Published:Updated:

`8 வருடமாக ஒரே இடத்தில் வேலை; தொடரும் புலிகள் இறப்பு'- டிரான்ஸ்பர் சர்ச்சையில் மேகமலை வனத்துறை!

நேற்று மேகமலையில் ஆண் புலி ஒன்று இறந்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த ஆண் புலி
இறந்த ஆண் புலி

மேகமலையை புலிகள் சரணாலயமாக மாற்றும் வேலைகள் மந்தமாக நடந்துவரும் சூழலில், நேற்று மேகமலையில் ஆண் புலி ஒன்று இறந்துள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேகமலை
மேகமலை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. பல்லுயிர் சூழல் மிகுந்த மேகமலையில் புலிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாகவும், விரைவில், மேகமலையை புலிகள் சரணாலயமாக அறிவிக்க இருக்கப்பதாகவும் தகவல் வெளியானது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துவந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக புலிகள் சரணாலயமாக மாற்றும் வேலைகளைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம், மேகமலையில் ஆண்புலி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த புலியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இறந்த ஆண் புலி
இறந்த ஆண் புலி

பின்னர் பேசிய வனத்துறை அதிகாரிகள், ``ஒன்றரை வயது ஆண் புலி, வேட்டைக்கான எந்த அடையாளமும் இல்லை. இடத்துக்கான பிரச்னை ஏற்பட்டு மற்றொரு ஆண்புலியால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறது. இறந்து சில நாள்கள் ஆனதால், அழுகிய நிலையில் புலியின் உடல் இருந்தது” என்றனர்.

இதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினர் எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, தமிழக எல்லைக்குள் துர்நாற்றம் வீசுவதாக தமிழக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பின்னர், மேகமலைக்குச் சென்ற தமிழக வனத்துறை, அழுகிய நிலையில் கிடந்த சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலியின் உடலைக் கைப்பற்றியது.

ஏப்ரல் மாதம் இறந்த ஆண் புலி
ஏப்ரல் மாதம் இறந்த ஆண் புலி

தொடர் ரோந்துப்பணியில் வனத்துறை ஈடுபடாததே அழுகிய நிலையில் புலிகளின் உடலைக் கைப்பற்றக் காரணமாகிறது. புலிகள் நடமாட்டம் அதிகரித்திருக்கும் மேகமலையில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுவதில் என்ன பிரச்னை என வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், ``மேகமலையில் வேலை செய்யும் பலருக்கு கடந்த மாதம் பணி மாறுதல் செய்யப்பட்டது. ஆனால், அவர்கள், பல்வேறு காரணங்களைக் கூறி பணி மாறுதலுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

8 வருடங்களுக்கு மேலாக மேகமலையில் சிலர் வேலை செய்கின்றனர். தொடர்ச்சியாக அதிகாரிகளையும், ஊழியர்களையும் மாற்றினால்தானே வேலை நடக்கும். ஒரே இடத்தில் வேலை செய்யும்போது, தங்களை (மேகமலை) தனிக்காட்டு ராஜா போல நினைத்துக்கொள்கிறார்கள். மேகமலை புலிகள் சரணாலயமாக மாறினால், இதுபோல நடக்காது” என்று கூறிய அவர், ``புலிகள் சரணாலயமாக மாறினால், வேலைப்பழு அதிகரிக்கும் என அச்சத்தில் இருக்கும் இவர்களால் கூட, அப்பணி தாமதமாகலாம்” என்றார்.