Published:Updated:

`ராமுவோடு ஜோடி சேர்ந்த ரைன்'!- வண்டலூரில் உலக காண்டாமிருக தினம் கொண்டாட்டம்

உச்சிக் கொம்பன், மூக்குக் கொம்பன் எனப் பல்வேறு பெயர்களோடு அழைக்கப்படும் காண்டாமிருகத்தைச் சிறப்பிக்கும் வகையில் இன்று உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் காண்டாமிருகத்திற்கு ஜோடி கிடைத்துள்ளது.

Rhinoceros, Vandalur Zoo
Rhinoceros, Vandalur Zoo

யானைக்கு அடுத்த மிகப்பெரிய விலங்காக காண்டாமிருகம் கருதப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இமய மலை அடிவாரங்களில் உள்ள காடுகள் மற்றும் புல்வெளிகளில் காண்டாமிருகங்கள் வாழ்கின்றன. ஆப்பிரிக்கக் காண்டாமிருகத்திற்கு இரண்டு கொம்புகள் இருக்கும். ஆனால் இந்திய வகை காண்டாமிருகத்திற்கு ஒற்றைக் கொம்பு மட்டுமே இருக்கும். தற்போது இந்தியாவில் சுமார் 2700 காண்டாமிருகங்கள் மட்டுமே உள்ளன.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா முக்கியமானது. இங்கு சுமார் 171 இனங்களில் 2500க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ராமு என்ற ஆண் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையாளர்களுக்குத் திறந்து வைத்தார்.

Rhinoceros, Vandalur Zoo
Rhinoceros, Vandalur Zoo

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் கங்கை நீர் முதலைகளும் பீகாரில் உள்ள சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது. விலங்கியல் மருத்துவக்குழு மற்றும் வன அலுவலர்களால் 2500 கி.மீ சாலைவழியாக இந்த விலங்குகள் வண்டலூர் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டன.

ரைன் எனப் பெயர் சூட்டப்பட்ட இரண்டு வயதுப் பெண் காண்டாமிருகம் ஏற்கெனவே இந்தப் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட காண்டாமிருகமாகும். இந்தக் காண்டாமிருகம் பூங்காவின் சூழலுக்கேற்ப தன்னைப் பழக்கிக் கொண்டுள்ளது. இதற்கு ஜோடியாக ராமு என்ற காண்டாமிருகம் கொண்டுவரப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் இங்குள்ள காண்டாமிருகங்களைக் கண்டு ரசிக்கிறார்கள். உலக காண்டாமிருக தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் வண்டலூர் உயிரியில் பூங்காவில் நடைபெற்று வருகின்றன.