Election bannerElection banner
Published:Updated:

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆஸ்டெரியோனிஸ் பறவை எப்படியிருக்கும்? - மண்டை ஓடு, எலும்புகள் கண்டுபிடிப்பு!

Asteriornis Maastrichtensis
Asteriornis Maastrichtensis

தற்போது வாழ்ந்து வரும் 11,000 வகையான பறவைகளில் பேலியோக்நாத்ஸ், அன்சரிஃபார்ம்ஸ், கேலிஃபார்ம்ஸ், நியோஏவ்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பறவைகளுக்கும் முன்னோடியாக இந்தப் பறவைதான் இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகில், நமக்குமுன் பல்வேறு விதமான உயிரினங்களும் அரிய பறவையினங்களும், கடல்வாழ் உயிரினங்களும், மிகப்பெரிய உயிரினமான டைனோசர்களும் வாழ்ந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, 16 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவந்த இந்த இனங்கள் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

Dinosaur
Dinosaur

ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேயத் தொல்லுயிரியல் ஆய்வாளர், 1842-ம் ஆண்டில், தான் கண்டுபிடித்த தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள் பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவைச் சேர்ந்தவை என்றும், `டயனோசோரியா’ என்னும் ஒரு புதிய பிரிவைச் சேர்ந்தவை என்றும் கண்டறிந்து கூறினார். இவரே இந்தப் புதிய டைனோசர் என்னும் தொன்மாக்களை முதன்முதலில் வகைப்படுத்தியவர்.

Asteriornis Maastrichtensis
Asteriornis Maastrichtensis

சுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன், கிரிட்டாசியஸ்-பேலியோஜீன் பேரழிவு (Cretaceous-Paleogene extinction) நிகழ்ந்தது. இதை K-Pg extinction என்றும் அழைப்பர். இதில் அப்போதைய உலகின் 75 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்துபோயின. இந்த அழிவுதான் டைனோசர்களின் ஆதிக்கத்துக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்த `ஆஸ்டெரியோனிஸ் மாஸ்ட்ரிக்டென்சிஸ்’ (Asteriornis Maastrichtensis) என்னும் பறவை வகை உயிரினத்தின் புதைப்படிவங்களான, முழு மண்டை ஓடு மற்றும் மூட்டு எலும்புகள், தற்போது பெல்ஜியம் சுண்ணாம்பு குவாரியில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பறவையின் மண்டை ஓடு 1 செ.மீட்டர் நீளத்தில் வாத்து மற்றும் கோழிகளின் மண்டை ஓட்டைப்போல இருப்பதாக யுனிவர்சிட்டி ஆஃப் கேம்பிரிட்ஜை சேர்ந்த வெர்டப்ரேட் பேலியன்டாலஜிஸ்ட், டேனியல் ஃபீல்டு கூறுகிறார்.

Asteriornis Maastrichtensis
Asteriornis Maastrichtensis

அதேபோல், தற்போது வாழ்ந்துவரும் 11,000 வகையான பறவைகளில் பேலியோக்நாத்ஸ், அன்சரிஃபார்ம்ஸ், கேலிஃபார்ம்ஸ், நியோஏவ்ஸ் உள்ளிட்ட எல்லா வகை பறவைகளுக்கும் முன்னோடியாகவும் தொடக்கப்புள்ளியாகவும், இந்தப் பறவைதான் இருந்திருக்கும் எனவும் ஃபீல்டு கூறுகிறார்.

இப்போது கிடைத்துள்ள புதிய புதைப்படிவம் பெல்ஜியத்தில் ஒரு சிறிய கல்லில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கல்லானது பார்ப்பதற்கு ஒரு சாதாரண கல் போலவே இருந்தது. ஆனால், அதிலிருந்து பறவையின் மூட்டு எலும்பு பகுதிகள் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்க, X-ray ஸ்கேன் மூலம் அந்தக் கல்லைச் சோதனையிட்டபோது, அதில் பறவையின் மண்டை ஓடு இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். மேலும், இதற்கு `வொன்டர் சிக்கன்’ எனவும் பெயரிட்டுள்ளனர். மேலும், கரையோரம் வசித்த பறவை இனமாக இது இருந்திருக்கலாம் எனக் கருதும் விஞ்ஞானிகள், இந்தப் பறவை 400 கிராமுக்கும் குறைவான எடையிலேயே இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Asteriornis Maastrichtensis
Asteriornis Maastrichtensis

இதற்கு முன் அழிந்த உயிரினங்களில் `ட்ரியாசிக்’ என்ற வகை டைனோசர் 250 - 200 கோடி ஆண்டுகள் முந்தையதாகக் கூறப்படுகிறது. ’ஜுராசிக்’ என்ற வகை 200 - 150 கோடி ஆண்டுகளுக்கும், `ஆர்கியோப்டெரிக்ஸ்’ என்ற உயிரினம், 15 கோடி ஆண்டுகளுக்கும் முன்பாக இருந்துள்ளன. டைனோசர் மற்றும் பறவை இனங்களுக்கு இடைப்பட்ட விலங்காக இது இருக்கலாம் எனக் கணிக்கப்படுகின்றது. அதேபோல், `க்ரெடோசியஸ்’ 150 - 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகவும், தற்போது கண்டறியப்பட்டுள்ள ஆஸ்டெரியோனிஸ் மாஸ்ட்ரிக்டென்சிஸ் பறவை 66.8 - 66.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் கூறப்படுகிறது.

டைனோசர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கும் பல காரணங்கள் இருக்கிறது. அவற்றின் வாழ்வாதாரமாக எது அமைந்ததோ அதுவே அக்காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

எது அவர்களின் பல்லுயிர்த் தன்மைக்கு வழிவகுத்ததோ, எது அந்த பூதாகரப் பல்லிகளின் பிரமாண்டமான வளர்ச்சிக்கு உதவியதோ, எது பிரமாண்டமான நீர் வாழ் டைனோசர்களுக்கு அடைக்கலம் தந்ததோ... அதே தட்பவெப்பநிலை அவற்றின் அழிவுக்கும் ஒரு காரணமாக, எமனாக வந்து நின்றது. இதுதான் இயற்கையின் நியதி. அதீதம் என்றும் ஆபத்தே.

`இது காட்டுத்தீ செதுக்கிய பூமி!' ஒரு டைனோசர் கால கதை
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு