Published:Updated:

'ஐ.டி வேலைலாம் அப்புறம்... காங்கேயம் காளைகள்தான் முக்கியம்!' இளைஞர்களின் ஆர்வம்

காங்கேயம் காளை
காங்கேயம் காளை ( படம் தி.விஜய் )

கொங்க கோசாலை, பழைய கோட்டை சந்தை, ஆண்ட்ராய்டு ஆப், சமூக வலைதளங்கள் என்று காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க 360 டிகிரியில் இயங்கி வருகிறார்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்காக, தமிழக இளைஞர்கள் துள்ளியெழுந்து நடத்திய மெரினா புரட்சி உலகம் முழுவதும் பெரிய கவனத்தை ஈர்த்தது. அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த பலனாக ஜல்லிக்கட்டுக்கான தடையும் நீங்கியது. இந்தப் போராட்டத்தின்போது, நம் நாட்டு மாடு இன அழிப்பு தொடர்பான கார்ப்பரேட்களின் சதியும் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டது. ஆனால், மெரினா புரட்சிக்கு முன்பு இருந்தே, நாட்டு மாடுகளை பாதுகாக்க ஆங்காங்கே சிலர் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர். அதில் ஒருவர்தான் சிவக்குமார்.

சிவக்குமார்
சிவக்குமார்
தி.விஜய்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், தனது அமெரிக்க பணியை விட்டுவிட்டு, காங்கேயம் காளை இனத்தைப் பாதுகாப்பதற்காக இயங்கி வருகிறார். கொங்க கோசாலை, பழைய கோட்டை சந்தை, ஆண்ட்ராய்டு ஆப், சமூக வலைதளங்கள் என்று காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க 360 டிகிரியில் இயங்கி வருகிறார் சிவக்குமார். கோவை கொடிசியாவில் நடைபெற்ற அக்ரி கண்காட்சியில், ஏ.சி ஹால்களில் உள்ள ஸ்டால்களைவிட, அந்த ஹால்களுக்கு வெளியே இருந்த சிவக்குமாரின் காங்கேயம் இன காளைகளைப் பார்க்கக் கூட்டம் அள்ளியது. மக்களிடம் காங்கேயம் காளை குறித்து விளக்கிக்கொண்டே நம்மிடம் பேசினார் சிவக்குமார்.

"எனக்கு திருப்பூர்தான் சொந்த மாவட்டம். விவசாயக் குடும்பம் என்பதால், மேய்ச்சல் நிலத்தையும், நாட்டு மாடுகளையும் பார்த்துதான் நான் வளர்ந்தேன். காங்கேயம் பசுவின் பாலில் தயாரித்த மோர், தயிர், நெய் விரும்பி சாப்பிடுவேன். எம்.பி.ஏ, எம்.எஸ் முடிச்சுட்டு அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் பணியாற்றியவர்கள் எல்லாம் அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்கள். எனக்கு அப்படியெல்லாம் எதுவும் ஆகவில்லை. அப்போதுதான், என்னுடைய ஆரோக்கியம் குறித்து தெரிந்துகொண்டேன். இதனிடையே, எனக்குத் திருமணமாகி மகன் பிறந்தான். எனக்குக் கிடைத்த ஆரோக்கியமான வாழ்க்கை அவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். ஒருமுறை, காங்கேயம் இன பசு வாங்குவதற்காக ஒட்டன்சத்திரம் சந்தைக்குச் சென்றேன். அங்கே காங்கேயம் இன மாடுகளும் இறைச்சிக்காக விற்கப்படுவதைப் பார்த்த போது பாவமாக இருந்தது.

காங்கேயம் காளை
காங்கேயம் காளை
தி.விஜய்

முதல்கட்டமாக, இறைச்சிக்காக விற்கப்பட இருந்த நான்கு காங்கேயம் பசுக்களை வாங்கினேன். அவற்றைப் பராமரிப்பது குறித்து இணையத்தில் பதிவிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த மாடுகளை அதே விலைக்கு வாங்கிச் சென்றனர். இதில் முழுநேரமாக இயங்குவதற்காக, அமெரிக்கா வேலையை விட்டுவிட்டேன். இதையடுத்து, காடையூரில் கொங்க கோசாலையைத் தொடங்கினோம். பழைய கோட்டையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காங்கேயம் மாடுகளுக்கான சந்தை நடத்துகிறோம். இறைச்சிக்குச் செல்லும் காங்கேயம் மாடுகளை, நாங்கள் வாங்கிவந்து பராமரிப்போம். பிறகு, நாங்கள் வாங்கிய விலைக்கே அவற்றை விற்றுவிடுவோம். கோசாலை மூலம் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட காங்கேயம் மாடுகளைப் பாதுகாத்துள்ளோம். சந்தையின் மூலமாகவும் பல ஆயிரம் மாடுகளைப் பாதுகாத்துவருகிறோம். 'கொங்கமாடு' என்ற ஓர் ஆப்பும் இருக்கிறது.

`அடங்காத காளை’ பாண்டியா செய்ய வேண்டிய சின்ன அட்ஜஸ்ட்மென்ட்!
நவீன்குமார்
நவீன்குமார்

இதேபோல காங்கேயம் காளைகளைப் பாதுகாப்பதற்காக, பெங்களூரில் தான் செய்துகொண்டிருந்த பணியை விட்டிருக்கும் நவீன்குமார், "சின்ன வயதிலிருந்தே நாட்டு மாடுகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். காங்கேயம் காளைகளுக்காக மட்டுமே பிரேத்யகமாகப் பழையகோட்டையில் சந்தை நடத்தி வருகிறோம். இதில், வேறு கலப்பின மாடுகளுக்கு அனுமதி இல்லை. விவசாயிகளும் பொது மக்களும் நேரடியாக வந்து மாடுகளை வாங்கிக்கொள்ளலாம். இடைத்தரகர்கள் இல்லை. அதேபோல, வெட்டு ஆள்களுக்கும் அனுமதி இல்லை. கோசாலையில் 40 மாடுகள் இருக்கின்றன. இனப்பெருக்கத்துக்காக இரண்டு காளைகளை வைத்திருக்கிறோம்.

காங்கேயம் காளைகள்
காங்கேயம் காளைகள்
தி.விஜய்

காங்கேயம் பசுவில், பால் குறைவாக இருந்தாலும், அதில் கிடைக்கும் சக்தி சீமைப்பாலில் கிடைக்காது. 'வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு… வியாதிக்கு பூட்டுப் போடு' என்பதுதான் எங்களின் கொள்கை. காங்கேயம் மாடுகளைப் பாதுகாக்க, அவற்றை வர்த்தக ரீதியாகவும் நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எனவே, இதில் விபூதி தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இரண்டு மாடுகளை வைத்திருந்தால் விபூதி மூலமாகவே மாதம் 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம். இதுதவிர, பஞ்ச கவ்யா, ஜீவாமிர்தம், மருந்துகள், கோமியத்தில் இருந்து பினாயில் போன்ற சுத்தம் செய்யும் பொருள்கள் என்று வருமானம் பெருக்க பல வழிகள் இருக்கின்றன. இதுகுறித்தும் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் பயிற்சியும் விழிப்புணர்வும் அளித்து வருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு