Published:Updated:

`ரொம்ப வேகமானது, அதேசமயம் விசுவாசமானது!'- கன்னி இன நாய்களைக் காக்கப் போராடும் முனியாண்டி #MyVikatan

முனியாண்டி
முனியாண்டி

நம் மண்ணின் பாரம்பர்ய நாய் இனங்களான கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை போன்றவைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டேவருகிறது.

ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொருவித பாரம்பர்ய உயிரினங்கள். ஆனால், அதன் அடையாளங்களும் எண்ணிக்கையும் மெள்ள மெள்ள அழிந்துவருகின்றன. அவற்றை காப்பாற்றிக் கரை சேர்ப்பது இங்கு மிகப்பெரும் சவால். அப்படி நம் மண்ணின் பாரம்பர்ய நாய் இனங்களான கோம்பை, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை போன்றவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துகொண்டேவருகின்றன. அப்படிப்பட்ட இந்த இனங்களைக் காப்பாற்றி நிலைநிறுத்துவது, நம் மண்ணின் அடையாளமும் பெருமையும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். ஆனால், ஒரு சிலர் மட்டும் அதைக் காக்கும் மகத்தான பணியில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுவருகின்றனர்.

முனியான்டி
முனியான்டி

அந்த வகையில், கன்னி இன நாய்களைத் தன் சிறு வயது முதல் வளர்த்து, அதன் இனவிருத்தியை அதிகப்படுத்திப் பாதுகாத்து வருகிறார், அருப்புக்கோட்டையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாப்பாக்குடி கிராமத்தில் வசிக்கும் முனியாண்டி என்பவர். இவர், கிருபாகரன் என்பவர் அடைக்கலம் கொடுத்திருக்கும் தோட்டத்தில், கன்னி இன நாய்கள் புடைசூழ வாழ்ந்துவருகிறார். இவரிடம் பேசியபோது... ''அப்போது, கன்னி இன நாய்களை வளர்த்துப் பாதுகாப்பதையும் இதற்காகவே தனக்கு கல்யாணமே வேண்டாம் என வாழ்ந்து வருவதையும் உணர்ச்சிபொங்கச் சொன்னார்.

“ என் பேரு முனியாண்டி. இப்போ, எனக்கு 50 வயசு ஆகப்போகுது. நான் பெறந்தது ஆத்திப்பட்டி. இப்போ நான் இருக்கிற இந்த பாப்பாகுடி கிராமத்துக்கு வந்து முப்பது வருஷம் ஆச்சு. முப்பது வருஷமா இந்த காட்டுக்குள்ளேதான் கெடக்கிறேன். இந்தக் கன்னி நாய்களோடதான் என்னோட காலம் ஓடுது.

முதல்லே எனக்கிட்டே இரண்டு கன்னி நாய்க் குட்டிங்கதான் இருந்துச்சு. இப்போ ஒன்பது நாய்கள் இருக்கு. இந்த நாய்கதான் எனக்கு பாதுகாப்பு. வாழ்க்கை... ஒலகம்... எல்லாமே! எனக்கு அண்ணன் தம்பி இருக்காக... ஆனா, யாரும் ஒதவி இல்லை. இந்த நாய்கள் மட்டுமே எனக்கு ஒறவுகளா இருக்குதுங்க.

என் அம்மா பேரு வள்ளி. நான் பெறந்த ஆறு மாசத்திலேயே செத்துப்போச்சு. அப்பா காளிமுத்து. நான் பொடியனா இருக்கும்போது அவர்தான் என்னை வளர்த்து ஆளாக்கினாரு. சின்ன வயசிலேயே நாய் வளர்க்கிறது, அதுவும் இந்தக் கன்னி இன நாய்களை வளர்க்கிறது எனக்கு ரொம்பப் பிரியம். 15 வயசு இருக்கும்போது அப்பாவும் செத்துப் போயிட்டாரு. அப்பா செத்ததுக்கு அப்புறம், எனக்கு இந்தக் காடும் நாய்களும்தான் ஒலகம். அப்படியே, இந்தக் கன்னி நாய்க்குட்டிகளைப் பிடிச்சிக்கிட்டு இந்தக் காட்டுக்குள்ளே வந்துட்டேன்.

