Published:Updated:

முதுகில் குட்டியுடன் உணவு தேடியலைந்த கரடி! - குன்னூர் அருகே கல்லால் விரட்டியடிக்கப்பட்ட சோகம்

sloth bear
sloth bear

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள கரிமரா ஹட்டி பகுதியில் குட்டியுடன் உணவு தேடி வந்த கரடியை கிராம மக்கள் சிலர் கல்லால் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளில் கரடியும் ஒன்று. குடியிருப்புப் பகுதிகளில் முறையாக அகற்றப்படாத காய்கறி, பழக்கழிவுகள் மற்றும் உணவுக்கழிவுகளால் கவரப்படும் கரடிகள் இவற்றை உண்பதற்காக ஊருக்குள் வருகின்றன. வனம் மற்றும் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் கரடிகளின் நடமாட்டம் சாதாரணமாகக் காணப்படுகின்றன.

sloth bear
sloth bear

இந்தநிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள கரிமரா ஹட்டி பகுதி தேயிலை தோட்டத்திலிருந்து கரடி ஒன்று தனது குட்டியை முதுகில் சுமந்தவாறு சாலையைக் கடக்க முயன்றது. அந்தச் சாலையில் வாகனத்தில் வந்த சிலர் அந்தக் கரடியை கற்களைக் கொண்டு தாக்கி விரட்டியுள்ளனர்.

மேலும் குட்டியை முதுகில் சுமந்தவாறு சென்ற கரடி அலறியடித்து ஓடியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காட்டுயிர் ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்தது. இந்த விவகாரம் வனத்துறையினருக்கும் சென்றது.

இது வனத்துறையினர் பேசுகையில், ``நீலகிரியில் வன விலங்குகளுக்கு எதிராக நடக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்க முடியாது. அதே சமயம் மக்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறோம். ஊழியர்களை அனுப்பி கரடியைத் தாக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும், இந்தப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு தேயிலை பறிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்" என்றனர்.

sloth bear
sloth bear

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ``அருகில் உள்ள பகுதிகளில் சிலர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனை அருந்துவதற்காகக் கரடிகள் இந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி வருகின்றன" என்றனர்.

மக்களைத் தாக்குவது போன்ற எந்த இடையூறும் செய்யாமல் பயந்து ஓடும் கரடியைத் தாக்குவது மோசமான செயல் எனக் காட்டுயிர் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு