Published:Updated:

`பயந்தது, தற்போது மகிழ்ச்சியா இருக்கு!'- 3 ஆண்டுகளுக்குப் பிறகு அசத்திய மசினி யானை

ரா.சதீஸ்குமார்

சமயபுரம் கோயிலுக்குள் பாகனைக் கொன்ற மசினி யானை மீண்டும் முதுமலைக்கே திரும்பிய நிலையில், தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து விநாயகர் முன்பு மண்டியிட்டு மூன்று முறை கோயிலை வலம் வந்து வழிபட்டது.

Masini and Krishna Elephants
Masini and Krishna Elephants

ஆசியாவின் பழைமையான வளர்ப்பு யானைகளின் முகமாக முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் விளங்கிவருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மரங்களைச் சுமக்கவும் வேறு பணிகளுக்கும் யானைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது 25 வளர்ப்பு யானைகள் முதுமலையில் உள்ளன. ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் கும்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் யானை சவாரி மற்றும் ரோந்துப் பணிகளுக்கும் இந்த யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Masini
Masini

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோயிலில் யானைகளே மணி அடித்து கோயிலை வலம்வந்து மண்டியிட்டு வழிபடும் இதைக் காண ஏராளமான உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் வருவார்கள். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அனைத்து யானைகளும் அவற்றின் விருப்பம் போல மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டு சந்தனத்தால் அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலை அணிவித்து கோயிலின் முன்பு அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டன. மற்ற யானைகள் கோயிலின் முன்புறம் நிற்க மசினி மற்றும் கிருஷ்ணா ஆகிய இரண்டு யானைகள் கோயில் வளாகத்துக்குள் சென்று மூன்று முறை கோயிலைச் சுற்றி வலம் வந்து மணி அடித்து மண்டியிட்டு வழிபாடு செய்தன.

Masini and Krishna Elephants
Masini and Krishna Elephants

மற்ற அனைத்து யானைகளையும் ஒரே நேரத்தில் பிளிறி வணங்கின. பின்னர் யானைகளுக்காக தயார் செய்யப்பட்ட சிறப்பு உணவுகள் மற்றும் யானைகளுக்கு மிகவும் பிடித்த கரும்பு, வெல்லம், ஆப்பிள், வாழை போன்றவை வழங்கப்பட்டன. இதில் சிறப்பு என்னவென்றால் மூன்று ஆண்டுகளுக்குப்பின் முதுமலையின் செல்லப்பிள்ளையான மசினி யானை பூஜை செய்தது.

முதுமலை முகாமிலிருந்து கடந்த 2016-ம் ஆண்டு மசினி யானை கோயில் பணிக்காக திருச்சி சமயபுரம் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இயற்கைச் சூழலில் வளர்ந்த மசினி நகர்ப் பகுதிக்குச் சென்றதும் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு சமயபுரம் கோயிலுக்குள் கஜேந்திரன் என்ற தனது பாகனையே கொன்றது. சிலரை தாக்கியது. உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட மசினி யானையை முதுமலைக்கே கொண்டுசெல்ல உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Camp elephants
Camp elephants

கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான நிலையில் முதுமலைக்குக் கொண்டுவரப்பட்டது. வனத்துறையினரின் தொடர் கவனிப்பால் தற்போது இயல்புக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப்பின் முதுமலையில் விநாகர் சதுர்த்திக்கு பூஜை செய்து வழிபட்டது மசினி.

மசினி குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “உயிருக்கு ஆபத்தான நிலையில் 9 மாதங்களுக்கு முன்பு தாய்வீடான முதுமலைக்கு மசினி கொண்டுவரப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களின் அர்ப்பணிப்பால் தற்போது நல்ல நிலையில் உள்ளது. எனவே, மூன்று ஆண்டுகளுக்குப்பின் கோயிலில் மசினியை வழிபாடு நடத்த செய்தோம்” என்றனர்.

Camp elephants
Camp elephants

மசினி யானையின் பாகன் கூறுகையில், “மசினிக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமடைந்து வருகின்றன. உடல் எடையும் கூடி வருகிறது. ஆற்றில் இறங்கவே பயந்த மசினி தற்போது மற்ற யானைகளுடன் விளையாடி மகிழ்ச்சியா உள்ளது. பழைய நினைவுகளை மறக்காமல் மணியடித்து மண்டியிட்டு வழிபட்டது” என்றார்.