Published:Updated:

ரேபிஸ்: வருமுன் தடுக்கலாம்... `உலக வெறிநாய்க்கடி நோய் தின' சிறப்புக் கட்டுரை!

ரேபிஸ் நோய்த் தடுப்பு |தடுப்பூசி முகாம்.

வெறிநாய்க்கடியால் வரும் `ரேபிஸ்' `குணப்படுத்தவே முடியாது; நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்' என்ற நிலை உலகம் முழுவதும் உள்ளது. ஆனால், வராமல் தடுக்க முடியும்.

ரேபிஸ்: வருமுன் தடுக்கலாம்... `உலக வெறிநாய்க்கடி நோய் தின' சிறப்புக் கட்டுரை!

வெறிநாய்க்கடியால் வரும் `ரேபிஸ்' `குணப்படுத்தவே முடியாது; நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்' என்ற நிலை உலகம் முழுவதும் உள்ளது. ஆனால், வராமல் தடுக்க முடியும்.

Published:Updated:
ரேபிஸ் நோய்த் தடுப்பு |தடுப்பூசி முகாம்.

சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளை அதிகம் வளர்த்து வருவதால், பள்ளத்தூரில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் இந்த ஆண்டு நாளை `ரேபிஸ் தினம்' விழிப்புணர்வை கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் தலைவர் செந்தூர்குமரன் மற்றும் உதவிப் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் பேசினோம். அவர்கள் தெரிவித்த தகவல்களை இங்கே பார்ப்போம்...

``வெறிநாய்க்கடி நோயை பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்த்தவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் `உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது.

ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28. இவரின் நினைவாக, 2007 - ம் ஆண்டில் இருந்து சர்வதேச ரேபிஸ் விழிப்பு உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.

வெறிநாய்க்கடியால் வரும் 'ரேபிஸ்' 'குணப்படுத்தவே முடியாது; நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்' என்ற நிலை உலகம் முழுவதும் உள்ளது. ஆனால் வராமல் தடுக்க முடியும்.

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் மாணவிகளின் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

பேராசிரியர் செந்தூர்குமரன்
பேராசிரியர் செந்தூர்குமரன்

எல்லா நாய்களும் கடித்தால் ரேபிஸ் வரும் என்று கூறவில்லை.. ஆனால் ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்ற பாலுாட்டி விலங்குகள் மனிதனைக் கடிப்பதன் மூலம், நேரடியாக மனிதனுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில், பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே "ரேபிஸ் நோய்" மனிதனுக்குப் பரவுகிறது. இது நரம்புமண்டலத்தைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

ஏன் 'வெறிநாய்க்கடி நோய்' என்று சொல்ல வேண்டும்..

மேலே சொன்ன ரேபிஸ் பாதிக்கப்பட்ட எந்த விலங்குகள் கடித்தாலும் இந்த நோய் வரும் என்றாலும், நடைமுறையில் 95% நாய்க்கடியால் தான் இந்த நோய் வருகிறது. ஏனென்றால் மனிதனின் அன்றாட வாழ்வில் அதிகம் பழக்கம் தொடர்பு உள்ள விலங்கு நாய்தான். குறிப்பாக தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95% இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை 'வெறிநாய்க்கடி நோய்' என்கிறோம்.

குழந்தைகள் நாய்க்கடிக்கு உள்ளாகும்போது, தொற்று ஆபத்து அவர்களை அதிகமாகவே பாதிக்கிறது. இந்த நோயால் பத்து பேர் இறந்தால் அதில் நான்கு பேர் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருக்கின்றனர்.

ரேபிஸ் நோய் தடுப்பு
ரேபிஸ் நோய் தடுப்பு

லிஸ்ஸா வைரசால் உண்டாவதே வெறிநாய்க்கடி நோய். காயம், கீறல் அல்லது பாதிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் சளிச்சவ்வுப் பரப்போடு நிகழும் கடி, பிராண்டுதல் போன்ற தொடர்பால் இந்த வைரஸ் விலங்கில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. மனித உடலின் காயம் இல்லாத பகுதியின் வழியாக இந்த வைரஸ் பரவ முடியாது. மனிதத் தோல் அல்லது சதைப் பகுதியை அடைந்த வைரஸ், தண்டு வடத்திற்கும் மூளைக்கும் முன்னேறுகிறது. வைரஸ் மூளையை எட்டியவுடன் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் அறிகுறிகள் தோன்றுகின்றன.

