள் இருந்துள்ளன. அங்கும் அதற்கு இடம் கிடைக்காத நிலையில், வனத்துக்குள் வேட்டையாட முடியாமல் வனத்தை ஒட்டிய வெளி வட்டப் பகுதிகளில் இருந்து, கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி உயிர் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புலி குறித்து நம்மிடம் பேசிய பந்திப்பூர் புலிகள் காப்பக அதிகாரி ஒருவர், "நல்லவேளையாக இந்தப் புலியை உயிருடன் பிடித்தோம். இந்தப் புலியின் உடல் ஆரோக்கியத்தைப் பார்க்கும்போது, ஆட்கொல்லி என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மனிதர்களைத் தாக்கிப் பழகிவிட்டது. இதை வனத்தில் விட்டாலும் திரும்ப மனிதர்களைத் தாக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எனவே, தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

புலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் சுரேஷ் கூறுகையில், "உலகில் பெரும்பாலான புலிகள் மனிதர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ள இந்தப் புலிகள், இப்போதுதான் மெள்ள மீண்டுவருகின்றன. ஆனால், அவற்றுக்குப் போதுமான காடுகள் இல்லை என்பதே வேதனையான உண்மை. இதனால், வனத்தை விட்டு வெளியேறி மனிதர்களைத் தாக்கும் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன. கடந்த 7 ஆண்டுகளில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆட்கொல்லி என்ற பெயரில் மூன்று புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. தற்போது, கர்நாடக மாநிலத்தில் இந்த ஆட்கொல்லிப் புலியை உயிருடன் பிடித்திருப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.

மிகவும் சிக்கலான சூழலில் புலிகள் வாழ்ந்துவருகின்றன. மூன்று மாநில வனத்துறையும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் புலிகளைப் பாதுகாக்க முடியும் என்பது காட்டுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோள்.

`6 கும்கி யானைகள்; 200 ஊழியர்கள்; கேமரா கண்காணிப்பு!' - 5 நாளுக்குப் பின்னர் சிக்கிய ஆட்கொல்லி புலி