முனியாண்டி
முனியாண்டி

இங்கே வந்து, பக்கத்துலே இருக்கிற கண்மாய்க்குள்ளே ஒரு குடிசையைப் போட்டு உட்கார்ந்தேன். இருபத்தஞ்சு முப்பது வருஷமா இதுக கூடவே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். கண்மாயிலே குடிசை போட்டிருக்கும்போது, ஒரு தரம் வெள்ளம் அதிகமா வந்திடுச்சு. அப்புறம், இப்போ இருக்கிற இந்த தோட்டத்து முதலாளிதான் எனக்கு அடைக்கலம் கொடுத்து இந்த தோட்டத்திலே வந்து தங்கிக்கச் சொன்னாரு.

இந்தக் கன்னி நாய்களை வேட்டைக்குத்தான் வளர்ப்பாங்க. இப்போதான் வேட்டையாடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே. அதனால, யாரும் வேட்டைக்குப் போறதில்லே. ஆனா, வீட்டுக் காவலுக்கும் இந்தக் கன்னி நாய்க ரொம்பக் கெட்டி. காடு, செடி, செத்தைனுகூட பாக்காம இந்த நாய்கள நம்பி படுத்திடலாம். ஒரு புழு பூச்சியைக் கூட நம்ம பக்கத்துலே அண்ட விடாது. விரட்டி அடிச்சிடும். வாட்ச்மேன் வேலைக்குக்கூட இப்போ இந்தக் கன்னி நாய்களைத்தான் போடுறாங்க.

இந்த நாய்க நம்மள ரொம்பக் கவனமா பார்த்துக்கும். அந்த நம்பிக்கை ரொம்ப இருக்கு. ஆனா, மனுஷங்களைத்தான் இன்னைக்கு யாரும் நம்ப முடியலை. இதை நம்பி நாம எங்கேயும் போயிட்டு வரலாம். பார்க்கிறதுக்கு ஒல்லியா ஒடிசலா இருக்குதேன்னு இதுகளை நினைக்க வேண்டாம். ரொம்ப வேகமானதுக. அதேசமயம், விசுவாசமாகவும் இருக்கும்.

வெளிநாட்டு நாய்கள் வளர்த்தா பால் கொடுக்கணும்; கறி போடணும். சோப்பு போட்டு குளிப்பாட்டி விடணும். ஊசி, மருந்து மாத்திரை போடணும். இதுகளுக்கு அப்படி எல்லாம் இல்லை. நாம வைக்கிற கஞ்சியைக் குடிச்சிட்டு, நமக்கு பாதுகாப்பா நம்ம காலடியிலே கெடக்கும். கன்னி நாய்களோட இனம் இப்போ ரொம்ப அழிஞ்சிட்டு வருது. என்னை மாதிரி, ஒருத்தர் ரெண்டு பேருதான் இந்த இன நாய்களை வளர்த்து காப்பாத்திட்டு வர்றோம்.

இந்த நாய்க்குட்டிகளை வீட்டுக் காவலுக்கும், ஆட்டுக்கிடை போடுறவங்களும் விலைக்கு வாங்கிட்டுப் போறாங்க. இந்த இன நாய்க்குட்டி வேற எங்கும் கிடைக்கிறது இல்லை. இந்த ரக உற்பத்தியே இப்போ ரொம்பக் குறைஞ்சு போச்சு. இப்போ என்கிட்டே ஒன்பது நாய்க இருக்குதுங்க. இந்த நாய்க ஒவ்வொண்ணுக்கும் ஒரு பெயர் வைச்சிருக்கேன். பூச்சி, மணி, ராஜா, கருவாயன் அப்படின்னு, அந்தப் பேர்களைச் சொல்லித்தான் கூப்பிடுவேன். அந்தப் பேர் கொண்ட நாய்க மட்டும்தான் எனக்கிட்டே ஓடிவரும். மத்தது எல்லாம் ஓடி வராது. அப்படித்தான் இதுகளை வளர்த்து வெச்சிருக்கேன்.

முனியாண்டி
முனியாண்டி

நான் ஒரு விசில் அடிச்சா போதும், அந்தச் சத்தம் கேட்டு எல்லாம் எங்கே நின்னாலும் அடிச்சுப் பிடிச்சு என்கிட்டே ஓடி வந்திடும். நான் கூலி வேலைக்குத்தான் போறேன். இதுகளைக் காப்பாத்த நான் சம்பாதிக்கணுமே. இதுக்காக அதிகாலை 2 மணிக்கு எந்திரிச்சு, இதுகளுக்கு சோறு பொங்கி வெச்சிட்டுத்தான் நான் வேலைக்குப் போவேன். சோறு சூடா இருந்தா சாப்பிடாதுக. நல்லா ஆற வைக்கணும். அப்புறம் கருவாடு ஏதாச்சும்போட்டு வெஞ்சனம் செய்யணும். ஏதாவது இதுகளுக்கு ' வெடுக்கு' இருக்கணும். வெறுஞ் சோறைத் திங்காதுக.

நான் கூலி வேலைக்குப் போனா, எனக்கு தெனம் நானூறு ரூபாய் சம்பளம் கிடைக்கும். அந்தக் காசிலேதான் இதுகளுக்கு சாயங்காலமும் காலையிலேயேயும் ரெண்டு லிட்டர் பால் வாங்கி கொடுக்கிறேன். நான் ரேசன் அரிசிதான் சாப்பிடுறேன். ஆனா, இந்த நாய்களுக்கு ஒரு குறையும் இல்லாம நல்லா ஆக்கிப் போடுறேன். நம்மளை நம்பி இருக்கிற அதுகளும் நம்ம புள்ளைக இல்லையா..? இப்படித்தான் ஓடிக்கிட்டிருக்கு என் பொழப்பு. நான் வேலைக்குப் போனாத்தான் இதுகளை பசி இல்லாம காப்பாத்த முடியும்.

எனக்கு ஒடம்புக்கு முடியலைன்னாகூட, நான் ஆஸ்பத்திரிக்கு போக மாட்டேன்; ஆனா இந்த நாய்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உடனே துடிச்சுப் போயிடுவேன். சின்னச்சின்ன வியாதிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கிப் போடுவேன். இந்த நாய்களுக்கு ஒரு பெரிய விசேஷ குணம் இருக்கு. அதாவது, இதுகளுக்கு ஏதாவது ஒரு நோய் வந்திடுச்சுனா அதை தீர்க்கிறதுக்கான முயற்சிகளில் அதுகளே ஈடுபடும். எந்த இலைகளைச் சாப்பிட்டால் எந்த நோய் தீரும்னு அந்த நாய்களுக்கு நல்லாவே தெரியும். அந்த இலைகளைப் பிடுங்கி தின்னுட்டு ,உடம்புக்குள்ளே இருக்கிற கிருமிகளை எல்லாம் வாயாலே கக்கி வெளியே கொண்டுவந்திடும். ஆனா, இந்த மனுசனுக்குத்தான் ஒண்ணும் தெரியமாட்டேங்குது.

முனியான்டி
முனியான்டி

இந்தக் கன்னி நாய்களைப் பாசத்தோடு வளர்த்தா, பிள்ளைகளை விட ஒருபடி மேலே பாசம் காட்டும். ஒரு நாய் பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு வாழும். ஒரு தடவை நான் வளர்த்த நாய்களை பொறாமை பிடிச்சுப் போய் யாரோ விஷம் வைச்சு கொன்னுட்டாங்க. அப்போ நான் பட்ட வேதனை இருக்கே... அது கொஞ்சம் நஞ்சமில்லே. புள்ளைங்க செத்தாக்கூட நான் அவ்வளவு வேதனைப்பட்டிருக்க மாட்டேன். அவ்வளவு கவலை. கண்ணீர்... துக்கம்... சோறு... தண்ணிகூட இல்லாம கெடப்பேன். நான் வளர்த்த பத்து ஆண் நாய்களும் விஷம் வைச்சதுலே செத்துப் போச்சு. அது சம்பந்தமா ஊர்ல நியாயம் கேட்டுப் பார்த்தேன். எனக்கு ஒண்ணும் தீர்வு கிடைக்கலை. சரி கடவுளே பார்த்துக்கன்னு விட்டுட்டேன்.

