Published:Updated:

``தெருநாய்களுக்கு உணவளிக்கச் செல்வோரை தடுக்கக் கூடாது!" - சென்னை மாநகராட்சி ஆணையர்

நாய்கள்
நாய்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர்ப்புறங்களில் உள்ள தெருநாய்கள், மாடுகள், ஆடுகள் ஆகியவற்றுக்கு உணவளிக்க அனுமதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

ஆதவற்ற, கைவிடப்பட்ட நாய்கள், பூனைகள், மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு உணவு அளிப்போருக்கு கடந்த ஆண்டு ஊரடங்கின்போது தடை இருந்ததால், அத்தகைய விலங்குகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதனால், இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர்ப்புறங்களில் உள்ள தெருநாய்கள், மாடுகள், ஆடுகள் ஆகியவற்றுக்கு உணவளிக்க அனுமதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

தீபக் நம்பியார்
தீபக் நம்பியார்

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் தீபக் நம்பியார் பேசியபோது, ``சென்ற ஆண்டு ஊரடங்கின்போது தெருநாய்களுக்கு உணவளிப்போர், அந்த நாய்களுக்கு அடிபட்டால் அதைக் கொண்டு சென்று மருத்துவம் அளிப்போர் ஆகியோருக்கு தடை இருந்தது. இதனால், நகர்ப்புறங்களில் உள்ள நாய்கள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த ஊரடங்கின்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், பழையபடி தெருநாய்களுக்கு உணவளிப்போர், அவற்றுக்கு மருத்துவர் செய்வோர்களைத் தடை செய்யக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் மட்டுமே ஏறத்தாழ 8,000 பேர் இதுபோன்று விலங்குகள் நல பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை பணி செய்ய விடாமல் காவல்துறை தடுக்கக் கூடாது. அவர்களுக்கு பாஸ் வழங்க வேண்டும். அதேபோன்று வீடுகளில் உள்ளோர் அருகாமையிலுள்ள தெருநாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவளிக்க அனுமதிக்க வேண்டும்.

ஒடிசா மாநிலத்தில் கொரோனா நிவாரண நிதியிலிருந்து ஆதரவற்ற விலங்குகளை காப்பதற்கென்றே ரூ.60 லட்சம் ஒதுக்கியிருக்கிறது அம்மாநில அரசு. அதேபோன்று தமிழக அரசும் ஒரு தொகையை ஒதுக்கி ஊரடங்கினால் பாதிக்கப்படும் விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும். அவற்றுக்குத் தேவையான உணவு, மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசியபோது, ``தெருநாய்கள் போன்ற கால்நடை களுக்கு உணவு அளிக்க செல்வோரை தடை செய்யக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி ஊரடங்கின்போது அரசு அறிவித்திருந்த நடைமுறையே இப்போதும் தொடர்கிறது. இதையும் மீறி கால்நடைகளுக்கு உணவளிக்க செல்வோரை தடை செய்தால் மாநகராட்சியின் கவனத்துக்குக் கொண்டு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் உணவளிக்க செல்வோருக்குத் தனியே பாஸ் வழங்குவது சாத்தியமில்லை" என்றார்.


சென்னை மாநகராட்சியின் உதவி அழைப்பு மைய தொடர்பு எண்: 1913

அடுத்த கட்டுரைக்கு