Published:Updated:

`குட்டிகளுடன் தண்ணீருக்குத் தவித்த யானைக் கூட்டம்!' -போக்குவரத்தை நிறுத்தி நெகிழவைத்த ஊட்டி வனத்துறை

elephants
elephants

பல மணி நேரமாக சாலையைக் கடக்க முடியாமல் தவித்த யானைக்கூட்டத்துக்காகப் போக்குவரத்தையே நிறுத்திய வனத்துறைக்கு பாராட்டுகள் குவிகின்றன.

உறைபனியின் தாக்கத்தால் பெரும்பாலான வனப்பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. பசும்புற்களையும் தண்ணீரையும் தேடி யானை, காட்டு மாடு, மான்கள் ஆகியவை கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வருகின்றன. வறட்சியால் காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் உள்ளது.

elephants
elephants

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள பர்லியார் வனப்பகுதியில் ஒன்பது யானைகளைக் கொண்ட யானைக் கூட்டம் ஒன்று தங்களின் வாழிடமாகக் கொண்டுள்ளன. காலநிலைக்கு ஏற்ப உணவு தேடலுக்கும் இணைசேரலுக்கும் ஆண்டாண்டு காலமாக கெத்தை- கல்லார் வழித்தடத்தைப் இவைகள் பயன்படுத்தி வந்தன. ஆனால், வளர்ச்சியின் பெயரால் இந்தப் பகுதிகளில் பணப்பயிர்களைப் பயிரிட்டும் காட்டேஜ்கள் கட்டியும் சாலைகள் அமைத்தும் வேலிகளை அமைத்தனர்.

`குட்டி யானை எடுத்து வைத்த முதல் அடி; கொள்ளை அழகு!’ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இதனால் தங்கள் வழித்தடங்களை இழந்த யானைகள் பாதை மாறி உலவிக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்தான் குன்னூர் நகர் வரையில் யானைகள் வருகின்றன. அப்படி வரும் யானைகளையும் மக்கள் சும்மா விடுவதில்லை. வேடிக்கை பார்க்கிறோம் என்ற பெயரில் பெரும் தொந்தரவு செய்து வனத்துறையினறையும் பணி செய்யவிடாமல் இடையூறு செய்கின்றனர்.

traffic
traffic

இந்தநிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனத்துக்குள் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த யானைக்கூட்டம் ஒன்று நீர்நிலைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முடியாமல் தவித்தது. இதை அறிந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைகளைக் கண்காணித்து இரண்டு பக்கமும் போக்குவரத்தை சிறிது நேரம் நிறுத்தினர்.

வாகன போக்குவரத்தின்றி சாலை அமைதியாக இருப்பதை அறிந்துகொண்ட யானைகள் மெல்ல முன்னேறி சாலையோரம் வந்தன. முதலில் கூட்டத்தில் உள்ள பெண் யானை சாலைக்கு வந்து நோட்டமிட, பின்னர் மற்ற யானைகளும் குட்டியைக் கால்களுக்கு இடையில் நடக்கச் செய்து கடந்து சென்றன. 9 யானைகளும் சாலையைக் கடந்து வனத்துக்குள் சென்ற பிறகே போக்குவரத்துக்கு வனத்துறையினர் அனுமதித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர், ``யானை உள்ளிட்ட வன விலங்குகள் இந்த சீஸனில் இடம்பெயர்வது வழக்கம். வனத்தையொட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும்போது இரைச்சல் ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலை, மாலை, இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் இயக்க வேண்டாம். இந்த யானைக்கூட்டத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

elephants
elephants

யானைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் வனக்காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருவதற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களின் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு