Published:Updated:

குற்றாலத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை! - வனத்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை

குற்றாலம் மெயின் அருவிக்கு அருகில் கேரள அரசுக்குச் சொந்தமான வளாகத்தின் உள்ளே சிறுத்தை நுழைந்ததாகப் பரவிய தகவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறுத்தை
சிறுத்தை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. மலையடிவாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் நுழைவதும் அவற்றை வனத்துறையினரின் உதவியுடன் மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. 

`மக்களை அச்சுறுத்தி வந்தது!' - கூண்டுக்குள் இருந்த ஆட்டை சாப்பிடப் பாய்ந்த சிறுத்தை சிக்கியது!

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள குற்றாலம் அருவிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்தப் பகுதிக்கு இதுவரை அச்சுறுத்தும் வனவிலங்குகள் வந்தது கிடையாது. ஆனால், நேற்று இரவு (3-12-2019) குற்றாலத்தில் உள்ள கேரள பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான திருவாங்கூர் பேலஸ் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பார்க்கும்போதே சிறுத்தை அந்த வளாகத்தின் உள்ளே நுழைந்திருக்கிறது. அங்குள்ள காடுகளுக்குள் புகுந்த சிறுத்தை குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். வனவர் பாண்டியராஜன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற 10-க்கும் அதிகமான வனத்துறையினர் திருவாங்கூர் பேலஸ் உள்ளே நுழைந்து சோதனையிட்டனர். 

சிறுத்தையைத் தேடும் வனத்துறையினர்
சிறுத்தையைத் தேடும் வனத்துறையினர்

அப்போது அந்தப் பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் புதருக்குள் சிறுத்தை பதுங்கிக்கொண்டதால், அதன் இருப்பிடத்தை வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மயக்க ஊசியுடன் கூடிய துப்பாக்கியுடன் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் அடுத்தகட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.