விஷம் வைச்சதுலே எனக்கிட்டே இருந்த ஆண் நாய்க எல்லாமே செத்துப்போச்சு. பொட்டை நாய்க மட்டும் தனியே இருந்துச்சு. அப்புறம் ஆட்டோ புடிச்சு அஞ்சு ஆறாயிரம் ரூபா செலவு செஞ்சு ஆண் நாய் வளர்க்கிற இடத்துக்கு 'தாட்டு' போடக் கொண்டுபோனேன். அப்படி ‘தாட்டுப்’ போடுறவங்களுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் பணம் கொடுத்தேன். இப்படி ரெண்டு மூணு தரம் அந்த ஆண் நாய்கள்கிட்டே தாட்டுப் போட்டுத்தான் அதிலிருந்து இந்த வர்க்கத்தை நான் மறுபடியும் உற்பத்தி பண்ணினேன். ஒரு கன்னி நாய் ஐந்திலிருந்து ஒன்பது குட்டி வரைக்கும் போடும். என்ன, பாலுக்குத்தான் சிரமம். கடைகளில் பால் வாங்கிப் போட்டுத்தான் அதுகளைக் காப்பாத்தணும். இப்படி என் வாழ்க்கை இந்த கன்னி நாய்களோட போயிட்டு இருக்கு. காட்டுக்குள்ளே கெடந்தாலும் அழிஞ்சு போயிட்டு இருக்கிற இந்தக் கன்னிநாய் வர்க்கத்தை நம்மளாலே வளர்த்துக் காப்பாத்த முடியுதே அப்படிங்கிறது எனக்குப் பெரிய பெருமை, சந்தோஷம்.

வெளிநாட்டு ரக நாய்களை வளர்க்கிறது ஒண்ணும் நமக்குப் பெருமை இல்லை. அதுனாலே எந்தப் பிரயோஜனமும் இல்லை. நம்ம மண்ணிலே பொறந்த இந்த மாதிரி நாட்டு நாய்களை வளர்க்கிறதுதான், நம்ம பாரம்பர்யத்துக்கும் மண்ணுக்கும் மிகப்பெரிய கவுரவம். இதைப் புரிஞ்சு, நாட்டு நாய்களை வீட்டிலே வளர்க்கணும்... நம்ம பாரம்பர்யத்தோட அடையாளத்தை நாமளே தொலைக்கலாமா?

நான் அண்ணன், தம்பியா, சொந்த பந்தமா, புள்ளை குட்டிகளா இந்த நாய்களை நினைச்சுத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இனிமே எனக்கு எதுக்கு கல்யாணம்? இந்த நன்றியுள்ள நம்ம பாரம்பர்ய ஜீவன்களைக் காப்பாத்தி, வளர்த்து அதுககூடவே கடைசிவரை வாழ்ந்துட்டுப் போயிடுவேன். ஒத்த நாய்க்குட்டிக்கே யாரும் கஞ்சி ஊத்தமாட்டாங்க. இந்த ஒம்பது நாய்குட்டிக்கும் யாரு கஞ்சி ஊத்துவா? அதுக்குத்தான் கல்யாணமே வேண்டாம். இதுக மட்டுமே போதும்னு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இந்த நாய்கதான் எனக்கு வாழ்க்கை" என உணர்ச்சி ததும்பச் சொல்லும் முனியாண்டியை, 'உங்களுக்குத்தான் நாங்க இருக்கோம்ல...' என்ற அர்த்தப் பார்வையுடன் அவரைச் சுற்றி பாசத்துடன் வாலாட்டிக்கொண்டு நிற்கின்றன. அவருடைய நாய்கள், இல்லை... இல்லை... அவரின் உண்மையான நிஜ உறவுகள்!

முனியாண்டி அலைப்பேசி எண் : 8098183226

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு