Published:Updated:

வைக்கோலுக்குள் வித்தியாசமான சத்தம்... கூர்ந்துப் பார்த்தால் மலைப்பாம்பு... 31 முட்டைகளைப் பார்த்து பதறிய பெண்

இ.கார்த்திகேயன்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தில் வைக்கோல் போருக்குள், 31 முட்டைகளுடன் அடைகாத்த 8 அடிநீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

முட்டைகளுடன் பிடிபட்ட மலைப்பாம்பு
முட்டைகளுடன் பிடிபட்ட மலைப்பாம்பு

முத்தாலங்குறிச்சி கிராமம், பிள்ளையார் கோயிலைச் சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவர் பசு மாடுகள் வளர்த்துவருகிறார். இவருக்குச் சொந்தமான வைக்கோல் போர் சிவன் கோயில் அருகில் உள்ளது. இன்று மாலை வைக்கோல் போரில் மாட்டுக்கு வைக்கோல் சேகரிக்கச் சென்றபோது வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. அப்போது, அவர் கூர்ந்து பார்த்தபோது அங்கு மலைப்பாம்பு ஒன்று அடை காத்துக்கொண்டிருந்தது.

பத்திரமாக மீட்கப்பட்ட  மலைப்பாம்பு முட்டைகள்
பத்திரமாக மீட்கப்பட்ட மலைப்பாம்பு முட்டைகள்

இதைக்கண்டு பயந்த சுப்புலெட்சுமி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் வனத்துறைக்குத் தகவல் கூறினர். ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் விமல் குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் வைக்கோல் போருக்கு வந்தனர். பாம்பு முட்டையுடன் அடைகாத்துக் கொண்டிருந்ததால், முட்டை உடையாமலும் பாம்புக்கு பாதிப்பு ஏற்படாமலும் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், பாம்பை பத்திரமாக மீட்க, பாம்பு ஆர்வலர் ரமேஷ் என்பவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து ரமேஷ், பாம்பை லாவகமாகப் பிடித்து சாக்கு மூட்டைக்குள் அடைத்தார். மற்றொரு சாக்குமூட்டையில் வைக்கோல் நிரப்பப்பட்டு அதில், முட்டைகள் பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டன. தொடர்ந்து, நெல்லை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாடு வெளிமான்கள் சரணாலய, மலைப்பகுதியில் உள்ள வாக்கி டாக்கி டவர் அருகில் அமைக்கப்பட்டுள்ள பாம்புகள் அடைகாக்கும் பகுதியில் பாம்பும், முட்டைகளும் பத்திரமாகக் கொண்டுசேர்க்கப்பட்டது.

வைக்கோல் போர்
வைக்கோல் போர்

8 அடி நீளமுள்ள இந்த மலைப்பாம்பு அடைகாத்த இடத்தில் 31 முட்டைகள் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். செய்துங்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு அதிகம் நிறைந்துள்ள பகுதி என்பதால், மலைப்பாம்புகள் சிக்குவது வழக்கமானதாக இருந்துவந்தது. ஆனால், முதல் முதலாக முட்டைகளுடன் அடைகாக்கும் மலைப்பாம்பு கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.