Published:Updated:

`புலியைப் பார்க்க 3 வருஷம் காத்திருந்தேன்!' 70 வயதில் ஒரு வைல்டுலைஃப் போட்டோகிராபர்

கே.ஜி.மோகன்குமார்
கே.ஜி.மோகன்குமார் ( ஆர்.எம்.முத்துராஜ் )

70 வயதிலும் காடுகளின் மீது உள்ள காதலால் இன்னும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருக்கிறார் மோகன்குமார்.

காடுகளில் வாழும் விலங்குகள், பறவைகளிடமிருந்து அன்பு, காதல், பொறுமை என எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்காக உலகம் முழுவதும் உள்ள காடுகளை நோக்கி பயணம் செய்கிறார் 70 வயதான முன்னாள் அரசு ஊழியர் மோகன்குமார்.

பறவை
பறவை
ஆர்.எம்.முத்துராஜ்

அரசுப் பணியில் இருந்து ஓய்வு கிடைத்துவிட்டது. அப்புறம் என்ன... பிள்ளைகள், பேரக்குழந்தைகள், குடும்பம் என வீட்டிலேயே இருந்து நேரத்தை செலவிட வேண்டியதுதானே? இதுதான் ஓய்வுபெற்ற பெரும்பாலானோரின் விருப்பம். ஆனால், மின்வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கே.ஜி.மோகன்குமார் அப்படி சிந்திக்கவில்லை. வீடு, வேலை, குடும்பம் என்பது மட்டும் வாழ்க்கையில்லை. ஓய்வுக்குப் பின்பும் ஓர் அழகான வாழ்க்கை இருக்கிறது.

இந்த உலகத்தை எல்லாம் சுற்றி வரவும், அழகழகாக ரசிக்கவும் எவ்வளவோ இடங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் வீணடிக்கக் கூடாது என்பதை முழுமையாக புரிந்துகொண்டவர், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறி காடு காடாக சுற்றத் தொடங்கினார். ஆர்வத்தைப் புரிந்துகொண்ட இவரது குடும்பத்தினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. வெளியே நிறைய நண்பர்களை உருவாக்கிக்கொண்டார்.

புலி
புலி
ஆர்.எம்.முத்துராஜ்

இயற்கை, புகைப்படம் சம்பந்தமாக அவர்களுடன் உரையாடினார். மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் என இப்படியே 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது தன் அனுபவங்களையும், தான் எடுத்த புகைப்படங்களையும் 'A commonman become a tigerman' என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். தான் எடுத்த புகைப்படங்களாலேயே தன் வீட்டின் வரவேற்பறையை அலங்கரித்துள்ளார்.

அவரிடம் பேசினோம். ``கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குற்றாலம் அருகே உள்ள கும்பாவுருட்டி நீர்வீழ்ச்சிப் பகுதியில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தேன். அப்போது மரத்தில் இருந்த காட்டு அணிலை யதேச்சையாக புகைப்படம் எடுத்தேன். அந்தப் புகைப்படத்தை என் மகளுக்கு அனுப்பியிருந்தேன். அவரின் தோழி அந்தப் புகைப்படத்தை எடுத்து விகடன் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்தப் படத்துக்கு பாராட்டு கிடைத்தது.

யானை
யானை
ஆர்.எம்.முத்துராஜ்

லட்சக்கணக்கில் பணம் கிடைத்தால்கூட கிடைக்காத மகிழ்ச்சியை ஒரு பாராட்டுதானே கொடுக்கும். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அது எனக்குள் உருவாக்கியது. ஆரம்பத்தில் விலங்குகளைத்தான் படம்பிடிக்க ஆரம்பித்தேன். விலங்குகளை மட்டுமே தேடி ஓடினேன்.

சிங்கம்தான் காட்டுக்கே ராஜா என்றாலும் என்னை பொறுத்தவரை புலிதான் காட்டின் ராஜா. அதன் நடை, நேர்கொண்ட பார்வை, கம்பீரம் இவை எல்லாம் அவ்வளவு அழகாக இருக்கும். எப்படியாவது புலியை படம்பிடித்து விட வேண்டும் என ஆண்டுக்கணக்கில் அலைந்தேன். இப்படியாக 3 ஆண்டுகள் ஓடின. ஆனால் புலியைக் காண முடியவில்லை.

