Published:Updated:

தூத்துக்குடி: ஊருக்குள் புகுந்த மிளா உயிரிழப்பு; மீட்புப்பணியில் வனத்துறையின் அலட்சியம்தான் காரணமா?

மிளா உயிரிழப்பு

தூத்துக்குடியில் வணிக வளாகத்துக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் கயிறு கட்டி, பிடித்ததில் கழுத்தில் இறுகி பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் மிளா உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

தூத்துக்குடி: ஊருக்குள் புகுந்த மிளா உயிரிழப்பு; மீட்புப்பணியில் வனத்துறையின் அலட்சியம்தான் காரணமா?

தூத்துக்குடியில் வணிக வளாகத்துக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் கயிறு கட்டி, பிடித்ததில் கழுத்தில் இறுகி பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் மிளா உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

Published:Updated:
மிளா உயிரிழப்பு

தூத்துக்குடியில் வணிக வளாகத்துக்குள் புகுந்த மிளாவை வனத்துறையினர் கயிறு கட்டி பிடித்ததில், கழுத்தில் இறுகி பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் மிளா உயிரிழந்ததாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி கீழ பஜாரில் வழிதவறி வந்த மிளா ஒன்று அங்கிருக்கும் வணிக வளாகத்துக்குள் புகுந்தது. இதைப் பார்த்த வியாபாரிகள், பொதுமக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் மிளாவை மீட்டுச் செல்வதற்கு போதிய உபகரணங்கள் கொண்டு வராததால், திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினரிடம் கயிறு வாங்கினர். பின்னர் அந்தக் கயிற்றில் சுருக்கு வைத்து மிளாவின் கழுத்தில் மாட்டிப் பிடிக்க முயன்றனர். அப்போது மிளா பயத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இதில் கழுத்தில் கயிறு இறுகியதில் மிளா மயங்கியது.

தூத்துக்குடி: ஊருக்குள் புகுந்த மிளா உயிரிழப்பு; மீட்புப்பணியில் வனத்துறையின் அலட்சியம்தான் காரணமா?

பின்னர் மிளாவை வனத்துறையினர் மீட்டு திருச்செந்தூர் வனச் சரக அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு கயிறு இறுகியதால் மிளா உயிரிழந்து விட்டது.

இது குறித்து அந்தப் பகுதியினரிடம் விசாரித்தோம். ``உடன்குடி அருகிலுள்ள தேரிக்காடு பகுதியில் மிளா, புள்ளிமான்கள் காணப்படுகின்றன. இந்த மிளா வழி தவறி ஊருக்குள் வந்ததுபோல் தெரிகிறது. மக்களைப் பார்த்து பயந்து ஓடி, கடைசியாக கீழ பஜாரிலுள்ள வணிக வளாகத்துக்குள் நுழைந்தது. திருச்செந்தூர் வனத்துறைக்குத் தகவல் சொல்லியும் சுமார் மூன்று மணி நேரம் தாமதமாகத்தான் வந்தார்கள். வந்தவர்கள் கையில் எந்த உபகரணமும் எடுத்து வரவில்லை. இங்கு வந்த பிறகு அருகிலுள்ளவர்களிடம் மிளாவைப் பிடிக்க கயிறு கேட்டார்கள்.

கடைசியில் தீயணைப்புத்துறையினரிடமிருந்து கயிற்றை வாங்கினார்கள். வளாகத்தின் மாடிப்பகுதியில் ஒருவர் நின்று கயிற்றில் சுருக்கு மாட்டி கீழ் நோக்கி இறக்கி மிளாவின் தலை வழியேவிட்டு இறுக்கினார். கயிறு மிளாவின் கழுத்தில் இறுகியது. வலியால் கத்திக்கொண்டே மிளா அங்குமிங்கும் ஓடியது.

தூத்துக்குடி: ஊருக்குள் புகுந்த மிளா உயிரிழப்பு; மீட்புப்பணியில் வனத்துறையின் அலட்சியம்தான் காரணமா?

சுற்றி நின்ற பொதுமக்கள் கயிற்றின் இறுக்கத்தைச் சற்று விடுவிக்கச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் எதையுமே காதில் வாங்கவில்லை. உடனே தரையில் படுத்து தலையை தூக்கியபடியே மிளா காலை வேகமாக உதறியது. அப்போதே இறந்திருக்கும் என நினைக்கிறோம். ஆனால், மிளா மயங்கிவிட்டது எனச் சொல்கிறார்கள்.

இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன்பு வல்லநாடு வெளிமான்கள் சரணாலயப் பகுதியிலிருந்து வழிதப்பி 5 வயது மதிக்கத்தக்க ஒரு மிளா, ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பஜார் பகுதியில் புகுந்தது. அப்போது மிளாவை மீட்க வந்த வல்லநாடு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க முயன்றனர். திருநெல்வேலி வனக்கால்நடை மருத்துவப் பிரிவு மருத்துவர் தலைமையிலான குழுவினர் துப்பாக்கிகள் மூலம் ஐந்து மயக்க ஊசிகள் செலுத்தினர். பின்னர் மயங்கிய மிளாவை வல்லநாடு வனப்பகுதியில் விட்டனர். இதைப்போல உடன்குடியில் புகுந்த மிளாவை மயக்க ஊசி செலுத்தி மீட்காவிட்டாலும் குறைந்தபட்சம் வலை வீசியிருந்தால்கூட மிளா உயிரிழக்காமல் பிழைத்திருக்கும். கழுத்தில் கயிறு இறுகியதால் மூச்சுத்திணறித்தான் இறந்திருக்கும். மிளாவின் இறப்புக்கு வனத்துறையினரின் அலட்சியம்தான் காரணம்" என்றனர்.

தூத்துக்குடி: ஊருக்குள் புகுந்த மிளா உயிரிழப்பு; மீட்புப்பணியில் வனத்துறையின் அலட்சியம்தான் காரணமா?

இது குறித்து மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமரிடம் கேட்டபோது, ``மிளா ஒரு மான் வகையைச் சேர்ந்த சென்சிட்டிவான விலங்கு. மிளா ஊருக்குள் வந்த தகவல் கிடைத்தவுடன் வன அலுவலர்கள் அதைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மக்களைக் கண்டவுடன் அச்சத்தில் மிளாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். வனத்துறையினர் கழுத்தில் கயிறு போட்டுப் பிடித்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்படும். உயிரிழந்த மிளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. அதனடிப்படையில் வனத்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.