அறிகுறிகள்

ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு அதிக காய்ச்சல், கடும் தலைவலி மற்றும் பதற்றம் காணப்படும். மார்பு மற்றும் தொண்டைப் பகுதியில் காணப்படும் தசைகளில் நடுக்கங்கள் காணப்படும். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு ஹைட்ரோஃபோபியா எனப்படும் நீரைக் கண்டு அஞ்சுதல், நீரைக் கண்டால் வெறுக்கும் தன்மை தோன்றும். பிரகாசமான ஒளி அல்லது சத்தத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை, சித்தப்பிரமை, நடத்தை மாற்றம், மன அழுத்தம், கவனச்சிதறல், உடல் உறுப்புகள் செயல் இழப்பு மற்றும் அளவுக்கு அதிகமான எச்சில் சுரத்தல் போன்றவை ரேபிஸ் நோயின் முக்கியமான அறிகுறிகள் ஆகும்.

மேற்கண்ட அறிகுறிகள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்ட மூன்றாவது வாரத்தில் இருந்து எட்டாவது வாரத்துக்குள் தெரியவரும். சிலருக்கு இதன் காலங்களில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகள் நம்மைக் கடித்த 48 மணி நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட பின் சரியான முதலுதவியும் சிகிச்சையும் எடுக்கவில்லை என்றால் இறப்பு நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேபிஸ் நோய் தடுப்பு
ரேபிஸ் நோய் தடுப்பு

என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அவற்றிற்கு கால்நடை மருத்துவரிடம் அழைத்து சென்று கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.

செல்லப்பிராணிக்குத் தடுப்பூசி இடாத நிலையில் அது கடித்தாலோ, அல்லது நகத்தால் பிராண்டினாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தெரு நாயோ, வளர்ப்பு நாயோ, மேற்சொன்ன விலங்குகளோ கடித்துவிட்டால், காயத்தைப் 10-15 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரைப் பீய்ச்சிக் கழுவ வேண்டும். 70% ஆல்கஹால்/எத்தனால் அல்லது பொவிடோன் – ஐயோடின் பயன்படுத்தியும் காயத்தைக் கழுவலாம். கூடிய விரைவில் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அவரது ஆலோசனைப்படி தடுப்பூசி போட வேண்டும்.

விலங்கு கடித்தால், ஒரு கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்ணுக்கும் தடுப்பூசி இடலாம், வளரும் கருவை தடுப்பு மருந்து பாதிப்பதில்லை. எனவே கர்ப்பிணிக்கும் பாலூட்டும் தாய்க்கும் தடுப்பூசி இடுவது பாதுகாப்பானதே. வருமுன் காப்பதே மேலானது. வளர்ப்பு நாய்க்குத் தடுப்பூசி இடுவது நாய்க்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.

வெறிநாய்க்கடி நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வெறிநாய்க்கடி நோய் உயிருக்கு உயிருக்கு ஆபத்தானது என்றாலும் தடுப்பூசியால் 100% தடுக்க முடியும். வெறிநாய்க்கடி நோயைப் பற்றிய விழிப்புணர்வைக் குறிப்பாகக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். தெருநாய்களிடம் தேவையற்றத் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். தெரு நாய்கள் மற்றும் வீட்டு நாய்களுக்கு தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்.

ரேபிஸ் நோய் தடுப்பு
ரேபிஸ் நோய் தடுப்பு

விலங்கு கடித்து விட்டால் தடுப்பூசி இட உடனடியாக ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளுடன் கவனமாகப் பழக வேண்டும். அதன் செயல்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இறந்த விலங்குகளில் இருந்தும் ரேபிஸ் பரவலாம் என்பதால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். வீட்டு விலங்குகளுக்கு உரிய காலத்தில் ரேபிஸ் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.

வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களோடு தொடர்பு ஏற்படக்கூடிய நாய் பிடிப்பவர்களும், மருத்துவப் பணியாளர்களும், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் நேரத்தை அதிகமாகச் செலவிடும் பயணிகளும் தடுப்பூசி இட்டுக் கொள்ள வேண்டும்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவோம். இந்த உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தில், ஒன்றுபட்டு இந்த உயிர்க்கொல்லி நோயை ஒழிக்கப் பாடுபடுவோம். அதற்காகத் தான் இந்த மாதிரி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம்'' என்று தெரிவித்தனர்.

அதெல்லாம் சரி.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தற்போதைய நிலையில் பெருகிவரும் தெருநாயை கட்டுப்படுத்த அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களை பாதிப்பில் இருந்து காக்க முடியும் என்பதே உண்மை.