இருவாச்சி பறவை
இருவாச்சி பறவை
ஆர்.எம்.முத்துராஜ்

3 ஆண்டு தேடலுக்குப் பின் மத்தியப்பிரதேச மாநிலம் பந்தாவ்கர் தேசியப் பூங்காவுக்கு 5 நாள் பயணம் சென்றோம். பயணத்தின் இறுதிநாளில் புலியை தேடிக்கொண்டிருந்தபோது பெண் புலி ஒன்று என் அருகே நின்றது. 3 ஆண்டு தேடலுக்குப் பின் மிக அருகிலேயே புலியைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியை விளக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக நாம் தேடிக்கொண்டிருக்கும் தாய் திடீரென ஒருநாள் நம் கண் முன்னால் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த அனுபவம்.

இரண்டு நிமிடம் அந்தப் புலியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்புறம்தான் புகைப்படம் எடுத்தேன். என் தேடல் எதுவும் வீண்போகவில்லை. அடுத்த 10 நிமிடத்தில் மற்றொரு ஆண் புலி ஒன்றும் வந்தது. இப்படியே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா என இந்தியா முழுவதும் காடுகளையும், அங்கே வாழும் உயிரினங்களையும் நோக்கியே என் பயணம் தொடர்ந்தது.

கே.ஜி.மோகன்குமார்
கே.ஜி.மோகன்குமார்
ஆர்.எம்.முத்துராஜ்

இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக கிராமங்களை நோக்கிச் சென்றேன். அந்தப் பயணத்தின் இலக்கு இதுவரை ஒரு லட்சம் கிலோ மீட்டரை தாண்டிவிட்டது. ஆசியா, லண்டன், கனடா, ஸ்காட்லாந்து, இலங்கை என வெளிநாடுகளுக்கும் பயணம் செய்துள்ளேன். புலி, சிறுத்தை, சிங்கம், யானை, குரங்கு, மயில், இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துள்ளேன்.

ஒரு யானையைக் காப்பாற்ற போராடிய இரண்டு யானைகள், தன் துணை மற்றும் குஞ்சுகளின் உணவுத் தேவைக்காக அலையும் இருவாச்சி (Harnbills) பறவை என ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு பறவையும் நிறைய அனுபவங்களை கற்றுத் தந்தன. அன்பு, உதவி, காதல், பொறுமை என காட்டில் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்.

குரங்கு
குரங்கு
ஆர்.எம்.முத்துராஜ்

ஒரு மில்லியன் டாலர் கொடுக்காத மகிழ்ச்சியை ஒரு புகைப்படம் கொடுத்துவிடும். ஒரு பறவையையோ, விலங்கையோ படம் பிடிக்க நினைத்தால் பொறுமை மிக அவசியம். கண்ணிலேயே கேமராவை வைத்தபடி பல நாள்கள் காத்திருந்தேன். காலையிலிருந்து மாலை வரை 8 மணி நேரம் காத்திருந்து எடுத்த புகைப்படத்தையும், ஒரு வாரம் காத்திருந்து எடுத்த புகைப்படத்தையும் மறக்க முடியாது.

காடுகளில் பிளாஸ்டிக், கண்ணாடிகளை நாம் தூக்கியெறிவதாலும் நாம் உணவு கொடுப்பதும் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்திவிடுகிறது. இயற்கையிலேயே அதற்கு கிடைக்கும் உணவை அந்த உயிரினங்கள் சாப்பிடுவதுதான் நல்லது. ஆனால், நாம் கொடுக்கும் உணவை சாப்பிடும் உயிரினங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இயற்கையை அப்படியே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் வனங்கள் இன்னும் வளமாகவும், அங்கே வாழும் உயிரினங்கள் நன்றாகவும் இருக்கும்.

சிங்கம்
சிங்கம்
ஆர்.எம்.முத்துராஜ்

வயதான காலத்தில் ஓய்வெடுக்காமல் ஏன் இப்படி அலைகிறாய் எனச் சிலர் கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், அமைதியும் அவர்களுக்குத் தெரியாது. ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம் என அர்த்தம். என் பிள்ளைகள் எனக்கு அதற்கான வாய்ப்பைக் கொடுத்தார்கள். நான் பயணிக்கிறேன். ஓய்வுக்குப் பின்புதான் காடுகளையும், அதில் வாழும் பறவை, விலங்குகளையும் அதன் இருப்பிடத்துக்கே சென்று புகைப்படம் மூலம் படிக்க ஆரம்பித்தேன். இன்று காட்டை தேடி ஓடிக்கொண்டிருக்கிறேன். அதனால் என் வயது குறைந்துகொண்டே இருப்பதாக உணருகிறேன்” என புன்சிரிப்போடு பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு