Published:Updated:

கூடலூர்: `ஒரே வாரத்தில் 4 பேர் பலி’ - தொடரும் யானை - மனித எதிர்கொள்ளலால் கொதிக்கும் மக்கள்

பந்தலூரில் போராடும் மக்கள்
பந்தலூரில் போராடும் மக்கள்

கூடலூரில் யானை - மனித எதிர்கொள்ளலால் இரண்டு நபர்கள் உயிரிழந்த சோகம் தீரும் முன்னரே மேலும் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் ஸ்ரீமதுரை, ஓடக்கொல்லி பகுதிக்ளிலுள்ள காப்பித் தோட்டத்தில் கடந்த 8-ம் தேதி வேலை செய்துகொண்டிருந்த மணி (52) என்பவரை அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாகத் தாக்கியதில் உடல் சிதைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யானை தாக்கி உயிரிழந்த ஆனந்தராஜ்
யானை தாக்கி உயிரிழந்த ஆனந்தராஜ்

இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை சேரம்பாடி, கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்துவந்த நாகமுத்து (65) என்பவர் இரவு 9:30 மணியளவில் அருகிலுள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்கச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் கடைவீதியில் யானை தாக்கி, படுகாயமடைந்து உயிரிழந்தார்.

அடுத்தடுத்து நடந்த யானை- மனித எதிர்கொள்ளல்களால் மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

யானை தாக்கி உயிரிழந்த தந்தை, மகன்
யானை தாக்கி உயிரிழந்த தந்தை, மகன்

இந்தநிலையில், கூடலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் (தி.மு.க) ஆனந்தராஜ் (49), அவருடைய மகன் பிரசாந்த் (21) இருவரும் நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்புகையில் யானை தாக்கியதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே வாரத்தில் நான்கு பே யானை- மனித எதிர்கொள்ளல்களால் உயிரிழந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

பந்தலூரில் போராடும் மக்கள்
பந்தலூரில் போராடும் மக்கள்

பந்தலூர் பகுதிகளிலுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, பந்தலூரில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுத் தரப்பில் அதிகாரிகள் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பந்தலூர் சுதாகர், ``இந்தப் பகுதியில் கடந்த ஒரே வாரத்தில் நான்கு பேர் யானை- மனித எதிர்கொள்ளல்களால் உயிரிழந்திருக்கிறார்கள். யானையைப் பிடித்து வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி, முழு அடைப்புப் போராட்டத்தை நடத்திவருகிறோம். இறந்தவர்களின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாத வகையில் மின்வேலிகள் மற்றும் அகழிகள் அமைக்க வேண்டும்" என்றார்.

பந்தலூரில் போராடும் மக்கள்
பந்தலூரில் போராடும் மக்கள்

மக்கள் போராட்டம் குறித்து வனத்துறையினர், ``குறிப்பிட்ட யானையைக் பிடிக்க முதுமலையிலிருந்து விஜய், வசீம், டாப்சிலிப்பிலிருந்து கலீம் ஆகிய கும்கிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு