பெங்களூருவைச் சேர்ந்த இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக இருக்கும் எஸ் சதீஷ் என்பவர், 20 கோடி ரூபாய்க்கு `காகசியன் ஷெப்பர்ட்’ (Caucasian Shepherd) இன நாயை ஹைதராபாத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து வாங்கி உள்ளார்.
ஒன்றரை வயதுடைய இந்த அரிய வகை நாய்க்கு, `கடபோம்ஸ் ஹேடர்’ என்று பெயர் வைத்துள்ளார். 100 கிலோ எடை கொண்ட இந்நாய் ஒரு பெண் சிங்கத்தைப் போல் பெரியது என சதீஷ் தெரிவித்துள்ளார். நாயின் தலை 38 அங்குல அளவிலும், தோள் 34 அங்குல நீளத்திலும் உள்ளது. நாயின் கால் இரண்டு லிட்டர் பெப்சி பாட்டிலைப் போன்ற அளவு கொண்டது.
சிறந்த நாயினப் போட்டியில் காகசியன் ஷெப்பர்ட் 32 மெடல்களை வென்றுள்ளது. 2016-ல் இரண்டு கொரிய மஸ்டிஃப் நாய்க் குட்டிகளை 2 கோடி ரூபாய்க்கு வாங்கி இவர், கடந்த 20 ஆண்டுகளாக காகசியன் ஷெப்பர்ட் நாயினத்தை வளர்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
காகசஸ் பிராந்தியத்தில் உள்ள ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஒசேஷியா, சர்க்காசியா, துருக்கி, ரஷ்யா மற்றும் தாகெஸ்தான் ஆகிய நாடுகளில், காகசியன் ஷெப்பர்ட் பாதுகாவல் நாயாக வளர்க்கப்படுகிறது. இந்த இன நாய்கள் இந்தியாவில் மிக அரிதாகவே வளர்க்கப்படுகின்றன.